கிளிநொச்சி காவேரிக் கலாமன்றம், கிளிநொச்சி ரொட்ரிக் கழகம் ஆகியன இணைந்து சப்ரகமுவ மாகாணத்தில் கேகாலை, இரத்தினபுரி மாவட்டங்களிலுள்ள மலையக தமிழ் பாடசாலை அதிபர், ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் வருடாந்த குறிஞ்சி மலர் விருது வழங்கும் நிகழ்வு அண்மையில் இடம்பெற்றது.
கிளிநொச்சி காவேரிக் கலாமன்றம் கிளிநொச்சி நகர ரொட்ரிக் கழகம் ஆகியன இணைந்து வருடாந்தம் நடத்தும் சப்ரகமுவ மாகாணத்திலுள்ள மலையக தமிழ் தோட்டப்புற பாடசாலைகளின் கல்வி மேம்பாட்டைக் கருத்திற்கொண்டு சிறந்த அதிபர், ஆசிரியர் மற்றும் மாணவர்களை கௌரவிக்கும் நிகழ்வு இரத்தினபுரி புதிய நகர சமுர்த்தி வரவேற்பு மண்டபத்தில் காவேரிக் கலாமன்றத்தின் இயக்குனர் அருட் தந்தை யோசுவா தலைமையில் இடம்பெற்றது.
இந் நிகழ்வில் பிரதம விருந்தினர்களாக யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி, இங்கிலாந்து ஓய்வு பெற்ற நீதிபதி ஜெனிபர் ஸ்மித் ஆகியோர் கலந்துகொண்டனர்.
இதில் கிளிநொச்சி நகர் ரொட்ரிக் கழகத்தின் தலைவர் இ. ஜயசீலன், இலங்கை திறந்த பல்கலைக்கழக இணைப்பாளர் ஓய்வுநிலை அதிபர் பெருமாள் கணேசன், கிளிநொச்சி முருகானந்தா கல்லூரி அதிபர் அ. பங்கையற்செல்வன், தொழிலதிபர் ந.சிவகுமார், திருமதி க. ரதிகுமார் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.
இதன் போது தமிழ், விஞ்ஞானம், கணிதம், ஆங்கிலம், வரலாறு, மற்றும் ஐந்தாம் ஆண்டு புலமைப் பரிசில் ஆகிய கற்கைத் துறைகளில் சிறந்த பரீட்சைப் பெறுபேறுகளைப் பெற்ற ஆசிரியர் ஆசிரியைகளையும் மற்றும் சிறந்த அதிபர்களையும் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்ற மாணவர், மாணவிகளையும் பாராட்டி பணப் பரிசுகள், சான்றிதழ்கள், விருதுகள் வழங்கி கௌரவிக்கப்பட்டனர். இவ்விருது வழங்கலின் போது தலா ஒவ்வொருவருக்கும் முதல் பரிசாக 20,000 ரூபாவும் இரண்டாம் பரிசாக 15000 ரூபாவும் மூன்றாம் பரிசாக 10,000 ரூபாவும் சன்மானமாக வழங்கி வைக்கப்பட்டன. இதில் பூச்சாண்டி நாவல் பற்றி மதிப்பீடுகளை எழுதிய மாணவர், மாணவிகளுக்கு பரிசில்கள் வழங்கி வைக்கப்பட்டன.
அதேவேளை, இந்நிகழ்வில் நிகழ்ச்சித் தொகுப்பினையும் காவேரிக் கலாமன்றத்தின் இயக்குனர் அருட் தந்தை யோசுவா திறன்பட செய்தமை குறிப்பிடத்தக்கது.
பிரதம விருத்தினராகக் கலந்து கொண்ட யாழ். போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் த. சத்திய மூர்த்தி உரையாற்றும் போது, உங்கள் முகங்களைப் பார்க்கின்றபோது மனதிற்கு ரொம்ப சந்தோஷம். ஏனென்றால் இங்குள்ள அனைவரும் அதிபர்களும் ஆசிரியர்களும் இருக்கின்றார்கள். நானும் பெரும்பாலான காலங்களில் மாணவராகவே இருந்துள்ளேன்.
