தென்னமெரிக்க நாடான பிரேசிலுக்கும் இந்தியாவுக்கும் இடையிலான நட்புறவு 2024 இல் மேலும் வலுவடைந்துள்ளதாக இந்தியாவுக்கான பிரேசிலின் தூதர் கென்னத் பெலிக்ஸ் ஹசின்ஸ்கி டா நோப்ரேகா தெரிவித்துள்ளார்.
புதுடில்லியில் நடைபெற்ற பிரேசில் நாட்டின் தேசிய தின வைபவத்தில் கலந்து கொண்டு உரையாற்றும் போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
பெற்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு துறை மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் பூரி கலந்து கொண்ட இந்நிகழ்வில் பிரேசில் தூதர் தொடர்ந்தும் உரையாற்றுகையில், இந்தியாவும் பிரேசிலும் பொதுப் பெறுமானங்கள், உணர்வுகள் மற்றும் நலன்களின் அடிப்படையில் வலுவான பிணைப்பை கொண்டுள்ளன. எங்களுக்கு இடையிலான நீண்ட கால நட்புறவு ஆழ, அகலமாக வலுவடைந்துள்ளன. அது சமூக, பொருளாதார மேம்பாட்டுக்கு தேவையான புதிய அணுகுமுறைகளை கண்டறிவதற்கு வழிவகை செய்துள்ளது.
இரு நாடுகளுக்கும் இடையில் நிலவிவரும் வலுவான பிணைப்பு, சர்வதேச மன்றங்களிலும் எங்களுக்கு இடையிலான ஒருங்கிணைப்பின் அடிப்படையில் அமைந்துள்ளது. இது இருநாடுகளது ஜனாதிபதிகளும் முன்மாதிரியான மாற்றத்தை ஏற்படுத்த இடமளித்துள்ளன.
எமது ஜனாதிபதியின் கீழ் ஜி 20 அமைப்பு இரண்டு செயலணிகள் உட்பட பல முக்கிய முடிவுகளை எடுக்க உதவியுள்ளது. அவற்றில் ஒன்று பசி மற்றும் வறுமைக்கு எதிரான செயலணி. மற்றையது காலநிலை மாற்றத்திற்கு எதிரானது. அத்தோடு சக்தி, உணவுப் பாதுகாப்பு போன்ற துறைகளிலும் ஆழமான கூட்டாண்மையின் மூலம் இரு நாடுகளுக்கும் இடையிலான உறவு மேலும் வலுப்பெற்றுள்ளது என்றும் கூறியுள்ளார்.