தென்னாபிரிக்காவுக்கு எதிரான இரண்டு போட்டிகளைக் கொண்ட டெஸ்ட் தொடருக்கான இலங்கை குழாத்தில் இரண்டு ஆண்டுகளின் பின்னர் இடது கை சுழற்பந்து வீச்சாளர் லசித் எம்புல்தெனிய அழைக்
கப்பட்டுள்ளார். கடந்த செப்டெம்பரில் நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்டில் அறிமுகம் பெற்ற ஓப் ஸ்பின் சுழல் வீரர் நிஷான் பீரிஸும் அணியில் இடம்பெற்றுள்ளார்.
சுழற்பந்து சகலதுறை வீரர் ரமேஷ் பீரிஸ் அணியில் இடம்பெறத் தவறியுள்ளார். அவர் இந்த ஆண்டு ஆடிய ஒரே ஒரு டெஸ்ட் போட்டியில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி இருந்தார். அவரால் துடுப்பெடுத்தாடவும் முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் குழாத்தில் சுழற்பந்து முகாமில் முன்னணி வீரராக பிரபாத் ஜனசூரிய இடம்பெறுவதோடு டெர்பன் மற்றும் கெபர்ஹாவில் நடைபெறும் டெஸ்ட் போட்டிகளில் எதிரணிக்கு சவால் கொடுக்க அவர் எதிர்பார்த்துள்ளார். இதில் கெபர்ஹாவின் ஆடுகளம் தென்னாபிரிக்காவின் மற்ற ஆடுகளங்களை விடவும் சுழற்பந்துக்கு சாதகமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
இலங்கை டெஸ்ட் குழாம் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட துடுப்பாட்ட மற்றும் வேகப்பந்து வீச்சாளர் வரிசையை கொண்டுள்ளது. அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார. கசுன் ராஜித்த மற்றும் சகலதுறை வீரர் மிலான் ரத்னாயக்க வேகப்பந்து வீரர்களாக உள்ளனர். ஆரம்ப வீரர் ஓஷத பெர்னாண்டோ அணியில் சேர்க்கப்பட்டபோதும் நிஷான் மதுஷ்க அண்மைக் காலத்தில் ஆரம்ப வரிசையில் சோபித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.
2019 இல் இலங்கை அணியின் தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் சோபித்த நிலையிலேயே எம்புல்தெனிய மற்றும் ஓஷத இருவரும் டெஸ்ட் குழாத்திற்கு அழைக்கப்பட்டுள்ளனர். முந்தைய சுற்றுப்பயணத்தில் எம்புல்தெனிய மூன்று இன்னிங்ஸ்களில் ஆறு விக்கெட்டுகளை வீழ்த்தி 23.83 பந்துவீச்சு சராசரியை பெற்றிருந்தார். ஓஷத பெர்னாண்டோ இரண்டாவது டெஸ்டில் இலங்கை அணி வெற்றி இலக்கை எட்டுவதில் ஆட்டமிழக்காது 75 ஓட்டங்களைப் பெற்றிருந்தார்.
எவ்வாறாயினும் இந்த இரு வீரர்களும் உள்ளூர் போட்டிகளில் அண்மையில் பெரிதாக சோபிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
தென்னாபிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் ஏற்கனவே இலங்கை டெஸ்ட் அணி வீரர்கள் தென்னாபிரிக்கா சென்று பயிற்சிகளில் ஈடுபட்டு வருகின்றனர். தென்னாபிரிக்க முன்னாள் துடுப்பாட்ட வீரர் நீல் மக்கன்சி தென்னாபிரிக்க சுற்றுப்பயணத்தில் இலங்கை அணியின் ஆலோசகராக அந்த வீரர்களுக்கு பயிற்சிகளை வழங்கி வருகிறார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த டெஸ்ட் தொடருக்கு தயாராகும் வகையில் நேற்று நடந்த நியூசிலாந்துக்கு எதிரான மூன்றாவது ஒருநாள் போட்டியில் இருந்து குசல் மெண்டிஸ், அசித்த, கமிந்து மெண்டிஸ் மற்றும் பத்தும் நிசங்க ஆகியோரும் விடுவிக்கப்பட்டனர். இலங்கை அணி நியூசிலாந்துக்கு எதிரான ஒருநாள் தொடரை ஏற்கனவே கைப்பற்றிய நிலையிலேயே இவர்கள் விடுவிக்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை மற்றும் தென்னாபிரிக்க அணிகளுக்கு இடையிலான முதலாவது டெஸ்ட் போட்டி டர்பன், கிங்ஸ்மீட்டில் எதிர்வரும் நவம்பர் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இதற்காக இலங்கை அணியின் எஞ்சிய வீரர்கள் எதிர்வரும் நவம்பர் 22 ஆம் திகதி தென்னாபிரிக்கா பயணிக்கவுள்ளனர். இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டெஸ்ட் போட்டி டிசம்பர் 5 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது.
ஐ.சி.சி. உலக டெஸ்ட் சம்பியன்சிப் இறுதிப் போட்டிக்கு முன்னேற இலங்கை மற்றும் தென்னாபிரிக்கா அகிய இரு அணிகளுக்கும் தொடர்ந்து வாய்ப்பு இருக்கும் நிலையில் இந்த டெஸ்ட் தொடர் இரு அணிகளுக்கும் தீர்க்கமானதாக அமையவுள்ளது.
இலங்கை குழாம்: தனஞ்சய டி சில்வா (தலைவர்), பத்தும் நிசங்க, திமுத் கருணாரத்ன, தினேஷ் சந்திமால், அஞ்சலோ மத்தியூஸ், குசல் மெண்டிஸ், கமிந்து மெண்டிஸ், ஓஷத பெர்னாண்டோ, சதீர சமரவிக்ரம, பிரபாத் ஜயசூரிய, நிஷான் பீரிஸ், லசித் எம்புல்தெனிய, மிலான் ரத்னாயக்க, அசித்த பெர்னாண்டோ, விஷ்வ பெர்னாண்டோ, லஹிரு குமார, கசுன் ராஜித்த.