கிழக்கு மாகாணத்தின் உயரிய விருதான ‘வித்தகர்’ விருதினை கல்முனை பிரதேசத்தின் கல்வியியலாளர்கள் இருவரு நாளை வியாழக்கிழமை திருகோணமலையில் நடைபெறவிருக்கும் கிழக்கு மாகாண இலக்கிய விழாவில் பெற்றுக் கொள்ள இருக்கிறார்கள்.
காரைதீவைச் சேர்ந்த பிரபல ஊடகவியலாளரும், ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளருமான தேசமான்ய வி.ரி.சகாதேவராஜா, பாண்டிருப்பைச் சேர்ந்த ஓய்வுநிலை கோட்டக் கல்விப்பணிப்பாளர் பைந்தமிழ் குமரன் ஜெ. டேவிட் ஆகிய இருவருமே ‘வித்தகர் விருது’ பெறுகின்றனர்.
36 வருடங்கள் கல்விப் பணியாற்றிய சகாதேவராஜா தினகரன் பத்திரிகையின் பிரதேச ஊடகவியலாளராவார். சம்மாந்துறை வலயத்தில் 26 வருடங்களுக்கு மேலாக சேவையாற்றி வெள்ளிவிழா கண்டவராவார்.அவர் சம்மாந்துறை வலய கல்விசார் உத்தியோகத்தர்கள் நலன்புரி ஒன்றியத்தின் தலைவருமாவார்.
இவர், பத்து வருடங்கள் காரைதீவு விபுலானந்தா மத்திய கல்லூரியில் ஆசிரியராகவும், சம்மாந்துறை வலயக்கல்விப் பணிமனையில் 26 வருடங்கள் உதவிக் கல்விப் பணிப்பாளராகவும் சேவையாற்றியுள்ளார்.
பேராதனை பல்கலைக்கழக கலைத்துறை பட்டதாரியான இவர் மட்டக்களப்பு ஆசிரிய கலாசாலையில் பயிற்றப்பட்ட விஞ்ஞான ஆசிரியராவார். பட்டப்பின் கல்வி டிப்ளோமோ மற்றும் கல்வி முதுமாணி பட்டமும் பெற்றவராவார்.அவர் இலங்கை அதிபர் சேவையின் முதலாந்தர அதிபருமாவார்.
இலங்கை தமிழர் ஆசிரியர் சங்கத் தலைவராக, அம்பாறை மாவட்ட தமிழ் ஊடகவியலாளர் ஒன்றியத் தலைவராக, காரைதீவு விபுலானந்தா ஞாபகார்த்த பணிமன்றத் தலைவராக, இந்துசமய விருத்திச்சங்க தலைவராக, காரைதீவு விளையாட்டு கழகத் தலைவராக, கம்பன் கலைக்கழகத் தலைவராக, கிராம அபிவிருத்தி சங்க தலைவராக போன்றெல்லாம் பல அமைப்புகளில் தலைவராக அவர் பணியாற்றியுள்ளார்.
மடத்தடி ஸ்ரீ மீனாட்சி அம்மன் ஆலய பரிபாலன சபையின் ஆலோசகராக தற்போது பணியாற்றி வருகின்றார். அவர் காரைதீவின் பழம்பெரும் ஆசிரியர் வே.தம்பிராஜா_ தங்கநாயகம் தம்பதிகளின் புதல்வராவார். அவர் பல்வேறு விருதுகளையும் பெற்றுள்ளார்.
விருது பெறும் மற்றையவரான ஜே.டேவிட் காரைதீவு கோட்டக் கல்விப்பணிப்பாளராகவிருந்து ஓய்வு பெற்றவராவார்.
சொறிக்கல்முனை கிராமத்தில் யுவான்பிள்ளை கிறகோரி_செபதேயு றோஸ்மேரி தம்பதியினரின் மகனான அவர் பேராதனை பல்கலைக்கழகத்தில் கலைப்பட்டதாரியாவார். கிழக்குப் பல்கலைக்கழகத்தில் தமிழ்மொழியும் இலக்கியமும் முதுமாணி பட்டம் பெற்றுள்ளார். தேசிய
கல்வி நிறுவக பட்டப்பின் கல்வி டிப்ளோமாவில் மெரிட் சித்தி பெற்றவர். ஆசிரியராகவும் கடமை நிறைவேற்று அதிபராகவும் தாம் பிறந்த மண்ணில் ஹொலிகுறொஸ் வித்தியாலயத்தில் அரும்பணிகளாற்றினார். தொடர்ந்து சம்மாந்துறை கல்வி வலயத்தில் தமிழ்ப்பாட ஆசிரிய
ஆலோசகராக சுமார் பன்னிரண்டு வருடங்களுக்கு மேல் பணியாற்றியுள்ளார். கல்வியமைச்சினால் மிகச்சிறந்த அதிபருக்கான ‘பிரதீப பிரபா’ வழங்கி கொளரவிக்கப்பட்டார். 2019 இல் கோட்டக் கல்விப்பணிப்பாளராக பதவி உயர்வு பெற்று காரைதீவுக் கோட்டத்தை கல்வியில்
உயர்நிலையடையச் செய்தார். அவர் பன்முக ஆளுமை கொண்டவர். நாடறிந்த எழுத்தாளர், மேலும் சிறந்த பேச்சாளர். நடிகர், இசை வல்லுநர், நெறியாளர் கவிஞர் என ஆளுமை மிக்கவர்.