Sunday, November 24, 2024
Home » உடலை தகனம் செய்யத் தயாரானதும், கண்விழித்து தண்ணீர் கேட்ட பெண்!

உடலை தகனம் செய்யத் தயாரானதும், கண்விழித்து தண்ணீர் கேட்ட பெண்!

by mahesh
November 20, 2024 11:00 am 0 comment

தமிழ்நாடு, திருச்சி அருகே நஞ்சு குடித்ததாக சிகிச்சை பெற்ற மூதாட்டி இறந்ததாக கருதி அவரைத் தகனம் செய்ய சுடுகாட்டுக்குக் கொண்டு சென்று இறுதிச் சடங்கு செய்தபோது, திடீரென அவர் கண்விழித்து தண்ணீர் கேட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

திருச்சி மாவட்டம் மருங்காபுரி ஒன்றியம் வேலக்குறிச்சியை சேர்ந்த சின்னம்மாளின்(60) கண்களில் பாதிப்பு ஏற்பட்டது. இதனால் பார்வை மங்கலானது. இதற்காக அவர் கடந்த ஒரு மாதத்துக்கு முன் மதுரையில் உள்ள ஒரு தனியார் கண் மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார். இருந்தும் கண்ணில் அவருக்கு அவ்வப்போது வலி ஏற்பட்டு வந்தது. இந்நிலையில் ஞாயிறன்று சின்னம்மாள் வலி தாங்க முடியாமல் தோட்டத்தில் இருந்த பூச்சி மருந்தை எடுத்து குடித்து மயங்கிக் கிடந்தார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த அவரது மகன் மற்றும் உறவினர்கள் அவரை துவரங்குறிச்சி அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் மேல் சிகிச்சைக்காக அங்குள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு அவருக்கு செயற்கை சுவாசம் பொருத்தி சிகிச்சை அளித்தனர். ஆனாலும் அவரது உடல்நிலையில் எந்த முன்னேற்றமும் இல்லை. அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கை சுவாசத்தை எடுத்துவிட்டால் அவர் இறந்துவிடுவார் என்று மருத்துவமனை நிர்வாகத்தினர் கூறினர். பின்னர் அவரது உறவினர்கள் சின்னம்மாளை வீட்டுக்கு கொண்டு செல்ல முடிவெடுத்தனர். இதையடுத்து நேற்றுமுன்தினம் காலை 11 மணி அளவில் அம்புலன்ஸ் மூலம் சின்னம்மாளை வீட்டுக்கு கொண்டு சென்றனர். அப்போது வழியில் அவருக்கு பொருத்தப்பட்ட செயற்கைச் சுவாச கருவியை எடுத்துள்ளனர். அதன்பின்னர் அவரது உடல் அசைவின்றி காணப்பட்டது.

இதனால் அவர் இறந்து விட்டதாக கருதி, வீட்டுக்கு செல்லாமல் தகனம் செய்வதற்காக நேராக எஸ்.மேட்டுப்பட்டியிலிருந்து அரை கிலோ மீட்டர் தூரத்தில் உள்ள சுரைக்காய்பட்டி சுடுகாட்டுக்கு அம்புலன்ஸ் சென்றதுடன், சின்னம்மாளின் உறவினர்களுக்கும் தகவல் தெரிவித்தனர். இதையடுத்து உறவினர்கள் சுடுகாட்டுக்கு வந்து சின்னம்மாளுக்கு இறுதிச் சடங்கு செய்தனர். துக்கத்தில் உறவினர்கள் சின்னம்மாள் மீது விழுந்து கதறி அழுதனர். அப்போது திடீரென சின்னம்மாள் கண்விழித்து உறவினர் ஒருவரின் கையை பிடித்து தண்ணீர் கேட்டார்.

இதைபார்த்து அதிர்ச்சி அடைந்த உறவினர்கள் பயத்தில் ஓட்டம் பிடித்தனர்.

அப்போதுதான் அவருக்கு உயிர் இருப்பது தெரியவந்தது. பின்னர் அம்புலன்சை திரும்ப வரவழைத்து நேற்றுமுன்தினம் நண்பகல் அவரை திருச்சி அரசு மருத்துவமனயைில் சேர்த்தனர். அங்கு தீவிர சிகிச்சை பிரிவில் அவர் அனுமதிக்கப்பட்டார். அங்கு 2 ஆவது நாளாக நேற்றும் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இந்தசம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT