முன்னாள் பிரதமரான ஷேக் ஹசீனா சட்ட ரீதியிலான விசாரணைகளை எதிர்கொள்ளவென புதுடில்லி அவரை பங்களாதேசத்திற்கு திருப்பி அனுப்ப வேண்டும் என்று பங்களாதேச தலைமை ஆலோசகர் முகம்மது யூனுஸ் தெரிவித்துள்ளார்.
ஊடகமொன்றுக்கு அளித்துள்ள பேட்டியில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ள அவர், முன்னாள் பிரதமர் ஹசீனா இந்தியாவில் வசிப்பது, குறைந்தபட்சம் இப்போதைக்கு பிரச்சினை இல்லை. ஆனால் அவர் அங்கிருந்து கொண்டு பங்களாதேச மக்களை தனது அரசியல் நடவடிக்கைகளுக்காகப் பயன்படுத்த முயற்சி செய்கிறார்.
டாக்காவிலும், நாட்டின் பிற நகரங்களிலும் மக்கள் தெருக்களுக்கு வந்து ஆர்ப்பாட்டம் செய்யுமாறு கோரிக்கை விடுத்துள்ளார்.
இது சமூக ஊடகங்கள் ஊடாகப் பரப்பப்படுகிறது. அமெரிக்க ஜனாதிபதியாகத் தெரிவு செய்யப்பட்டுள்ள டொனால்ட் ட்ரம்ப்பின் படத்தை கைகளில் வைத்துக்கொண்டு ஆர்ப்பாட்டம் நடாத்துமாறு தெரிவித்துள்ளார். ஆர்ப்பாட்டக்காரர்களைப் பொலிஸார் தடுத்தால், பங்களாதேச அரசு அமெரிக்காவுக்கு எதிரானது என்ற பிம்பதை ஏற்படுத்த முயற்சிக்கிறார். இது மற்றொரு நாட்டின் உள் மற்றும் வெளி விவகாரங்களில் தலையிடுவதைப் போன்றதாகும் என்றுள்ளார்.