தேர்தல் அறிவிக்கப்பட்ட பின்னரும் கலால் வரிச் சட்டத்துக்கு முரணாக புதிய மதுபான அனுமதி பத்திரங்களை வழங்கி, முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க உள்ளிட்டோர் நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகளை மீறியுள்ளதாக தீர்ப்பளிக்குமாறு கோரி, உயர் நீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனுவொன்று நேற்று (20) தாக்கல் செய்யப்பட்டுள்ளது. அரசுக்கு பெரும் வருவாய் இழப்பு ஏற்படும் வகையில் வழங்கப்பட்ட இந்த மதுபான அனுமதிப்பத்திரங்களை, உடனடியாக இரத்து செய்ய உத்தரவிட வேண்டும் என்றும் அந்த மனுவில் கோரப்பட்டுள்ளது.
கண்டியில் வசிக்கும் எஸ்.ஏ.சாமர சம்பத் அபேசேகர மற்றும் என். ரவிச்சந்திரன் என்ற இரண்டு வர்த்தகர்கள் இந்த மனுவை சட்டத்தரணி மஞ்சுள பாலசூரிய ஊடாக தாக்கல் செய்துள்ளனர்.
முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, கலால் ஆணையாளர் நாயகம் எம்.ஏ. குணசிறி, மேலதிக கலால் ஆணையாளர் ஏ.எம்.பி. ஆரம்பலா, பிரதி ஆணையாளர்களான சி.ஜே.ஏ. வீரக் கொடி, யு.டி.என்.ஜெயவீர, நிதி அமைச்சின் செயலாளர் மஹிந்த சிறிவர்தன, இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவின் தலைவர் உட்பட 39 பேர், இந்த மனுவில் பிரதிவாதிகளாக குறிப்பிடப்பட்டுள்ளனர்
ஜனாதிபதித் தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26ஆம் திகதிக்கும், ஜனாதிபதித் தேர்தல் நடைபெற்ற செப்டெம்பர் 21ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலப்பகுதியில், பிரதிவாதிகள் கலால் வரிச் சட்டத்தை மீறி, மதுபானசாலை உரிமப் பத்திரங்களை வழங்கியுள்ளதாக மனுவில் குறிப்பிடப்பட்டுள்ளது.
முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள், அவர்களது உறவினர்கள், நண்பர்கள் மற்றும் ஆதரவாளர்களுக்கு இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கிடைத்துள்ளதாகவும் அந்த மனுவில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஜனாதிபதித் தேர்தலில் ஆதரவைப் பெற்றுக்கொள்ளும் உள்நோக்கத்துடன், இந்த அனுமதிப்பத்திரங்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், கலால் வரிச் சட்ட விதிகளை தவிர்த்து தன்னிச்சையாகவும் அநீதியாகவும் வழங்கப்பட்டுள்ளதாக மனுவில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
வெளிப்படைத்தன்மை இல்லாமல், முறையான நடைமுறைக்கு எதிராக அவை வெளியிடப்பட்டுள்ளன.
சாதாரண சட்ட நடைமுறையின் கீழ், மதுபான அனுமதிப்பத்திரம் வழங்கும் போது ஒரு தொழிலதிபரிடம் இருந்து சுமார் 15 மில்லியன் ரூபா வருமானமாக அரசாங்கம் பெறுவதாகவும், ஆனால் இந்த காலப்பகுதியில் புதிய மதுபான உரிமங்களை வழங்குவதற்கு விதிக்கப்பட வேண்டிய வருமானத்தை அரசாங்கம் இழந்துள்ளதாகவும் மனுவில் தெரிவிக்கப்பட்டுள்ளது. பிரதிவாதிகளின் இந்த நடவடிக்கையின் மூலம் இந்நாட்டு மக்களின் அடிப்படை உரிமைகள் மீறப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டு பிரகடனத்தை வெளியிடுமாறு மனுதாரர்கள் நீதிமன்றத்தை கோரியுள்ளனர்.
ஜனாதிபதி தேர்தல் அறிவிக்கப்பட்ட ஜூலை 26 முதல் செப்டெம்பர் 21 வரையான காலப்பகுதியில் சட்டவிரோதமான முறையில் வழங்கப்பட்ட மதுபானசாலை அனுமதிப்பத்திரங்கள் தொடர்பான தகவல்களை நீதிமன்றத்தில் சமர்ப்பிக்குமாறு கலால் ஆணையாளர் நாயகம் உள்ளிட்ட பிரதிவாதிகளுக்கு உத்தரவு பிறப்பிக்குமாறு மனுதாரர்கள் மனுவில் கோரியுள்ளனர்.
இந்த உரிமங்களை வழங்கும் போது கலால் திணைக்களத்தில் சட்டவிரோதமான முறைகேடுகள் அல்லது ஊழல்கள் இடம்பெற்றுள்ளதா? என்பது குறித்து விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள் நீதிமன்றத்தில் மேலும் கோரியுள்ளனர்.
இக்காலப்பகுதியில் வழங்கப்பட்ட மதுபான சாலைகளுக்கான அனுமதிப்பத்திரங்கள் தொடர்பில் விசாரணை நடத்தி அறிக்கை சமர்ப்பிக்குமாறு இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவுக்கு உத்தரவிடுமாறும் மனுதாரர்கள்கோரியுள்ளனர்.