பிரதமர் மோடிக்கு நைஜீரிய நாட்டின் உயரிய விருது வழங்கி கௌரவிக்கப்பட்டது
நைஜீரியா, பிரேசில், கயானா நாடுகளுக்கு 5 நாள் பயணமாக நேற்று முன்தினம் (16) புறப்பட்டார் பிரதமர் மோடி.
இந்தலகையில் கடந்த 17 ஆண்டுகளில் நைஜீரியாவுக்கு இந்திய பிரதமர் செல்வது இதுவே முதல்முறை. நேற்று (17) நைஜீரிய தலைநகர் அபுஜாவுக்கு சென்ற மோடியை, அந்நாட்டின் அமைச்சர் நேசாம் எசன்வோ விகே வரவேற்றார்.
இந்தியாவும், நைஜீரியாவும் பல துறைகளில் இணைந்து செயல்பட வேண்டும் என 2007இல் முடிவு செய்யப்பட்டது. அந்த நட்புறவை மேம்படுத்தும் பேச்சு வார்த்தையில் பிரதமர் மோடி ஈடுபட்டார். பொருளாதாரம், எரிசக்தி, பாதுகாப்பு துறைகளில் இருதரப்பு ஒத்துழைப்பை மேம்படுத்துவது குறித்து பேச்சுவார்த்தை நடந்தது.
நைஜீரியாவில் பிரதமர் மோடிக்கு அந்நாட்டின் உயரிய தேசிய விருதான ‘கிராண்ட் கமாண்டர் ஆஃப் தி ஆர்டர் ஆஃப் தி நைஜர் வழங்கப்பட்டது. விருதை பெற்ற பின் பிரதமர் மோடி கூறுகையில், “நைஜீரியாவின் மிக உயர்ந்த விருதை பணிவுடன் ஏற்றுக் கொண்டு, இந்தியாவின் 140 கோடி மக்களுக்கும் அர்ப்பணிக்கிறேன்” என்றார்.
இதற்கு முன் இந்த விருது கடந்த 1969ஆம் ஆண்டில் இங்கிலாந்து ராணி எலிசபெத்துக்கு வழங்கப்பட்டது. இது பிரதமர் மோடிக்கு, வெளிநாடு சார்பில் வழங்கப்படும் 17ஆவது சர்வதேச விருது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியர்களுக்கான மரியாதை: அதன்பின் நைஜீரியாவில் உள்ள இந்தியர்களை பிரதமர் மோடி சந்தித்து பேசினார். அப்போது. “இந்தியாவின் வளர்ச்சியால் நீங்கள் மகிழ்ச்சியடைகிறீர்கள். உங்கள் வளர்ச்சி யால் ஒவ்வொரு இந்தியரும் பெருமிதம் கொள்கின்றனர். எனக்கு நைஜீரியாவின் தேசிய விருதை அளித்து, ஜனாதிபதி தினுபு கௌரவித்துள்ளார். இது மோடிக்கான மரியாதை அல்ல. கோடிக்கணக்கான இந்திய மக்களுக்கான மரியாதை” என்றார்.
நைஜீரியாவில் வசிக்கும் மராத்தி சமுதாயத்தினர் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு அளித்தனர். இதுகுறித்து, எக்ஸ் தளத்தில் பிரதமர் மோடி விடுத்துள்ள தகவலில்,”மராத்திக்கு செம்மொழி அந்தஸ்து வழங்கப்பட்டதற்கு நைஜீரியாவில் உள்ள மராத்தி சமூகத்தினர் மகிழ்ச்சி தெரிவித்தனர். அவர்கள் தங்கள் கலாச்சாரம் மற்றும் வேர் களுடன் இணைந்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்கது” என குறிப்பிட்டுள்ளார்.
நைஜீரிய பயணத்தை முடித்துக்கொண்டு பிரதமர் மோடி பிரேசில் செல்கிறார். ரியோ டி ஜெனிரோ நகரில் இன்றும் (18), நாளையும் (19) நடைபெறும் G20 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி பங்கேற்கிறார். இந்த உச்சி மாநாட்டில் அமெரிக்க ஜனாதிபதி ஜோ பைடன், சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் உட்பட பலர் பங்கேற்கின்றனர்.
நிறைவாக பிரதமர் மோடி கயானா நாட்டுக்கு செல்கிறார். கடந்த 50 ஆண்டுகளில் கயானாவுக்கு செல்லும் முதல் இந்திய பிரதமர் மோடி என்பதும் குறிப்பிடத்தக்கது.