சீரற்ற காலநிலை காரணமாக 7 ஓவர்களுக்கு மட்டுப்படுத்தப்பட்ட பாகிஸ்தானுக்கு எதிரான முதலாவது டி20 போட்டியில் அவுஸ்திரேலிய அணி 29 ஓட்டங்களால் வெற்றியீட்டியது.
பிரிஸ்பானில் நேற்று முன்தினம் (14) நடைபெற்ற இந்தப் போட்டி மழை காரணமாக மூன்று மணி நேரத்திற்கு மேல் தடைப்பட்ட நிலையில் ஆட்டம் அணிக்கு ஏழு ஓவர்கள் என மட்டுப்படுத்தப்பட்டது. முதலில் துடுப்பெடுத்தாட பணிக்கப்பட்ட அவுஸ்திரேலிய அணிக்காக கிளன் மெக்ஸ்வெல் 19 பந்துகளில் 5 பௌண்டரிகள் மற்றும் 3 சிக்ஸர்களுடன் 43 ஓட்டங்களை விளாசினார்.
இதன்போது டி20 கிரிக்கெட்டில் 10,000 ஓட்டங்களைப் பெற்ற மூன்றாவது ஆஸி. வீரராகவும் 16 ஆவது சர்வதேச வீரராகவும் மெக்ஸ்வெல் இடம்பெற்றார். இதுவரை 448 போட்டிகளில் பங்கேற்று 421 இன்னிங்ஸ்களில் விளையாடியுள்ள மெக்ஸ்வெல் மொத்தம் 10,031 ஒட்டங்களைப் பெற்றுள்ளார். இதில் டேவிட் வோர்னர் (12,411) மற்றும் ஆரோன் பின்ச் (11,458) ஆகிய ஆஸி. வீரர்களும் 10,000 டி20 ஓட்டங்களை தாண்டியுள்ளனர்.
அதேபோன்று மார்கஸ் ஸ்டொயினிஸ் 7 பந்துகளில் ஆட்டமிழக்காது 21 ஓட்டங்களைப் பெற்றார். இதன்மூலம் ஆஸி. அணி 7 ஓவர்களுக்கும் 4 விக்கெட்டுகளை இழந்து 93 ஓட்டங்களைப் பெற்றது.
இந்நிலையில் பதிலெடுத்தாடிய பாகிஸ்தான் அணி 7 ஓவர்களுக்கும் 9 விக்கெட்டுகளை இழந்து 64 ஓட்டகளையே பெற்றது. சார்வியர் பாட்லட் மற்றும் நெதன் எலிஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்த வெற்றியுடன் மூன்று போட்டிகளைக் கொண்ட டி20 தொடரில் ஆஸி. அணி முன்னிலை பெற்றிருப்பதோடு இரு அணிகளுக்கும் இடையிலான இரண்டாவது டி20 போட்டி சிட்னியில் இன்று (16) நடைபெறவுள்ளது.