பாகிஸ்தான் ஏ அணிக்கு எதிரான இரண்டாவது உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் இரண்டாவது இன்னிங்ஸை துடுப்பெடுத்தாடும் இலங்கை ஏ அணி 180 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளது.
ராவல்பிண்டியில் நடைபெற்று வரும் இந்த நான்கு நாள் போட்டியில் நேற்று முதல் இன்னிங்ஸை தொடர்ந்த பாகிஸ்தான் ஏ அணியை 287 ஓட்டங்களுக்கு மட்டுப்படுத்த இலங்கையால் முடிந்தது. இதன்போது 212 ஓட்டங்களுக்கு 5 விக்கெட்டுகளை இழந்த நிலையிலேயே பாகிஸ்தான் ஏ நேற்று தனது ஆட்டத்தை ஆரம்பித்தது.
எனினும் மேலும் 75 ஓட்டங்களுக்கு எஞ்சிய ஐந்து விக்கெட்டுகளையும் இலங்கை ஏ அணி சாய்த்தது. சிறப்பாக பந்துவீசிய வனுஜ சஹன் 5 விக்கெட்டுகளை பதம்பார்த்தார்.
பாகிஸ்தான் ஏ அணி முதல் இன்னிங்ஸில் 98 ஓவர்களிலேயே 287 ஓட்டங்களுக்கு சகல விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது. ஆரம்ப வீரர் அப்துல் பாசி அதிகபட்சமாக 59 ஓட்டங்களைப் பெற்றார்.
இந்த உத்தியோகபூர்வமற்ற டெஸ்ட் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை ஏ அணி முதல் இன்னிங்ஸுக்கு 310 ஓட்டங்களைப் பெற்றது. இதன்மூலம் 23 ஓட்டங்களால் முதல் இன்னிங்ஸில் முன்னிலை பெற்றே நேற்று தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆரம்பித்தது.
எனினும் ஆரம்ப வீரர்களான புலின்து பெரேரா (5) மற்றும் நிபுன் தனஞ்சய (6) ஒற்றை இலக்கத்துடன் வெளியேறியதோடு தொடர்ந்து அஹன் விக்ரமசிங்க (15) மற்றும் அணித் தலைவர் பசிந்து சூரியபண்டார (11) ஆகியோரும் நின்றுபிடித்து ஆடத் தவறினர்.
இதனால் இலங்கை ஏ அணி 46 ஓட்டங்களுக்கு முதல் 4 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தனர்.
எவ்வாறாயினும் 5ஆவது விக்கெட்டுக்கு ஜோடி சேர்ந்த பவன் ரத்னாயக்க (ஆட்டமிழக்காது 64) மற்றும் சொனால் தினுஷ (ஆட்டமிழக்காது 51) நேற்று ஆட்ட நேரம் முடியும் வரை களத்தில் இருந்து இலங்கை ஏ அணியின் ஓட்டங்களை அதிகரிக்க உதவினர்.
இதன்மூலம் மூன்றாம் நாள் ஆட்ட நேர முடிவின்போது தனது இரண்டாவது இன்னிங்ஸை ஆடும் இலங்கை ஏ அணி 45.2 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 157 ஓட்டங்களை பெற்றுள்ளது. இலங்கை ஏ அணி 6 விக்கெட்டுகள் கைவசம் இருக்க 180 ஓட்டங்களால் முன்னிலை பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இன்று போட்டியின் கடைசி நாளாகும்.