அடுத்த ஆண்டு பாகிஸ்தானில் நடத்த திட்டமிடப்பட்டிருக்கும் ஐ.சி.சி. சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் இந்தியா பங்கேற்பதில் தொடர்ந்து இழுபறி நிலை நீடிக்கும் சூழலில், இந்தியா இல்லாத பட்சத்தில் இலங்கைக்கு தொடரில் பங்கேற்க வாய்ப்பு ஏற்பட்டிருப்பதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
சம்பியன்ஸ் கிண்ணத் தொடரில் பங்கேற்க இந்திய அணி பாகிஸ்தான் செல்வதில்லை என்று இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டுச் சபை, சர்வதேச கிரிக்கெட் கௌன்ஸிலிடம் உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளது.
இந்நிலையில் இந்தியாவின் போட்டிகளை பாகிஸ்தானுக்கு வெளியில் நடத்தும் வகையில் கலப்பு முறையில் தொடரை நடத்துவதற்கு பாகிஸ்தான் எதிர்ப்பை வெளியிட்டு வருகிறது.
இந்தத் தொடர் நடைபெறுவதற்கு இன்னும் மூன்று மாதங்களுக்கு குறைவான காலமே இருக்கும் நிலையில் இந்த இழுபறி இன்னும் தீர்க்கப்படவில்லை. இந்நிலையில் இந்தியா இந்தத் தொடரில் பங்கேற்காவிட்டால் அதற்கு பதில் இலங்கை நேரடி தகுதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. கடந்த 2023 ஒருநாள் உலகக் கிண்ணத்தில் முதல் எட்டு இடங்களை பிடித்த அணிகளே சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெற்றுள்ளன. அந்தத் தொடரில் இலங்கை அணி 9 ஆவது இடத்தை பிடித்ததால் சம்பியன்ஸ் கிண்ணத்திற்கு தகுதி பெறும் வாய்ப்பை இழந்தது.
இந்நிலையில் இந்தியா இடம்பெறாத பட்சத்தில் 9 ஆவது இடத்தில் இருக்கும் இலங்கை சம்பியன்ஸ் கிண்ணத்தில் தகுதி பெற வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. எவ்வாறாயினும் இந்தியா இன்றி சம்பியன்ஸ் கிண்ணத்தை நடத்துவது ஐ.சி.சி. மற்றும் போட்டியை நடத்தும் பாகிஸ்தானுக்கு பொருளாதார ரீதியில் பெரும் இழப்பை ஏற்படுத்துவதாக அமையும் என்பது குறிப்பிடத்தக்கது.