இம்முறை இந்திய பிரீமியர் லீக் (ஐ.பி.எல்.) மெகா ஏலத்தில் யாரும் எதிர்பாராத வகையில் இரண்டு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழுக்கள் ஏலத்தில் இடம்பெறும் என ஐ.பி.எல். நிர்வாகக் குழு அறிவித்துள்ளது.
ஐ.பி.எல். அணிகளுக்கு இது பற்றிய தகவலை அந்த நிர்வாகக் குழு தெரியப்படுத்தியுள்ளது. கடந்த 2022 ஐ.பி.எல். மெகா ஏலத்தில் ஒரு நட்சத்திர வீரர்கள் அடங்கிய குழு மட்டுமே ஏலத்தில் அறிவிக்கப்பட்டிருந்தது. அதாவது ஒரு குழுவில் எட்டு முதல் ஒன்பது நட்சத்திர வீரர்கள் வரை இடம் பெற்று இருப்பார்கள். அவர்கள் சர்வதேச போட்டிகளில் ஆடிக் கொண்டிருக்கும் முக்கிய வீரர்களாக இருப்பார்கள். அவர்களை ஏலத்தில் வாங்குவதற்கு அனைத்து ஐ.பி.எல். அணிகளும் போட்டியிடும் என்ற எதிர்பார்ப்பு இருப்பதால் இந்த நட்சத்திர வீரர்கள் குழு ஏலத்தில் முதல் சுற்றில் பங்கு பெறும்.
இந்த முதல் சுற்றிலேயே அனைத்து அணிகளும் தங்கள் கையிருப்பில் 30 வீதம் முதல் 50 வீதம் வரை செலவிட்டு விடும். இந்த முறை அதிக நட்சத்திர வீரர்கள் ஏலத்தில் பங்கேற்க உள்ளதால் அவர்களை ஒரே குழுவாக அறிவிக்காமல், இரண்டு குழுக்களாக பிரித்து ஏலத்தில் இடம்பெறச் செய்துள்ளது ஐ.பி.எல். நிர்வாகக் குழு.
இதன் மூலம் சில ஐ.பி.எல். அணிகள் முதல் குழுவில் உள்ள வீரர்களை வாங்க முடியாமல் போனாலும், இரண்டாவது குழுவில் உள்ள மற்ற முக்கிய வீரர்களை வாங்கக் கூடிய சூழ்நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறை ரிஷப் பண்ட், கே.எல். ராகுல், ஸ்ரேயாஸ் ஐயர், முகமது சிராஜ், முகமது ஷமி, அர்ஷ்தீப் சிங், ரவிச்சந்திரன் அஸ்வின், மிட்செல் ஸ்டார்க், ஜோஸ் பட்லர் ஆகியோர் நட்சத்திர வீரர்கள் குழுவில் இடம்பெற உள்ளனர்.
தற்போது பஞ்சாப் கிங்ஸ் அணியிடம் 110 கோடி ரூபாய் ஏலத் தொகை மீதம் உள்ளது. மற்ற அணிகள் அதிக வீரர்களை, அதிக சம்பளத்துக்கு தக்க வைத்த நிலையில் பஞ்சாப் கிங்ஸ் அணி இரண்டு உள்ளூர் வீரர்களை மட்டுமே தக்க வைத்துள்ளது. எனவே, அந்த அணியே நட்சத்திர வீரர்களை வாங்குவதில் முன்னிலை வகிக்கும் என்ற எதிர்பார்ப்பு உள்ளது.