பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு இன்று காலை 10.00 மணிக்கு வைபவ ரீதியாக இடம்பெறுகிறது. காலை 10.00 மணிக்கு பாராளுமன்றம் வைபவ ரீதியாகக் கூடியதோடு சபாநாயகர், பிரதி சபாநாயகர், குழுக்களின் பிரதித் தலைவர் பதவிகளுக்கு தெரிவுகள் இடம்பெறும். அதனைத் தொடர்ந்து ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைத்து விஷேட உரையை நிகழ்த்த உள்ளார். அதற்கான அனைத்து ஏற்பாடுகளும் பாராளுமன்றத்தினால் மேற்கொள்ளப்பட்டுள்ளன.
பாராளுமன்றத்தின் பத்தாவது தொடக்க அமர்வின் நிமித்தம் கடந்த பொதுத் தேர்தலில் மக்கள் பிரதிநிதிகளாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள அனைத்து பாராளுமன்ற உறுப்பினர்களுக்கும் அழைப்பு விடுக்கப்பட்டுள்ளன.
நடந்து முடிந்த பாராளுமன்றத் தேர்தலில் 159 ஆசனங்களைப் பெற்று தேசிய மக்கள் சக்தி ஆட்சியமைத்து இருக்கிறது. இக்கட்சி ஆட்சியமைத்ததைத் தொடர்ந்து நடைபெறும் முதலாவது பாராளுமன்ற அமர்வே இது.
225 பாராளுமன்ற ஆசனங்களுக்காக நடந்து முடிந்த பொதுத் தேர்தலில் 159 ஆசனங்களை தேசிய மக்கள் சக்தி பெற்றுக் கொண்டமையானது வரலாற்று முக்கியத்துவம் மிக்க வெற்றியாகும். விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் கடந்த காலத்தில் இடம்பெற்றுள்ள எந்தவொரு பாராளுமன்றத் தேர்தலிலும் இத்தகைய வெற்றியை எந்தவொரு கட்சியும் பெற்றுக் கொள்ளவில்லை.
விகிதாசாரத் தேர்தல் முறைமை நாட்டுக்கு அறிமுகமான பின்னர் இந்நாடு இற்றை வரையும் பத்து பாராளுமன்றத் தேர்தல்களைச் சந்தித்துள்ளது. அவற்றில் கடந்த ஒன்பது தேர்தல்களிலும் இந்நாட்டை மாறிமாறி ஆட்சி செய்து வந்த ஐக்கிய தேசிய கட்சியும், ஶ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியும் அக்கட்சிகளின் தலைமையிலான கூட்டணிகளும் மாறிமாறி வெற்றி பெற்று ஆட்சி அமைத்துள்ளன. ஆன போதிலும் அந்தக் கட்சிகளால் கூட இத்தகைய வெற்றியை ஒரு போதும் அடைய முடியவில்லை. அதனால் விகிதாசாரத் தேர்தல் முறைமையின் கீழ் மூன்றில் இரண்டு பெரும்பான்மை ஆசனங்களை எந்தவொரு கட்சியாலும் வெற்றி பெற முடியாது என்ற பார்வை தோற்றுவிக்கப்பட்டிருந்தது.
ஆனால் அத்தகைய பார்வையையும் அபிப்பிராயங்களையும் பொய்ப்பிக்கச் செய்திருக்கிறது தேசிய மக்கள் சக்தியின் அமோக வெற்றி. இந்தத் தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேற்பட்ட ஆசனங்களை தனியொரு கட்சியாக தேசிய மக்கள் சக்தி பெற்று இருக்கிறது. அந்தளவுக்கு மக்களின் ஆதரவையும் அபிமானத்தையும் தேசிய மக்கள் சக்தி பெற்று இருப்பது குறிப்பிடத்தக்க விடயமாகும்.
பாரம்பரிய அரசியல் கட்சிகளை தோற்கடித்தே இத்தகைய வெற்றியை தேசிய மக்கள் சக்தி அடைந்து இருக்கிறது.
இலங்கை பல்லின மக்கள் வாழும் நாடாக இருந்தும் கூட தொடர்ந்தும் பின்னடைவுக்கு உள்ளான தேசமாகவே விளங்குகிறது. இதற்கு கடந்த கால ஆட்சியாளர்களின் தவறானதும் பிழையானதுமான வேலைத்திட்டங்களும் கொள்கைகளுமே காரணமாகும். இந்த நிலைமை தொடர்வது நாட்டுக்கோ மக்களுக்கோ இனியும் நன்மைகளைப் பெற்றுத் தரப்போவதில்லை. சுதந்திரமடைந்து ஏழு தசாப்தங்கள் கடந்தும் கூட நாட்டுக்கு சுபீட்சத்தையோ மக்களுக்கு மறுமலர்ச்சியையோ பெற்றுக் கொடுக்காத அரசியல் முறைமை இனியும் நீடிப்பதில் பயனேதும் இல்லை. அதனால் நாட்டின் மறுமலர்ச்சிக்கும் மக்களின் சுபீட்சத்துக்கும் அரசியல் மாற்றமே இன்றியமையாதது. இதில் மக்கள் தெளிவான நிலைப்பாட்டைக் எடுத்துக் கொண்டனர்.
இந்தப் பின்புலத்தில் தான் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் இன, மத பேதங்களுக்கு அப்பால் நாட்டின் பெரும்பாலான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு ஆதரவளித்து அமோக வெற்றி பெற்றுக் கொடுத்துள்ளனர். அதன் ஊடாக நாட்டின் பெரும்பாலான மக்களின் ஆணையைப் பெற்றுக் கொண்டுள்ள தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தின் முதலாவது பாராளுமன்ற அமர்வு தான் இன்று கூடுகிறது. இந்த அமர்வில் ஜனாதிபதி அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் முன்வைத்து ஆற்றும் உரை தொடர்பில் மக்கள் பாரிய எதிர்பார்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்த உரை கடந்த கால பாரம்பரிய அரசியல் தலைவர்கள் ஆற்றிய உரை போன்று அமையாது என்பதில் மக்கள் உறுதியாக நம்பிக்கை கொண்டுள்ளனர். குறிப்பாக நாட்டின் மறுமலர்ச்சியையும் மக்களின் சுபீட்சத்தையும் இலக்காகக் கொண்டதாக இந்த கொள்கைப் பிரகடனம் அமைந்திருக்கும். அதுவே மக்களின் எதிர்பார்ப்பும் கூட.