ரஷ்ய – உக்ரைன் போர் 1,000 நாட்களை எட்டியுள்ள நிலையில் இப்போரில் 659 சிறுவர்கள் உயிரிழந்துள்ளதோடு 1,747 குழந்தைகள் காயமடைந்துள்ளதாக யுனிசெப் நிறுவனம் தெரிவித்துள்ளது.
இரண்டு வருடங்களுக்கும் மேலாக ரஷ்ய – உக்ரைன் யுத்தம் நீடித்துவரும் நிலையில் யுனிசெப் இத்தகவலை வெளியிட்டுள்ளது.
இதேவேளை அமெரிக்க ஜனாதிபதியாக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்றவுடன், உக்ரைனுக்கு எதிரான போர் விரைவில் முடிவுக்கு வரும் என அந்நாட்டு ஜனாதிபதி விளாடிமிர் ஜெலென்ஸ்கி நம்பிக்கையும் தெரிவித்திருக்கிறார்.
யுனிசெஃப் வெளியிட்டிருக்கும் தகவலின்படி, ரஷ்ய – உக்ரைன் போரினால் ஒவ்வொரு வாரமும் குறைந்தது 16 சிறுவர்கள் உயிரிழந்தும், காயமடைந்தும் உள்ளனர் என்று சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
இவ்வருடம் ஜூலை முதல் உக்ரைனில் தாக்குதல்கள் அதிகரித்துள்ளன. இதனால் உயிரிழப்புகள் மற்றும் நாட்டின் உட்கட்டமைப்பும் பாதிக்கப்பட்டுள்ளது
யுனிசெப் நிர்வாகப் பணிப்பாளர் கேத்தரின் ரஸ்ஸல் கூறுகையில், “அதிகப்படியான குழந்தைகள் உயிரிழந்துள்ளது அதிர்ச்சியளிக்கக்கூடிய மற்றும் ஏற்றுக்கொள்ள முடியாத ஒரு விஷயம். குழந்தைகள் தங்கள் படுக்கைகளில், மருத்துவமனைகள் மற்றும் விளையாட்டு மைதானங்களிலேயே கொல்லப்பட்டுள்ளனர். இவ்வாறு இளம் உயிர்கள் பலியானது அவர்களின் குடும்பங்களுக்கு மிகப் பெரிய வலியை ஏற்படுத்தும். மேலும், பல குழந்தைகள் பயத்திலேயே வாழ்ந்து வருகின்றனர். இது போன்ற விஷயங்கள் அவர்களின் உளவியலை பாதிக்கும் என்றுள்ளார்.
கடந்த ஆயிரம் நாட்களில், குறைந்தது 1,496 கல்வி நிறுவனங்கள், 662 சுகாதார வசதிகள் சேதமடைந்துள்ளன அல்லது அழிக்கப்பட்டுள்ளன என்று ஐ.நா தகவல் தெரிவித்துள்ளது.