காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்களில் நேற்றும் குறைந்தது 50 பேர் கொல்லப்பட்டிருக்கும் நிலையில் ஓர் ஆண்டுக்கு மேலாக இடம்பெற்று வரும் தாக்குதல்களில் பலியானோர் எண்ணிக்கை 44 ஆயிரத்தை நெருங்கியுள்ளது.
காசாவில் கடந்த 24 மணி நேரத்தில் இஸ்ரேலின் மூன்று படுகொலைச் சம்பவங்களிலேயே பெரும் எண்ணிக்கையானோர் கொல்லப்பட்டிருப்பதாக காசா சுகாதார அமைச்சு நேற்று வெளியிட்ட அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் மேலும் 110 பேர் காயமடைந்துள்ளனர்.
இதில் காசா நகரின் தெற்கே சப்ரா பகுதியில் இஸ்ரேலிய போர் விமானங்கள் நடத்திய தாக்குதலில் ஒரு புகைப்பட ஊடகவியலாளர் உட்பட இருவர் கொல்லப்பட்டு மேலும் பலர் காயமடைந்ததாக பலஸ்தீன செய்தி நிறுவனமான வபா குறிப்பிட்டது. அல் இமால் பள்ளிவாசலுக்கு அருகில் இடம்பெற்ற தாக்குதலிலேயே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் கடந்த ஆண்டு ஒக்டோபர் 7 ஆம் திகதி இஸ்ரேல் மீது பலஸ்தீன போராளிகள் நடத்தி தாக்குதலைத் தொடர்ந்து வெடித்த காசா போரில் இஸ்ரேல் நடத்தும் இடைவிடாத தாக்குதல்களில் கொல்லப்பட்ட பலஸ்தீனர்கள் எண்ணிக்கை 43,972 ஆக அதிகரித்துள்ளது. தவிர 104,008 பேர் காயமடைந்துள்ளனர். கொல்லப்பட்டவர்களில் பெரும்பாலானவர்கள் சிறுவர்கள் மற்றும் பெண்களாவர்.
காசாவில் இஸ்ரேலின் தாக்குதல்கள் அங்கு பேரழிவை ஏற்படுத்தி இருப்பதாக ஐ.நா அதிகாரிகள் பாதுகாதுப்புச் சபையில் தெரிவித்துள்ளனர். ‘இந்த நிகழ்வுகள் தலைமுறை தலைமுறையாக எதிரொலிக்கும் என்பதோடு எம்மால் இன்னும் புரிந்து கொள்ள முடியாத வகையில் பிராந்தியத்தையே மாற்றிவிடும்’ என்று அந்த அதிகாரிகள் குறிப்பிட்டுள்ளனர்.
மத்திய கிழக்கு விவகாரம் தொடர்பில் பாதுகாப்புச் சபை விவாதத்தின்போதே காசா தொடர்பில் பேசப்பட்டுள்ளது. இதன்போது காசாவில் மனிதாபிமான நிலைமை குறித்து விளக்கி இருக்கும் ஐ.நா. அதிகாரிகள், எதிர்வரும் குளிர்காலம் அங்கு பேரழிவை ஏற்படுத்தும் என்று எச்சரித்திருப்பதோடு குறிப்பாக வடக்கு காசாவின் நிலை குறித்து கவலை வெளியிட்டுள்ளனர்.
வடக்கு காசாவில் கடந்த 45 நாட்களுக்கு மேலாக முற்றுகையில் ஈடுபட்டிருக்கும் இஸ்ரேலியப் படை அங்கு தரை மற்றும் வான் வழியாக கடும் தாக்குதல்களை தொடர்ந்து நடத்தி வருகிறது.
காசாவுக்கான உதவிகள் செல்வதையும் இஸ்ரேல் மட்டுப்படுத்தி வரும் நிலையில் அங்கு உணவுகளை ஏற்றிச் சென்ற 109 உதவி வாகனங்கள் சூறையாடப்பட்டிருப்பதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா. நிறுவனம் தெரிவித்துள்ளது.
கடந்த சனிக்கிழமை இடம்பெற்ற இந்த சம்பவத்தில் 97 லொறிகள் காணாமல்போயிருப்பதோடு அதன் ஓட்டுநர்கள் துப்பாக்கி முனையில் வைக்கப்பட்டு உதவிப் பொருட்கள் கடத்திச் செல்லப்பட்டிருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
தெற்கு காசாவுடனான இஸ்ரேலின் கெரம் ஷலோம் எல்லைக் கடவையில் இருந்து காசாவை நோக்கி அனுப்பப்பட்ட உதவி வாகனங்களே சூறையாடப்பட்டுள்ளன.
இந்த வாகனங்கள் முகமூடி அணிந்தவர்களால் கையெறி குண்டுகள் வீசப்பட்டு தாக்கப்பட்டிருப்பதாக பார்த்தவர்கள் தெரிவித்துள்ளனர்.
காசாவில் சமூக ஒழுங்கு முற்றாக சீர்குலைந்திருக்கும் சூழலில் அங்கு இயங்குவது சாத்தியமில்லாத நிலைமையை ஏற்படுத்தி வருவதாக பலஸ்தீன அகதிகளுக்கான ஐ.நா நிறுவனத்தின் ஆணையாளர் நாயகம் பிலிப்பே லசரினி தெரிவித்துள்ளார்.
உடனடி தலையீடு இல்லாத பட்சத்தில், உயிர்வாழ்வதற்கு இரண்டு மில்லியன் மக்கள் மனிதாபிமான உதவிகளில் தங்கி இருக்கும் சூழலில் உணவுப் பற்றாக்குறை மேலும் மோசமடையக் கூடும் என்று ஐ.நா. நிறுவனம் எச்சரித்துள்ளது.
காசா போரை ஓட்டி ஆக்கிரமிக்கப்பட்ட மேற்குக் கரையிலும் பதற்றம் நீடிப்பதோடு அங்குள்ள ஜெனின் நகரில் இஸ்ரேலிய படை நேற்று நடத்திய துப்பாக்கிச் சூட்டில் மூன்று பலஸ்தீனர்கள் கொல்லப்பட்டதாக பலஸ்தீன சுகாதார அமைச்சு குறிப்பிட்டது.
ஜெனின் நகரில் இஸ்ரேல் இராணுவம் நடத்திய சுற்றிவளைப்பின்போதே இவர்கள் கொல்லப்பட்டுள்ளனர்.
மறுபுறம் லெபனானிலும் இஸ்ரேலின் தாக்குதல்கள் தொடரும் சூழலில் ‘இஸ்ரேல் – ஹிஸ்புல்லா போரை முடிவுக்குக் கொண்டுவருவதற்கு உண்மையான வாய்ப்பு உருவாகி இருப்பதாக லெபனான் தலைநகர் பெய்ரூட்டில் அமெரிக்க விசேட தூதுவர் அமோஸ் ஹொச்ஸ்டைன் குறிப்பிட்டுள்ளார்.
‘மோதலை முடிவுக்குக் கொண்டுவருதற்கான உண்மையான வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாலேயே நான் இங்கு வந்துள்ளேன்’ என்று ஹிஸ்புல்லா கூட்டணியில் உள்ள பாராளுமன்ற சபாநாயகர் நபிஹ் பெர்ரியுடன் இரண்டு மணி நேர பேச்சுவார்த்தையில் ஈடுபட்ட பின்னர் ஹொச்ஸ்டைன் செய்தியாளர்களிடம் தெரிவித்துள்ளார்.
இஸ்ரேல் மற்றும் ஹிஸ்புல்லா இடையில் போர் நிறுத்தம் ஒன்றை எட்டுவதில் அமெரிக்கா மற்றும் பிரான்ஸ் நாடுகள் தீவிரம் காட்டி வருகின்றன.
எவ்வாறாயினும் இஸ்ரேலின் எல்லையை ஒட்டிய தெற்கு லெபனானில் இரு தரப்பும் தரைவழி மோதலில் ஈடுபட்டிருப்பதோடு இஸ்ரேலின் வான் தாக்குதல்களும் தொடர்ந்து இடம்பெற்று வருகின்றன.
பெய்ரூட்டில் நேற்றுக் காலை இடம்பெற்ற தாக்குதலில் இருவர் கொல்லப்பட்டிருப்பதோடு திங்கள் இரவு நகரின் மத்திய பகுதியில் இடம்பெற்ற வான் தாக்குதல்களில் மேலும் ஐவர் கொல்லப்பட்டதாக அங்கிருந்து வரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
மறுபுறம் இஸ்ரேலை நோக்கி ஹிஸ்புல்லா நடத்திய ரொக்கெட் தாக்குதலில் குறைந்தது ஒன்பது பேர் காயமடைந்துள்ளனர்.