Sunday, November 24, 2024
Home » விமானப்படை உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் நியமனம் பெற்ற அளிக்கம்மை மாணவர்கள்

விமானப்படை உடற்கல்வி பயிற்றுவிப்பாளர் நியமனம் பெற்ற அளிக்கம்மை மாணவர்கள்

by mahesh
November 20, 2024 7:00 am 0 comment

அம்பாறை மாவட்டத்தின் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் பிரிவிலுள்ள மிகவும் பின்தங்கிய கிராமமான அளிக்கம்பை தேவகிராமத்தைச் சேர்ந்த மாணவர்கள் இருவர் இலங்கை விமானப்படையின் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக நியமனம் பெற்றுள்ளனர்.

இம்மாணவர்களுக்கு மகத்தான வரவேற்பளிக்கப்பட்டது. இவர்களை கௌரவிக்கும் நிகழ்வு அளிக்கம்பை தேவகிராமத்தில் சென்சபேரியர் தேவாலயத்தில் பங்குத்தந்தை தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் ஆலையடிவேம்பு பிரதேச செயலாளர் ஆர்.திரவியராஜ் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டு வாழ்த்துத் தெரிவித்தார்.

இதேநேரம் திருக்கோவில் கல்வி வலயத்தின் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலய மாணவிகளான டி.கலிஸ்ரா மற்றும் எம்.வாணி ஆகிய இருவருக்கும் மற்றுமொரு மாணவனான அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசிய பாடசாலை மாணவன் சுலக்ஷனுக்கும் பாடசாலை அதிபர் திருமதி ஆர்.நித்தியானந்தன் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொண்டார்.

இவர்களுக்கான பாடசாலை மட்ட பயிற்சியை வழங்கிய கல்வி இணைப்பாளர் திருமதி நிறோஜினி சிவரூபன் மற்றும் ஒத்துழைப்பு வழங்கிய வலயக் கல்விப்பணிப்பாளர் ஆர்.உதயகுமார், பிரதி அதிபர் கே.ஜனார்த்தன், உதவி அதிபர் என்.நேசராஜா உள்ளிட்டோருக்கும் நன்றி தெரிவிக்கப்பட்டது. குறித்த மாணவர்கள் அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண மிஷன் மகாவித்தியாலயத்தில் 13 வருட உத்தரவாத கல்வியில் 2021/2022 இல் உடற்கல்வியிலும் விளையாட்டுப் பாடத்திலும் தெரிவு செய்யப்பட்டு ஊவா விளையாட்டுப் பயிற்சி நிலையத்திற்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

அங்கு உடற்கல்வி, விளையாட்டுப் பயிற்சி நெறியினை சிறப்பாக பூர்த்தி செய்து இலங்கை விமானப்படையின் உடற்கல்வி பயிற்றுவிப்பாளர்களாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளனர்.

நியமனம் பெற்ற ச.சுலக்ஷன் அக்கரைப்பற்று விபுலானந்தா சிறுவர் இல்லத்தில் இருந்து கல்வி கற்ற அக்கரைப்பற்று ஸ்ரீ இராமகிருஷ்ண தேசியப் பாடசாலை மாணவராவார். இல்லத்தின் தலைவர் த. கயிலாயபிள்ளை உள்ளிட்ட இல்ல இயக்குனர் சபையினர் வாழ்த்துகளை தெரிவித்துக்கொண்டனர்.

வி. சுகிர்தகுமார் 
வாச்சிக்குடா விசேட நிருபர்

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT