Sunday, November 24, 2024
Home » சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுத்தேர்தல்

சர்வதேச அங்கீகாரம் பெற்ற பொதுத்தேர்தல்

by mahesh
November 20, 2024 6:00 am 0 comment

இலங்கையில் நடந்து முடிந்த பத்தாவது பாராளுமன்ற தேர்தல் அமைதியாவும் நியாயமாகவும் நடைபெற்றதாக சர்வதேச தேர்தல் கண்காணிப்பாளர்கள் தெரிவித்துள்ளனர். இது இலங்கையின் ஜனநாயக விழுமியங்களின் மேம்பாட்டுக்கு கிடைக்கப்பெற்றுள்ள மற்றொரு அங்கீகாரமாகும்.

அதேநேரம் தேர்தல் ஜனநாயகத்தைப் பலப்படுத்த நாட்டு மக்கள் அளித்துள்ள பங்களிப்பையும் இந்த அறிவிப்பு வெளிப்படுத்தி நிற்கின்றது.

நாட்டின் பத்தாவது பாராளுமன்றத் தேர்தல் கடந்த 14 ஆம் திகதி நடைபெற்றது. 225 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடாத்தப்பட்ட இத்தேர்தலில் 8888 பேர் அபேட்சகர்களாகப் போட்டியிட்டனர். இவர்களைத் தெரிவு செய்யவென இத்தேர்தலில் ஒரு கோடியே 71 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்தத் தகுதி பெற்றிருந்தனர். அவர்களில் ஒரு கோடியே 18 இலட்சத்துக்கும் மேற்பட்ட மக்கள் வாக்களித்தனர்.

அதேநேரம் தேர்தல் மற்றும் பாதுகாப்பு கடமையில் ஈடுபட்ட ஏழு இலட்சத்துக்கும் மேற்பட்டவர்கள் முன்கூட்டியே தபால் மூலம் வாக்களித்தனர். ஏனையவர்கள் தேர்தல் தினத்தன்று தங்கள், தங்கள் பிரதேசங்களில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையங்களில் வாக்குகளை அளித்தனர்.

இதன் நிமித்தம் பாடசாலைகள், மத வழிபாட்டு தலங்கள் உட்பட நாடெங்கிலும் 13 ஆயிரத்து 421 வாக்களிப்பு நிலையங்கள் அமைக்கப்பட்டிருந்தன. அத்தோடு தேர்தல் பாதுகாப்பு கடமையில் 63 ஆயிரத்து 145 பொலிஸாரும், 12 ஆயிரத்து 227 சிவில் பாதுகாப்பு உத்தியோகத்தர்களும் ஈடுபடுத்தப்பட்டனர். இவர்கள் ஊடாக 3109 பொலிஸ் நடமாடும் சேவைகள் முன்னெடுக்கப்பட்டன.

நாடெங்கிலும் 269 வீதித் தடைகளை ஏற்படுத்தி விஷேட சோதனைகளும் தேர்தல் காலத்தில் முன்னெடுக்கப்பட்டன. இவர்களுக்கு மேலதிகமாக 214 கலகத் தடுப்பு குழுக்களை தயார் நிலையில் வைக்கப்பட்டன. புலனாய்வு உத்தியோகத்தர்களும் கூட கடமையில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர்.

தேர்தலை சீர்குலைக்கும் வகையிலான எந்தவொரு நாசகார செயற்பாட்டுக்கும் இடமளிக்காத வகையில் நாட்டின் பாதுகாப்பு உச்சளவில் பலப்படுத்தப்பட்டிருந்தது.

மேலும் இத்தேர்தலை கண்காணிக்கும் பணியில் ஐரோப்பிய ஒன்றியம், யுன்பெல் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் மாத்திரமல்லாமல் பெப்ரல், க​பே போன்ற உள்நாட்டு கண்காணிப்புக் குழுக்களும் பணியில் ஈடுபட்டிருந்தனர். குறிப்பாக பத்தாயிரத்துக்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டிருந்தனர். அவர்களில் 43 பேர் வெளிநாட்டு கண்காணிப்பாளர்கள் ஆவர்.

