பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வு நாளைய தினம் (21) ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவின் தலைமையில் முற்பகல் 10.00 மணிக்கு ஆரம்பமாகவுள்ளது.
பத்தாவது பாராளுமன்றத்திற்கான முதலாவது அமர்வை மிக எளிமையான முறையில் நடத்துவதற்கு, நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர தெரிவித்துள்ளார்.
காலை 10.00 மணிக்கு ஆரம்பமாகும் கூட்டத் தொடரையடுத்து முற்பகல் 11:30 மணிக்கு ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க அரசாங்கத்தின் கொள்கை பிரகடனத்தை சபையில் முன்வைத்து விசேட உரை நிகழ்த்தவுள்ளார். அரசியலமைப்பில் 33 (அ) உறுப்புரையின் படி பாராளுமன்ற கூட்டத்தொடர் ஒன்றின் ஆரம்பத்தில் அரசாங்கத்தின் கொள்கைப் பிரகடனத்தை சபையில் சமர்ப்பிப்பதற்கும் அரசியலமைப்பின் 33 (ஆ) உறுப்புரைக்கு இணங்க பாராளுமன்றத்தில் வைபவ ரீதியான அமர்வுகளுக்கு தலைமை தாங்குவதற்கும் ஜனாதிபதிக்கு அதிகாரம் காணப்படுவதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
அந்த வகையில் அரசாங்கத்தின் எதிர்கால செயற்பாடுகள் தொடர்பான விளக்கமான கொள்கை பிரகடனத்தை பாராளுமன்றத்தில் சமர்ப்பித்து ஜனாதிபதி நாட்டு மக்களுக்கு உரையாற்றுவார்.
அந்த வகையில் இம்முறை பத்தாவது பாராளுமன்றத்தின் முதலாவது அமர்வை எளிமையான முறையில் நடத்துவதற்கான ஆலோசனைகள் கிடைக்கப்பெற்றுள்ளதாகவும் பாராளுமன்ற செயலாளர் நாயகம் குஷானி ரோஹணதீர மேலும் தெரிவித்துள்ளார்.
இம்முறை பாராளுமன்றத் தேர்தலில் ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தலைமையிலான தேசிய மக்கள் சக்தி, அமோக வெற்றி பெற்று புதிய அரசாங்கத்தை அமைத்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
லோரன்ஸ் செல்வநாயகம்