முஸ்லிம் மக்களுக்கு சமகால அரசாங்கம் கடுகளவேனும் துரோகம் செய்யாதென, கடற்றொழில் நீரியல் மற்றும் கடல்வளங்கள் அமைச்சர் ராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்தார்.
முஸ்லிம் மக்களும் தேசிய சக்தி அரசாங்கத்துக்கு வாக்களித்திருந்தனர். இருப்பினும் அவர்கள் சார்பில் அமைச்சரவையில் முஸ்லிம் ஒருவருக்கு அமைச்சுப் பதவி வழங்கப்படவில்லை என்று அம்மக்கள் சார்பில் சிலர் குறை தெரிவித்துள்ளனர் என்ற கேள்விக்கு பதிலளிக்கையிலேயே அமைச்சர் இவ்வாறு குறிப்பிட்டார்.
அமைச்சர் நேற்று (19) தமது கடமைகளை அமைச்சில் பொறுப்பேற்றுக்கொண்டார். ஆடம்பரம் ஏதுமின்றி மிகவும் எளிமையான முறையில் நடைபெற்ற இந்நிகழ்வின் பின்னர், கருத்துரைத்த அமைச்சர் தெரிவித்ததாவது:
முஸ்லிம் மக்கள், தமிழர்கள், சிங்களவர்கள் என்ற பேதமின்றி அனைத்து மக்களையும் ஐக்கியப்படுத்திய நல்லிணக்கச் செயற்பாட்டையே அரசாங்கம் முன்னெடுத்துள்ளது. இதில் வடக்கு, கிழக்கு, மலையகம் என்ற பிராந்திய பேதங்களுக்கு இடமில்லை.
இன்னும் சில தினங்களில் பிரதி அமைச்சர்கள் நியமிக்கப்படவுள்ளனர். அப்போது உங்களது இந்தக் குறைக்கு இடமிருக்காது.
மக்களின் அபிலாஷைகளை நிறைவேற்றுவது எமது முக்கிய கடமையும், பொறுப்புமாகும். ஜனாதிபதி தேர்தலைப் போன்றே பொதுத் தேர்தலிலும் மக்கள் இந்த நிலைப்பாட்டுக்கான ஆணையையே வழங்கியுள்ளனர். இவ்வாறு அமைச்சர் தெரிவித்தார்.