நாட்டின் ஆட்சியாளர்கள் சட்டத்தை முன்னுதாரணமாக பின்பற்றினால், மக்களும் சட்டத்தை மதிப்பார்களென, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார். .
நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார நேற்று (19) பிற்பகல் தனது கடமைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்தார். அதனைத் தொடர்ந்து ஊடகங்களுக்கு கருத்து தெரிவிக்கும் போதே அவர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
அங்கு மேலும் கருத்து தெரிவித்த நீதியமைச்சர், மேலும் கூறியதாவது.
ஊழல், மோசடியைக் கையாள்வது மற்றும் சட்டத்தின் ஆட்சியைப் பாதுகாப்பது ஆகியவை தேசிய மக்கள் சக்தியின் ஆணையின் இரண்டு சக்திவாய்ந்த அம்சங்களாகும். ஒரு நாட்டில் பொருளாதார மற்றும் சமூக மாற்றத்தை ஏற்படுத்த, முதலில் சட்டத்தின் ஆட்சி அவசியம். நீதித்துறையின் சுதந்திரத்தை நாம் பாதுகாக்க வேண்டும். ஊழியர்களின் சுயாட்சியைப் பாதுகாப்பது மிகவும் முக்கியமானது. கடந்த காலங்களில் நீதித்துறை அரசியல்மயமானதாக சமூகத்தில் ஒரு கருத்து நிலவுகிறது. எங்களிடம் உள்ள மிக முக்கியமான பணிகளில் ஒன்று, நீதித்துறையின் மீது மக்களுக்கு மீண்டும் நம்பிக்கையை ஏற்படுத்துவதாகும். மக்களின் நம்பிக்கையைப் பெற்ற நீதி அமைச்சு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் பொலிஸ் சேவை என்பன நிறுவப்பட வேண்டும். தேசிய மக்கள் சக்தி பெற்ற மக்கள் ஆணைக்கான முக்கிய காரணி சட்டத்தின் மேலாதிக்கத்தை உறுதிப்படுத்துவதாகும். இது ஒரு நீண்ட காலப் பணி.
அமைச்சர்களுக்கும் அரசியல்வாதிகளுக்கும் அதிகார வரம்பும் உண்டு. அவர்களும் சட்டத்திற்குக் கீழ்ப்படிய வேண்டும். நாம் எந்தச் சட்டத்தையும் தன்னிச்சையாக கொண்டு வரப் போவதில்லை. உரிய தரப்பினருடன் கலந்துரையாடியதன் பின்னரே சட்டங்கள் கொண்டுவரப்படும் எனவும் அமைச்சர் குறிப்பிட்டார்.
ஈஸ்டர் தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வாறு நடைபெறும்?
பதில் – ஈஸ்டர் தாக்குதல் மட்டுமல்ல, பல விசாரணைகள் நடத்தப்பட்டு வருகின்றன. நீதித்துறை அமைச்சரின் பொறுப்பு, வழக்குகளை விசாரிப்பதல்ல. இதற்காக பொலிஸ் ,குற்றப் புலனாய்வுப் பிரிவு உள்ளது. சட்டமா அதிபர் திணைக்களம் வழக்குகளை முறையாக விசாரணை செய்ய உள்ளது. மனிதவள மற்றும் தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கி அவர்களின் பங்கை உடனடியாக நிறைவேற்றுவது நீதி அமைச்சரின் பொறுப்பாகும். அரசியல் வாதிகள் தொழில்சார் செயற்பாடுகளில் தலையிடக் கூடாது. நமது நாட்டின் சட்ட அமுலாக்க நிறுவனங்கள் வெற்றிகரமாக செயற்பட நாம், ஆதரவு வழங்க வேண்டும் என்றார்.