Sunday, November 24, 2024
Home » பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு

பொதுத் தேர்தலைத் தொடர்ந்து மீண்டும் கூடும் தேர்தல் ஆணைக்குழு

- உள்ளூராட்சி மற்றும் மாகாணசபைத் தேர்தல்கள் தொடர்பில் கலந்துரையாடல்

by Prashahini
November 18, 2024 9:58 am 0 comment

பொதுத் தேர்தல் முடிவடைந்ததையடுத்து இம்மாதம் 27ஆம் திகதி தேர்தல் ஆணைக்குழு மீண்டும் கூடும் எனத் தெரிவிக்கப்படுகிறது.

இச்சந்திப்பில் உள்ளூராட்சி தேர்தல் மற்றும் மாகாண சபைத் தேர்தல் தொடர்பில் கலந்துரையாடப்பட உள்ளதெனவும் தற்போது, உள்ளூராட்சி மன்றத் தேர்தலை நடத்துவது தொடர்பாக நீதிமன்ற உத்தரவும் வழங்கப்பட்டுள்ள நிலையில், அது தொடர்பில் கலந்துரையாடுவதே இந்த சந்திப்பின் முக்கிய நோக்கமெனவும் தெரிவித்துள்ளது.

இதேவேளை, எதிர்வரும் உள்ளுராட்சி மற்றும் மாகாண சபைத் தேர்தல்களுக்கான நிதித் தேவையை பாராளுமன்றத்தில் முன்வைக்கவுள்ள இடைக்கால வரவு செலவுத் திட்டத்தில் உள்ளடக்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இந்த இடைக்கால வரவு செலவுத் திட்டம் டிசம்பர் மாதம் பாராளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட உள்ளதுடன், தேர்தலுக்கு பணம் ஒதுக்க தீர்மானிக்கப்பட்டாலும், தேர்தல் திகதி குறித்து இறுதி முடிவு எடுக்கப்படவில்லையெனவும் இந்த கூட்டத்தில் தேர்தல் திகதி குறித்து முடிவு எடுக்கப்பட உள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

இதேவேளை, இவ்வருட பொதுத்தேர்தலில் இதுவரை தேசியப்பட்டியல் உறுப்பினர்களின் பட்டியலை வழங்காத அரசியல் கட்சிகள் கூடிய விரைவில் அந்த பட்டியலை தேர்தல் ஆணைக்குழுவிடம் சமர்ப்பிக்குமாறும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.

நேற்று (17) வரை அரசியல் கட்சிகளிடம் இருந்து பெறப்பட்ட தேசியப்பட்டியல் எம்.பி பதவிகளை வர்த்தமானியில் வெளியிட தேர்தல் ஆணைக்குழு நடவடிக்கை எடுத்துள்ளது.

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT