யெமனுக்கு எதிரான இரண்டாவது பிஃபா நட்புறவு கால்பந்து போட்டியில் இலங்கை 0–2 என்ற கோல் கணக்கில் தோல்வியை சந்தித்தது.
கட்டாரில் நேற்று முன்தினம் (19) நடைபெற்ற போட்டியில் இளம் விரர் ஷெனால் சந்தேஷ் உட்பட இலங்கை அணி நான்கு மாற்றங்களுடன் களமிறங்கியது. ஆரம்ப அணியில் இடம்பெற்ற ஆதவன் ராஜமோகன் உபாதை ஒன்றுக்கு உள்ளான நிலையில், பயிற்சியாளர் அப்துல்லா அல் முதைரி கடைசி நேரத்தில் லியோன் பெரேராவை களமிறக்கினார். இலங்கை அணி 4-2-3-1 என்ற வரிசை அடிப்படையிலேயே இந்தப் போட்டியில் களமிறங்கியது.
முதல் 17 நிமிடங்களில் யெமனுக்கு அழுத்தம் கொடுக்க இலங்கை வீரர்களால் முடிந்தது. எவ்வாறாயினும் யெமனின் 7 ஆம் இலக்க வீரர் ஹம்ஸா கோல் ஒன்றை புகுத்தியபோது அது ஓப் சைட் என நிராகரிக்கப்பட்டது.
இலங்கையின் அதிர்ஷ்டம் நீண்ட நேரம் இருக்கவில்லை. 20ஆவது நிமிடத்தில் ஹம்ஸா திறந்த வலையில் பந்தை இலகுவாக தட்டி யெமனுக்கு முதல் கோலைப் பெற்றுக்கொடுத்தார்.
நான்கு நிமிடங்கள் கழித்து டிலோன் டி சில்வா பந்தை எதிரணி கோல் கம்பத்திற்கு நெருக்கமாக எடுத்துச் சென்றபோதும், அதனை கோலாக மாற்றத் தவறினார். யெமன் கோல்காப்பாளர் முஹமது அமான் அபாரமாக அதனைத் தடுத்தமை குறிப்பிடத்தக்கது.
35 ஆவது நிமிடத்தில் இலங்கைக்கு பதில் கோல் திருப்ப பொன்னான வாய்ப்பு ஒன்று கிடைத்தது. யெமன் வீரரின் கையில் பந்து பட்ட நிலையில் இலங்கைக்கு பெனால்டி வாய்ப்புக் கிடைத்தது. எனினும் அந்த வாய்ப்பைப் பெற்ற ஜக் ஹின்கார்ட் உதைத்த பந்து கம்பத்திற்கு வெளியே சென்றது.
இதனால் முதல் பாதி ஆட்டத்தில் யெமன் அணியால் 1–0 என முன்னிலை பெற முடிந்தது. இரண்டாவது பாதியிலும் யெமனின் கை ஒங்கியது. முதல் கோலை புகுத்தி ஹம்சா இலங்கை கோல் கம்பத்தை ஆக்கிரமித்தபோது, இலங்கை கோல் காப்பாளர் சுஜான் பெரேரா விலகி இருந்த நிலையில் உதைத்த பந்து வலைக்குள் பட்டும்படாமலும் சென்றது.
எவ்வாறாயினும் மேலதிக நேரத்தில் பதில் வீரர் அலி நாசர் பந்தை எடுத்து வந்து கோலை நோக்கி உதைத்தபோது சுஜான் பெரேரா பாய்ந்து தடுக்க முயன்றாலும் அது கோலாக மாறியது.
எனினும் இலங்கை அணி யெமனுக்கு எதிரான முதலாவது நட்புறவுப் போட்டியில் 1–0 என்ற கோல் கணக்கில் வென்ற நிலையில் இரண்டு போட்டிகளைக் கொண்ட நட்புறவுத் தொடர் 1–1 என சமநிலை பெற்றது.