அதேவேளை, இத்தேர்தல் கண்காணிப்பு பணியின் நிமித்தம் தேர்தல்கள் ஆணைக்குழுவின் அழைப்புக்கு ஏற்ப வருகை தந்திருந்த ஐரோப்பிய ஒன்றியத்தைச் சேர்ந்த மூன்று பேரும் யுனிபெல் அமைப்பை சேர்ந்த 30 பேரும் பணியில் ஈடுபட்டதோடு அயல்நாடுகளில் இருந்தும் 10 பிரதிநிதிகள் வருகை தந்து இத்தேர்தல் கணிகாணிப்பு பணிகளில் பங்கேற்றனர்.

இவை இவ்வாறிருக்க, சுதந்திரமானதும் நீதியானதுமான தேர்தலுக்கான மக்கள் அமைப்பு எனப்படும் பெப்ரல் அமைப்பு ஐயாயிரம் பேரை தேர்தல் கண்காணிப்பாளர்களாகவும் கடமையில் ஈடுபடுத்தவும் தேர்தல்கள் ஆணைக்குழு அனுமதி வழங்கி இருந்தது.

இவ்வாறு விரிவான ஏற்பாடுகளுடன் இத்தேர்தல் நடாத்தப்பட்டது.

ஆன போதிலும் கடந்த காலங்களில் போன்று இத்தேர்தலில் வன்முறைகளும் சண்டை சச்சரவுகளும் பெரிதாகப் பதிவாகவில்லை. அவை மக்களால் பெரும்பாலும் நிராகரிக்கப்பட்ட ஒன்றாகவே இருந்தது. ஆனால் மக்கள் தேர்தலில் அதிகம் ஆர்வம் காட்டினர். அவர்கள் தேர்தல் கால வன்முறைகளுக்கும் சண்டை சச்சரவுகளுக்கும் வாய்ப்பளிக்கவில்லை.

நாட்டின் பாரம்பரிய கட்சி அரசியல் முறையில் மாற்றம் ஏற்படுத்துவதற்கான சந்தர்ப்பமாக இத்தேர்தலை மக்கள் கருதினர். அதனால் தேர்தலை அமைதியாகவும் நேர்மையாகவும் நடாத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழுக்கு முழுமையான ஆதரவையும் ஒத்துழைப்பையும் அவர்கள் நல்கினர்.

நாட்டில் காணப்படும் ஊழல் மோசடிகளையும் பொதுச்சொத்து வீண்விரயங்களையும் முடிவுக்கு கொண்டு வர வேண்டும். அதற்கு மாற்றம் அவசியம் என்பதை மக்கள் எதிர்பார்ப்பாக இருந்தது. அதனால் ஒரே இலக்குடன் அமைதியாக செயற்பட்டு மாற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.

இவ்வாறான சூழலில் இத்தேர்தல் கண்காணிப்பு பணியில் ஈடுபட்ட ஐரோப்பிய ஒன்றிய தேர்தல் கண்காணிப்பு குழுவும் யுன்பெல் குழுவும், பொதுத்தேர்தல் அமைதியாகவும் நீதியாகவும் நடந்து முடிந்துள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது. பாராளுமன்றத் தேர்தல் கண்காணிப்பு தொடர்பில் சமர்ப்பித்துள்ள இறுதி அறிக்கையிலேயே அந்த வெளிநாட்டு அமைப்புக்கள் இதனை சுட்டிக்காட்டியுள்ளன. இதன் ஊடாக இந்நாட்டின் தேர்தல் ஜனநாயக விழுமியங்களின் மேம்பாட்டுக்கு மக்கள் அளித்துள்ள ஆதரவும் ஒத்துழைப்பும் தெளிவாக எடுத்துக்காட்டப்பட்டுள்ளது. இது இந்நாட்டு வாக்காளர்களுக்கு கிடைக்கப்பெற்றுள்ள கௌரவம் என்றால் அது மிகையாகாது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT