இந்த ஆண்டு ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற சில அணிகள் வீரர்களுக்கான முழு பரிசுத் தொகையையும் இன்னும் வழங்கவில்லை என்று உலக கிரிக்கெட் சம்மேளனம் தெரிவித்துள்ளது.
அமெரிக்கா மற்றும் மேற்கிந்திய தீவுகளில் கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற உலகக் கிண்ணத்தில் 20 அணிகள் பங்கேற்ற நிலையில் ஐந்து அணிகளின் வீரர்களுக்கு இவ்வாறு பரிசுத் தொகைகள் கிடைக்கவில்லை என்று தெரியவருகிறது.
உலகக் கிண்ணத்தில் பங்கேற்ற ஒவ்வொரு நாட்டுக்கும் சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் (ஐ.சி.சி.) பணப்பரிசை வழங்கியதோடு, தனிப்பட்ட ஒவ்வொரு கிரிக்கெட் சபைகளும் அந்த நிதியில் தமது வீரர்களுக்கும் பகிர்ந்தளிக்க வேண்டி உள்ளது. வீரர்கள் தொடர்பில் சில நாடுகளின் நிர்வாக சபைகள் அச்சுறுத்தும் வகையிலான நடத்தையை காண்பிப்பதாக உலகளாவிய வீரர்கள் சங்கமான உலக கிரிக்கெட் சம்மேளனம் குறிப்பிட்டுள்ளது.
‘குறிப்பிடத்தக்க நாடுகள் வீரர்களுக்கான பரிசுத் தொகையை இன்னும் வழங்காதது கடும் கவலை தருவதாக உள்ளது’ என்று உலக கிரிக்கெட் சம்மேளன தலைமை நிர்வாகி டொம் மொபட் குறிப்பிட்டுள்ளார்.
இம்முறை டி20 உலகக் கிண்ணத்தில் 17.3 மில்லியன் டொலர் பரிசுத் தொகையை ஐ.சி.சி. வழங்கியது. இதில் எந்த அணியும் வெறுங்கையோடு திரும்பவில்லை. தொடரில் கடைசி 13 தொடக்கம் 20 ஆவது இடங்களை பிடித்த அணிகளுக்குக் கூட அடிப்படை பரிசுத் தொகையான 347,000 டொலர் வழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
சம்பியன் கிண்ணத்தை வென்ற இந்திய அணிக்கு 3.73 மில்லியன் டொலர் பரிசுத் தொகை வழங்கப்பட்டதோடு இரண்டாம் இடம் பிடித்த தென்னாபிரிக்க அணி 1.96 மில்லியன் டொலர்களை வென்றது. ஒவ்வொரு போட்டியிலும் வெற்றி பெற்ற அணிக்கு 48,000 டொலர்கள் பரிசு வழங்கப்பட்டது.