பாராளுமன்றத் தேர்தலில் தமிழ்ச் சமூகம் சரியான முடிவை எடுத்திருப்பதாகவும், இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி யாழ்ப்பாணத்தில் அதிகூடிய வாக்குகளைப் பெற்றிருப்பது, தமிழ் மக்கள் பரந்த சிந்தனையோடு விடயங்களை நோக்க ஆரம்பித்திருப்பதாகத் தோன்றுவதாகவும் இலங்கைக்கான சீனத் தூதுவர் கீ சென்ஹொங் தெரிவித்தார்.
யாழ், நகருக்கு விஜயம் மேற்கொண்டிருந்த சீனத்தூதுவர், யாழ். ஊடக அமையத்தில் நடத்திய ஊடக சந்திப்பிலே இவ்வாறு கூறினார். இதுபற்றி அவர் மேலும் தெரிவித்ததாவது:- “யாழ்ப்பாணத்துக்கு வந்ததுள்ளமை மிகவும் மகிழ்ச்சியாக இருக்கிறது. அதிலும் அனைவரும் எதிர்பார்க்கின்ற ஊடக அமையத்துக்கு வந்துள்ளமை மேலும் சந்தோசமாக உள்ளது.
வட மாகாணத்தில் வாழும் எங்களுடைய சகோதர – சகோரிகளின் வாழ்க்கை முறைகளைஅறிந்துகொள்வதே எமது இந்தப் பயணத்தின் நோக்கமாக உள்ளது.
இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மிகப் பெரிய அளவில் தேசிய மக்கள் சக்தி வெற்றி பெற்றுள்ளது. அதுவும் தெற்கை மையப்படுத்திய ஒரு தேசியக் கட்சிக்கு யாழ்ப்பாணத்திலும் மிகப் பெரும்பான்மையாக ஆதரவு வழங்கப்பட்டுள்ளது.
பருத்தித்துறைக்கு நான் சென்றிருந்தேன். அங்கு ஆங்கிலத்தில் எழுதப்பட்டிருந்த ஒரு வாக்கியத்தைப் பார்த்தேன். அதாவது பன்மைத்துவத்தில் ஒற்றுமை என்று அதில்,இருந்தது.
உண்மையில் அந்த வாக்கியம் கடந்த பாராளுமன்றத் தேர்தலில் சரியாவே பிரதிபலித்துள்ளது. தற்போது இவையெல்லாம் யாழ்ப்பாணத்தில் மாற்றங்கள் நிகழ்ந்து கொண்டிருப்பதையே காட்டுகின்றன.
இவ்வாறான சந்தர்ப்பத்தில் நான் இங்கு விஐயம் செய்வது மிகவும் அர்த்தம் உள்ள ஒன்றாகவே கருதுகி றேன்.
வட மாகாணத்துக்கு முதல் தடவையாகக் கொவிட்19 கால கட்டத்திலேயே வந்திருந்தேன். அந்தக் கால கட்டத்திலேதான் சினோபாம் கொவிட் தடுப்பூசிகளை சீன அரசு இலங்கைக்கு வழங்கியிருந்தது.
அப்போது சினோபாம் என்ற எமது தடுப்பூசிகளை வடக்கு, கிழக்கு முழுவதும் முழுமையாகப் பாவிக்க வேண்டும் என்று இலங்கை அரசிடம் சீன அரசு வலியுறுத்திக் கூறியிருந்தது. இவ்வாறு நாம் வலியுறுத்திக் கூறியதாலேயே இங்குள்ள மக்களுக்கும் அந்தத் தடுப்பூசிகளை பாவித்தனர்.
வடக்கில் உள்ள ஐந்து மாவட்டங்களிலும் நீர் சுத்திகரிப்பு இயந்திரங்களை வழங்கினோம். அதேபோன்று ஆயிரக்கணக்கான குடும்பங்களுக்கு உலர் உணவுப் பொதிகளையும், மீன்பிடி உபகரணங்களையும் வழங்கினோம்.