கல்வி மற்றும் புத்தாக்கங்களின் ஊடாக ஜம்மு காஷ்மீரில் நீடித்த அமைதி, சுபீட்சம் மற்றும் ஒற்றுமைக்கான விஷேட வேலைத்திட்டமொன்று ஆரம்பித்து வைக்கப்பட்டுள்ளது.
‘இளைஞர்களையும் அவர்களது எதிர்காலத்தையும் பாதுகாப்போம்’ என்ற தொனிப்பொருளிலான இவ்வேலைத்திட்டம் ஜம்மு – காஷ்மீர் ஆளுநர் மனோஜ் சிங்கா தலைமையில் தொடக்கி வைக்கப்பட்டன.
இது தொடர்பிலான உத்தியோகபூர்வ வைபவம் காஷ்மீர், பாரமுல்லாவிலுள்ள டாக் பங்களாவில் இடம்பெற்றது.
இவ்வைபவத்தில் ஆளுநர் மனோஜ் சிங்கா உரையாற்றுகையில், இவ்வேலைத்திட்டம் காஷ்மீரின் நீடித்த அமைதிக்கும் சுபீட்சத்துக்கும் பாரிய பங்களிப்பை நல்கும். பிராந்தியத்தின் கல்வி மறுமலர்ச்சியானது குறிப்பாக பெண்களையும் வலுப்படுத்த பக்க துணையாக அமையும்.
காஷ்மீரின் நிலைபேறான அபிவிருத்திக்கும் பொருளாதார வளர்ச்சிக்கும் நீடித்த அமைதியும் ஒற்றுமையும் இன்றியமையாதது. அதனைக் கட்டியெழுப்புவதற்காக அரசாங்கம் அர்ப்பணிப்புடன் செயற்பட்டு வருகின்றது. காஷ்மீர் இளைஞர்களை வலுப்படுத்தும் முயற்சிகளுக்கு உச்சபட்ச ஆதரவளிப்பதில் அரசாங்கம் உறுதியாக உள்ளது’ என்றும் குறிப்பிட்டுள்ளார்.
இவ்வைபவத்தின் போது உள்ளூர் சாதனையாளர்கள், கல்வியாளர்கள், சிவில் சமூக உறுப்பினர்கள் மற்றும் மாணவர் பிரதிநிதிகளுடன் கலந்துரையாடிய ஆளுநர் நினைவுச் சின்னங்களையும் வழங்கி வைத்தார். நிறுவனத்தின் தலைவர் வஜாஹத் ஃபரூக் பட், காஷ்மீர் பிரிவு ஆணையாளர் விஜய் குமார் பிதுரி, காஷ்மீர் பொலிஸ் மாஅதிபர் விஜய் குமார் பிடுரி உள்ளிட்ட பிராந்திய உயரதிகாரிகளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர்.