இலங்கையில் தேங்காய் மற்றும் பாலை மூலமாகக் கொண்ட தயாரிப்புத் தொழிற்துறைகளுக்கு முழுமையான பொறியியல் தீர்வுகளை வழங்குவதில் முன்னிலை வகித்து வருகின்ற ஒரு நிறுவனமான ISF, இந்தோனேசியாவில் தேங்காயை மூலமாகக் கொண்ட தயாரிப்புக்களை உற்பத்தி செய்வதில் முன்னிலை வகித்து வரும் PT. Natural Indococonut Organik (NICO COCO) என்ற நிறுவனத்துடன் புரிந்துணர்வு உடன்படிக்கையொன்றில் கைச்சாத்திட்டுள்ளது. ஜகர்த்தா நகரில் INASCA (இந்தோனேசியா தெற்கு மற்றும் மத்திய ஆசியா) வர்த்தக அமர்வின் போது கைச்சாத்திடப்பட்ட இந்த உடன்படிக்கையானது, பிராந்தியத்தில் தேங்காயை மூலமாகக் கொண்ட தயாரிப்புக்களின் தொழில்நுட்பத்தில் கணிசமான மேம்பாடுகளைத் தோற்றுவிக்கவுள்ளது. இக்கூட்டாண்மையினூடாக, NICO COCO இற்காக அதிநவீன தேங்காயை மூலமாகக் கொண்ட தயாரிப்பு ஆலைகளை ISF வடிவமைப்பதுடன், தனது பல தசாப்தகால அனுபவத்தை இந்தோனேசிய சந்தையிலும் முன்னிலைக்கு கொண்டு வரவுள்ளது.
இந்தியாவிலும் முன்னணி செயற்பாட்டாளராக தன்னை நிலைநிறுத்தியுள்ள ஒரு இலங்கை நிறுவனமான ISF, கிட்டத்தட்ட ஐந்து தசாப்தகால தொழிற்துறை அனுபவத்தைக் கொண்டுள்ளது. மூலப்பொருட்களிலிருந்து தயாரிப்புக்களை வெளிக்கொண்டு வருகின்ற இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வடிவமைத்து, உற்பத்தி செய்வதில் பாண்டித்தியம் பெற்றுள்ள ISF, தேங்காய் மற்றும் பால் ஆகியவற்றை மூலமாகக் கொண்ட தயாரிப்புக்களை மேற்கொள்ளும் நிறுவனங்களின் தேவைகளுக்கென பிரத்தியேகமாக வடிவமைக்கப்பட்ட, புத்தாக்கமான தீர்வுகளை முழுமையாக வழங்குகின்றது. உற்பத்தித்திறனை மேம்படுத்துவதால் உற்பத்திச் செலவுகளை குறைப்பதில் இந்நிறுவனம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருவதுடன், அதன் செயற்பாடுகள் அனைத்திலும் தன்னியக்கமயமாக்கம் மற்றும் எரிசக்தி பயன்பாட்டுத்திறன் தீர்வுகளை வழங்கி, இத்துறையில் முன்னிலை வகிக்கும் நிறுவனமாக தன்னை நிலைநிறுத்தியுள்ளது. செயற்கை நுண்ணறிவை உள்ளிணைத்து, ISF வழங்கும் தன்னியக்கமயப்படுத்தப்பட்ட உற்பத்தி செயல்முறைத் தீர்வுகள் நிகழ்நேர முகாமைத்துவ தகவல் விபரங்களை வழங்குவதுடன், நவீன தொழில்நுட்பவியல் மேம்பாடுகளுக்கு அமைவாக செலவுகளை சேமிப்பதற்கான வழிமுறைகளுக்கும் உதவுகின்றன.