வூதி அரேபியாவின் நிவாரணம் மற்றும் மனித நேயப் பணிகளுக்கான மன்னர் சல்மான் மையத்தினால் இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் ஏற்பாட்டில் நடைபெற்ற இலவச கண்புரை (Cataract) சத்திர சிகிச்சை முகாம் இம்மாதம் 04ஆம் திகதி முதல் 17 ஆம் திகதி வரை ஹம்பாந்தோட்டை, வலஸ்முள்ள ஆதார வைத்தியசாலையிலும் மட்டக்களப்பு, காத்தான்குடி ஆதார வைத்தியசாலையிலும் வெற்றிகரமாக நடைபெற்று முடிந்தது.
அந்தவகையில், கண்புரை நோயினால் பாதிக்கப்பட்ட நோயாளர்களை இனங்காணும் முதற்கட்ட வைத்திய பரிசோதனை முகாம்கள் பாகிஸ்தான் நாட்டின் வைத்தியர்களினால் கடந்த 29 ஆம் திகதி முதல் 03 ஆம் திகதி வரை கொழும்பு, குருநாகல், மட்டக்களப்பு, அம்பாறை, ஹம்பந்தோட்டை, மற்றும் மாத்தறை மாவட்டங்களிலுள்ள தெரிவு செய்யப்பட்ட சில பிரதேசங்களை மையமாக கொண்டு நடைபெற்றது. இதில் 3000க்கும் மேற்பட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.
சுகாதார அமைச்சின் உரிய அனுமதிகளுடன் நடைமுறைப்படுத்தப்படும் இத்திட்டத்தின் மூலம் இதுவரை நடைபெற்ற முகாம்களின் ஊடாக நாடளாவிய ரீதியிலிருந்தும் சகல இனங்களையும் சேர்ந்த 30,000 க்கும் அதிகமான நோயாளர்கள்
இதுவரை சிகிச்சை பெற்றுள்ளதுடன், இம்முறை நடைபெற்ற சிகிச்சை முகாமின் மூலம் கிட்டத்தட்ட 1000 நோயாளர்களுக்கு சத்திர சிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
அத்துடன், இலங்கைக்கான சவூதி அரேபிய தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானியின் வழிகாட்டலின் கீழ் நடைமுறைப்படுத்தப்பட்ட இத்திட்டம் இலங்கை மக்களுக்கான மிகச்சிறந்த மனிதநேயப் பணிகளில் ஒன்றாகும். சவூதி அரேபிய அரசு உலகளாவிய மட்டத்தில் பல்வேறு மனிதாபிமான பணிகளை மேற்கொண்டு வருகின்றது.
அந்தவகையில் குறிப்பாக எமது நாட்டிலும் சுனாமி பேரலையின் பின்னால் பல கோடி ரூபாய் செலவில் பல்வேறு திட்டங்களை மேற்கொண்டதையும் இவ்வேளை நன்றியுணர்வுடன் ஞாபகப்படுத்துகின்றோம்.
அத்துடன், சவூதி அரேபிய அரசாங்கமானது இலங்கையில் பல ஆண்டுகளாக கல்வி, சுகாதாரம், நீர், மின், போக்குவரத்து, பொருளாதாரம் போன்ற துறைகளில் காத்திரமான பங்களிப்புகளை வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கதாகும்.
சிகிச்சை பெற்ற ஆயிரத்துக்கும் மேற்பட்ட நோயாளர்கள் தங்களது நன்றிகளை சவூதி அரசுக்கு வெளிப்படுத்தினர். நாமும் மன்னர் சல்மான் பின் அப்துல் அஸீஸ் முடிக்குரிய இளவரசர் முகம்மது பின் சல்மான் மற்றும் இலங்கைக்கான தூதுவர் காலித் பின் ஹமூத் அல் கஹ்தானி, இலங்கையின் சுகாதார அமைச்சின் பணிப்பாளர் உட்பட ஒத்துழைப்பு நல்கிய சகலருக்கும் நன்றிகளை தெரிவித்துக் கொள்வதில் மகிழ்ச்சி அடைகின்றோம் என இலங்கை முஸ்லிம் வாலிபர் ஒன்றியத்தின் முகாமைத்துவப் பணிப்பாளர் மௌலவி அஷ்ஷெய்க் எம்.எஸ். எம். தாஸீம் தெரிவித்துள்ளார்.
விசேட அம்சமாக இம்முறை அம்பாந்தோட்டை, வலஸ்முள்ள ஆதார வைத்தியசாலையில் நடைபெற்ற முகாமுக்கு தூதுவர் நேரடியாக விஜயம் மேற்கொண்டு முகாமுடன் தொடர்புடைய நடவடிக்கைகளை மேற்பார்வை செய்ததுடன், வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகர் வைத்தியர் எம். ஐ. சிராஜ் தலைமையில் ஏற்பாடு செய்யப்பட்டிருந்த விசேட நிகழ்விலும் கலந்து கொண்டு விசேட உரையொன்றை நிகழ்த்தியிருந்தார். அந்த வகையில், தூதுவரின் வருகை சகல இன மக்களினதும் பலத்த வரவேற்பை பெற்றதுடன் அவரது உரை பலரது கவனத்தையும் ஈர்த்துள்ளமை விசேட அம்சமாகும்.