இந்த கௌரவிப்பு நிகழ்வில் நல்ல ஆசிரியர், அதிபர் எனக்கு என்ன செய்தார்கள் என்பதை மாத்திரம் கூற விரும்புகின்றேன். சமீபத்தில் பௌதீகவியல் ஆசிரியர் என்னைச் சந்தித்தார். அவர் 35 வருடங்களுக்கு முன்னர் கற்பித்தவர். ‘தம்பிவா…’ என்றார். அப்பொழுது அவர் நகரில் வந்து இறங்கினால் ஆசிரியரை சைக்கிளில் ஏற்றிச் செல்லவேண்டும். ஒரு தடவை அவர் ‘முதல் நாளிலும் என்னை நீதான் ஏற்றிச் சென்றாய் சரி இன்றைக்கு உனக்கு ஒரு வேலை இருக்கிறது. என்னை நான் இருக்கின்ற இடத்திற்கு கொண்டு போய் விடு’ என்றார். ஆசிரியர் நானும் செல்லும் போது நாம் நிறைய விடயங்களைக் கதைத்து கொண்டுச்சென்றோம்.
அப்பொழுது, ஆசிரியையுடைய தங்கையின் மகள் என்னை கேட்டார் ‘நீ வா என்று ஏன் கதைக்கின்றீர்கள்’ என்று என்னிடம் வினவினார். ஆசிரியர் என்று சொன்னால் நாங்கள் அப்பவும் மாணவன் இப்பவும் மாணவன். அந்த அன்பு மாறாது.
எங்களுடைய ஆரம்பகாலம் மிகவும் சந்தோசமாகவும் குதூலகமாவும் இருந்தது. அதற்கான முக்கிய காரணம் உங்களைப் போன்ற அதிபர் ஆசிரியர்கள் மாணவர்களை அன்பாக அரவணைத்ததே ஆகும். நானும் நண்பர் பங்கையற் செல்வாவும் ஒரே பாடசாலையில் தான் கற்றோம். ஆரம்ப காலங்களில் பாடசாலை செல்லும் போது என்னைப் போன்று பல மாணவர்கள் காலில் செருப்புபோட்டுச் செல்லவில்லை. எனது அப்பா அம்மா ஆகிய இருவரும் நான் வைத்தியராக வர வேண்டும் என்ற நோக்கத்தோடு அனுப்பவில்லை. ஆனால் தெருக்கள் பாதுகாப்பாக இருந்தது. நாங்கள் வீதிகளில் சந்தோசமாக இயற்கையை ரசித்து பாடசாலைக்கு நேரத்திற்குச் சென்றடைந்தோம். எப்போதும் பாடசாலையில் தான் நீ நன்றாகப் படிக்கவேண்டும் என்ற ஊக்கத்தையும் வழிகளையும் காட்டினார்கள்.
நான் க. பொ. த சாதாரண தரம் படிக்கும் மட்டும் அந்தப் பாடசாலையில் விஞ்ஞானப் பிரிவு இருக்கவில்லை. எங்களுடைய அதிபர் விஞ்ஞானப் பிரிவை ஆரம்பிக்கப் போகின்றோம் என்று எங்களைத் தூண்டினார். அவர் என்னிடம் படிக்கிறாயா என்று கேட்டார். நான் படித்துப் பார்க்கிறேன் என்றேன். ஏனென்றால் விஞ்ஞானம் கற்பதாக இருந்தால் தொலை தூரம் செல்லவேண்டும். அது கஷ்டம். வர்த்தகப் பிரிவில் கற்க ஆரம்பித்தேன். அதிபர் சொன்னார் ‘விஞ்ஞானப் பிரிவு ஆரம்பிக்கப்பட போகிறது நீ படி’ என்றார்.
அதிபருடைய முயற்சி என்னை விஞ்ஞானப் பிரிவு மாணவனாக்கி பிற்காலத்தில் வைத்தியராக வருவதற்கு உந்துசக்தியாக இருந்தது. இரத்தினபுரி மகா வித்தியாலயத்தில் அதே சம்பவங்கள் நடைபெற்று இருக்கின்றது. ஆகவே இப்படித்தான் மிகக் கஷ்டப்பட்ட இடங்களிலும் மாற்றங்கள் இப்போதும் சரியான முறையில்தான் நடந்துகொண்டிருக்கிறது. இதற்குக் காரணம் உங்களைப்
போன்ற நல்ல ஆசிரியர்கள். நாங்கள் பாடசாலையில் கற்கின்றபோது ஒரு நெருக்குதலையோ கஷ்டங்களையோ எதிர்கொள்ளவில்லை. நாங்கள் பாடசாலைக்குச் செல்வது என்பது குதூகலகமாகத்தான் இருந்தது.
