முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் நேற்று குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி, சுமார் 05 மணி நேரம் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.
ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாத குண்டுத் தாக்குதல் தொடர்பில், செனல் 4 தொலைக்காட்சி வெளியிட்ட விசேட நேர்காணலில் சிவனேசதுரை சந்திரகாந்தனின் முன்னாள் செயலாளரான ஆசாத் மௌலானா வாக்குமூலம் வழங்கியிருந்தார். முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தனுக்கும் ஈஸ்டர் ஞாயிறு குண்டுத்தாக்குதல் குண்டுதாரிகளுக்குமிடையில் தொடர்புகள் இருந்ததாக அவர் குறிப்பிட்டிருந்தார். இவ்விடயம் தொடர்பில் வாக்குமூலம் பெறுவதற்காகவே முன்னாள் இராஜாங்க அமைச்சர் சிவநேசதுரை சந்திரகாந்தன் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்கு அழைக்கப்பட்டிருந்தார்.
ஏற்கனவே அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்திற்கு அழைக்கப்பட்டிருந்த போதிலும், பாராளுமன்ற அமர்வுகள் காரணமாக அங்கு அவர் ஆஜராகியிருக்கவில்லை. அதற்கிணங்க நேற்றுக்காலை 9.30 மணியளவில் அவர் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் ஆஜராகி வாக்குமூலம் வழங்கியிருந்தார்.
லோரன்ஸ் செல்வநாயகம்