பதுளையில் குயின்ஸ்டோன் என்ற தோட்டத்தில் வாழும் மக்கள், தாம் பொருளாதார பிரச்சினை, இடப்பிரச்சினை, குடிநீர்ப் பிரச்சினை உட்பட சுகாதார பிரச்சினைகளுக்கு முகம்கொடுத்துள்ளதாக கவலை வெளியிட்டுள்ளனர்.
இந்தத் தோட்டத்தில் சுமார் 270 குடும்பங்கள் வசித்து வருகின்றனர். பதுளை வாழ் மக்களின் சுகாதார பிரச்சினைகள் தொடர்பாக ஆராய்வதற்காக சுற்றால் நீதி மையம் (CEJ) அண்மையில் கள ஆய்வொன்றை மேற்கொண்டிருந்தபோது, இந்த விடயம் எமக்கு தெரியவந்தது.
இதன்போது, குயின்ஸ்டோன் தோட்டத்தில் வாழும் மக்களுக்காக கட்டப்பட்ட வைத்தியசாலையொன்று பாழடைந்திருப்பதை அவதானிக்க முடிந்தது.
இந்தத் தோட்ட வைத்தியசாலை, இதற்கு முன்னர் சுமார் 05 வருடங்களாக மூடப்பட்டிருந்ததாகவும், பின்னர் வாரம் மூன்று நாட்களென அரச வைத்தியசாலையிலிருந்து வைத்தியர் ஒருவர் வந்து சென்றதாகவும் தெரிவித்த தோட்ட மக்கள், தற்போது இரண்டு வருடங்களாக வைத்தியசாலை முழுமையாக மூடப்பட்டுள்ளதாக தெரிவித்தனர். தாம் வைத்தியசேவையை பெற்றுக்கொள்ள வேண்டுமானால், 05 கிலோமீற்றர் வரை பயணித்து நகரை நோக்கி செல்ல வேண்டும் எனவும் அம் மக்கள் கவலை வெளியிட்டனர். முச்சக்கர வண்டியில் பயணித்தால், 400 ரூபாவிலிருந்து 600 ரூபா வரை செலவாகும் எனவும் குயின்ஸ்டோன் தோட்ட மக்கள் தெரிவித்தனர். இதேவேளை, ஒரு மலசலகூடத்தை இரண்டு கும்பங்கள் பாவிப்பதாக, தோட்டத் தொழிலாளி ஒருவர் தெரிவித்தார். தமது 1,350 ரூபா சம்பளம் குறித்து கவலை தெரிவித்த அவர், 25 நாட்கள் வேலைக்குச் சென்றால் மாத்திரமே 1,350 ரூபா என்ற அடிப்படை சம்பளம் கிடைக்கும் எனவும், அதற்கு குறைவான நாட்கள் வேலை செய்தால் வெறுமனே 900 ரூபா மாத்திரமே சம்பளமாக கிடைக்கும் எனவும் தெரிவித்தார்.
காயத்திரி சுரேஷ்