இப்படி எங்களை ஊக்குவிக்க ஆசிரியர்கள் இருந்தார்கள். அது இப்பவும் ஞாபகம் வருகிறது. சப்ரகமுவ மாகாணத்திலுள்ள மாணவர்களை ஊக்குவிக்கின்ற தன்மை இங்கு வந்திருக்கின்ற உங்களிடத்திலும் இருக்கிறது. இரண்டு மாணவர்கள் ஒன்பது ஏ சித்திகளைப் பெற்று இருக்கிறார்கள். நிறைய மாணவர்கள் நல்ல பெறுபேறுகளைக் கொண்டிருக்கிறார்கள். பாடசாலைகளில்
கல்வியோடு பல விடயங்களைக் கற்றுக் கொண்டோம். எங்களுடைய இளமைக் காலம் இரத்தினபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிக் கூடங்கள் போல்தான் இருந்தது. உங்களிடத்தில் மலர்ச்சியான முகம் காணப்படுகின்றது. இது ஒரு அருமையான நிகழ்வு ஆகும். கட்டாயம் அதிபர்களும் ஆசிரியர்களும் மாணவர்களும் கௌரவிக்கப்படவேண்டும். தொலை தூரத்தில் இருந்துவந்து உங்களை வாழ்த்துவது எங்களது ஆசிரியர்களை வாழ்த்துவது போன்ற உணர்வு ஏற்படுகிறது.
நான் முன்னேறுவதற்கான வழியை பாடசாலை உருவாக்கிவிட்டது. நான் முன்னேறுவதற்கு எந்தத் தடைகளும் இல்லை. நான் ஒரு நல்ல நிலையில் இருப்பதற்கு அதிபர்களும் ஆசிரியர்களும் காரணம் ஆகும். அந்தவகையில் அவர்களை எண்ணி உங்களை வாழ்த்தி விடை பெறுகின்றேன் என்று அவர் மேலும் தெரிவித்தார்.
கிளிநொச்சி முருகானந்தா அதிபர் அ. பங்கையச் செல்வன் அவர்கள்
உரையாற்றும் போது, நான் இரண்டு தடவை இலங்கை அரசாங்கத்தினால் வழங்கப்படுகின்ற நல் அதிபர் விருதைப் பெற்று இருக்கின்றேன். ஆயினும் அந்த இடத்தில் இருந்த பெருமையை விட இந்த இடத்தில் இருக்கின்ற பெருமை மிகவும் சிறப்பாக இருக்கின்றது.
ஏனெனில் காவேரிக் கலாமன்றத்தின் இந்த முயற்சி ரொட்ரிக் கழகத்தினுடைய முயற்சிகளின் பிரதிபலனாக இங்கே ஆசிரியர்கள் கௌரவிக்கப்பட இருப்பதையிட்டு நான் மிகவும் மகிழ்ச்சிடையின்றேன்.
ஏனெனில் இவ்வாறான நிகழ்வுகள் நடைபெறுவது என்பது மிக அரிதாகும். ஆசிரியர் சமூகத்தை அதிபர் சமூகத்தையும் ஏற்றிப் போற்றுவதற்கு யாருமே வருவதில்லை. ஆனால் ஆசிரியர்கள் அதிபர்கள் எங்கேயாவது ஒரு ஓரிடத்தில் தவறுகள் விடுகின்றபோது அதைக் குறை கூறுவதற்கு பெரியதொரு சமூகம்
பின்னால் இருக்கும். ஆசிரியர்களுடைய செயற்பாடுகளை பெருமைப்படுத்துவதற்கு மிகக் குறைவான சமூகமே இருக்கிறது என்று கருதுகின்றேன். உண்மையிலேயே காவேரிக் கலாமன்றமும் ரொட்ரிக் கழகமும் இவ்வாறான செயலைச் செய்வது பெருமை தரும் விடயம்.
நான் பாடசாலையில் இருக்கின்ற பொழுது காவேரிக் கலாமன்றத்தின் இயக்குனர் தொலைபேசி அழைப்பினை மேற்கொண்டார். இரத்தினபுரியில் இப்படியான விருதினை வழங்க இருக்கின்றோம் அந்த விருது வழங்குகின்ற செயற்பாட்டினுடைய குழுவின் தலைவராகவும் இருக்கமுடியுமா என்று என்னிடம் கேட்டார். நான் உடனடியாக ஆம் என்று சொன்னேன். ஏனென்றால் கற்றோரை கற்றவர்கள்தான் காமுருவர்.
நான் அதிபர் என்ற வகையில் என்னால் மறுக்கமுடியாது. அந்த வகையில் விதிமுறைகள் அறிவிக்கப்பட்டு உங்களிடமிருந்து விண்ணப்பங்கள் கோரப்பட்டன. அந்த விண்ணப்பங்களைக் கோரிய பொழுது இறுதி முடிவு செய்கின்ற குழுவில் நானும் இங்கே இருக்கின்ற கண்ணன் என்று சொல்லப்படுகின்ற கஜந்தகுமாரும் காவேரிக் கலாமன்றத்தின் இயக்குனர் வண. பிதா யோசுவா அவர்களுடைய உத்தியோகஸ்த்தர்கள். அந்த இடத்தில் கூடியிருந்தோம். ஆரம்பத்தில் எவ்வாறு முடிவு செய்வது என்றநிலை இருந்த பொழுது ஒரு விஞ்ஞான ரீதியாக இந்த ஆசிரியர்களைத் தெரிவுசெய்யலாம் என்றவகையில் பல தடவைகள் சிந்தித்து இறுதியாக கண்ணன் அவர்கள் எனது நண்பர் பேராசிரியர் மோகன்ராஜ் அவர்களைத் தொடர்பு கொண்டோம்.
அவர் அமெரிக்கா பல்கலைக்கழகத்தில் விரிவுரையாளராகக் கடமையாற்றுகின்றார். அவரிடம் கதைத்தபோது அவர் அதை எவ்வாறு மதிப்பிடவேண்டும் என்பதற்காக ஒரு மாதிரி முறை ஒன்றை அனுப்பியிருந்தார். அந்த வகையில் பாடசாலைகள் பெறுபேற்றைப் பதிவு செய்தோம். அந்தப் பெறுபேற்றின் அடிப்படையில் நாங்கள் விருதுக்கான தெரிவுகளை மேற்கொண்டோம்.
2021, 2022, 2023 ஆகிய ஆண்டுகளைத் கவனத்திற் கொண்டு அதற்கு அதிபர் எந்தளவுக்கு பங்களிப்புச் செய்துள்ளார் என்பதினைக் கொண்டு தெரிவு செய்திருக்கின்றோம். ஆசிரியர்களைத் தெரிவுசெய்யும் போது 2023 ஆண்டைக் கவனத்திற் கொண்டு தெரிவு செய்திருக்கின்றோம். கல்வி அடைவு மட்டத்தைக் கருத்திற் கொண்டே இந்தவிருதுகள் யாவும் வழங்கப்படுகின்றன. சில பாடசாலைகளில் ஆசிரியர்கள் தொடர்ந்து பணியாற்றியிருக்கின்றார்கள். பெறுபேற்றைக் காணவில்லை. அது கவலை தரும் விடயம். ஆசிரியர்கள் இடமாற்றத்தின் மூலம் நல்ல பெறுபேறுகள் பாடசாலைகளுக்கு கிடைப்பதை இதன் மூலம் அதானிக்கக் கூடியதாக இருந்தது.
இந்நிகழ்வில் விசேட வளவாளராகக் கலந்துகொண்ட இலங்கை திறந்த பல்கலைக்கழக இணைப்பாளர் ஓய்வுநிலை அதிபர் பெருமாள் கணேசன் உரையாற்றும் போது,
கல்விக்குக் கிடைக்க வேண்டிய ஊக்கமும் வளமும் மனப்பாங்கும் மலையகச் சமூகத்திற்கு கிடைக்கவில்லை என்பதற்காக அந்த இடைவெளியை நிரப்புவதற்கு அருட் தந்தை யோசுவா அவர்களின் தலைமையில் காவேரிக் கழகம், ரொட்ரிக் கழகம் சேர்ந்து கிளிநொச்சி சமூகமும் சேர்ந்து முன்னெடுத்து இருக்கின்ற ஒரு பணியாக இந்நிகழ்வினை பெருமையோடு நான் பார்க்க விரும்புகின்றேன். எனவே உங்களுடைய ஊக்கம் உங்களுக்கு கிடைக்கவேண்டும். வளங்கள் உங்களுக்கு கிடைக்கவேண்டும் உங்கள் மனப்பாங்கிலே மாற்றம் ஏற்படவேண்டும். மாற்றம் என்பது தன்நம்பிக்கை ஏற்படவேண்டும். இவ்வாறான விருது வழங்குதல் அதிபர்களின் ஊடாக ஆசிரியர்களையும் அதிபர்களையும் ஊக்குவிக்கின்ற பணி நிகழ்கிறது.
எவ்வாறாயினும் நாங்கள் பணியாற்றுகின்ற சமூகம் மெல்லனப் பாய்கின்ற சமூகமாகத்தான் இருக்கின்றது. கொழும்பு, யாழ்ப்பாணம், கண்டி நகரிலுள்ள பாடசாலைகளைப் போலவே அல்ல. வளர்ந்த பாடசாலைகளைப் போல் அல்லாது தானே எல்லாம் செய்கின்ற பாடசாலைகளுக்கு நாங்கள் இந்த விருதினை வழங்குகின்றோம். அதிபர்கள் தகப்பனாகவும் இருக்கவேண்டும். தாயாக இருக்கவேண்டும். பிள்ளைகளுடைய சமூகத் தலைவர்களாகவும் இருக்கவேண்டும். பல்வேறு பாத்திரங்களை அதிபர்களும் ஆசிரியர்களும் எடுத்துத்தான் இந்த சமூகத்தை மேலும் முன்னேற்ற வேண்டியிருக்கின்றது. அந்தப் பணியை நாங்கள் எங்களுடைய பாடசாலைகளில் செய்தோம். பொறுப்பற்ற சமூகத்தில் பொறுப்பான வேலைகளை ஆசிரியர்களும் அதிபர்களும் நாங்கள் நிகழ்த்தினோம். அதனால் கணிசமான பிள்ளைகளை உயர்த்தக் கூடியதாக இருந்தது. கல்வியிலே கொண்டு வந்துவிட கூடியதாக இருந்தது. அந்த வலி அந்தச் சுமை உங்களுக்கும் இருக்கும் என்று நான் நூறு விகிதம் நம்புகின்றேன். கூட்டத்திற்கு வரமாட்டார்கள், ஒத்துழைக்கமாட்டார்கள். தங்களுடைய பிள்ளைகள் படிக்கிறது என்று துக்கமோ, கவலையோ அந்தப் பிள்ளை பற்றிய கனவோ இருக்காது. அந்தப் பிள்ளைகளுடைய கனவை விதைக்கவேண்டியது இந்தப் பிள்ளைகளும் ஆசிரியர்களும் அதிபர்களும் தான். பிள்ளைகளுக்கு பொருளாதார ரீதியாக உதவ வேண்டியதும் எங்களுடைய பொறுப்பாகவே இருக்கும். எனவே இந்தப் பொறுப்புக்களிலிருந்து நீங்கள் சலிக்கக் கூடாது என்பது என்னுடைய கருத்தாக இருக்கிறது. நீங்கள் பொறுப்புக்களில் சலிப்பீர்களாக இருந்தால் இந்த 21 ஆம் நூற்றாண்டை கடந்து 22 ஆம் நூற்றாண்டை எங்களது சமூகம் எட்டும் பொழுதும் நாங்கள் வளர்ச்சியடையாத சமூகமாகவே இருப்போம். இப்பொழுது இருப்பது போலவே நாம் இருப்போம்.
கிளிநொச்சி ரொட்ரிக் கழக சங்கத்தின் தலைவர் இ. ஜயசீலன் உரையாற்றும் போது;
இரத்தினபுரி என்கின்ற அழகிய தேசத்திற்கு முதல் தடவையாக எனது காலை இங்கு பதித்து இருக்கின்றேன். இந்தச் சந்தர்ப்பத்தை ஏற்படுத்தித் தந்த வணத்திற்குரிய அருட் தந்தை யோசுவா அவர்களுக்கு எனது மனமார்ந்த நன்றிகள்.
இவ்வளவு காலமும் இயற்கையை ரசிக்காத ஒருவனாக இருந்திருக்கின்றேன். எனினும் அதனுடைய பயனை ரசித்தவனாகவும் அதற்கு மேலாக இந்தப் பெருமைமிகு அரங்கிலே விருதுபெறுகின்ற கல்வியாலளர்கள் ஆசிரியர்கள் அதிபர்கள் கலந்துகொள்ளகின்ற விழாவில் கலந்து கொள்ளக் கிடைத்தமைக்கு நான் மகிழ்ச்சியடைகின்றேன்.
உங்களுக்கு விருது தருவதன் மூலம் நான் பெருமை அடைகின்றேன். இந்த வாய்ப்பினை உருவாக்கித் தந்த இறைவனுக்கும் இந்த விருதைப் பெற்றுக் கொள்ளவுள்ள உங்களுக்கும் எனது மனமார்ந்த நன்றிகள்.