முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில் வன்முறைகள், மீறல்கள் இம்முறை குறைவு; தேர்தல் ஆணைக்குழுவின் செயற்பாடுகளுக்கு பாராட்டு
பொதுத்தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடித்ததற்காக தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள், குடிமக்கள் பாராட்டப்பட வேண்டும்.
இவ்வாறு சுதந்திரமானதும், நியாயமானதுமான தேர்தல்களுக்கான மக்கள் செயற்பாடு (PAFFREL) விடுத்துள்ள அறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அவ்வறிக்ைகயில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது:
இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவின் (ECSL) வழிகாட்டுதலின் கீழ் மற்றும் தேர்தல் கண்காணிப்பு குழுக்கள் உட்பட பல பங்குதாரர்களின் ஈடுபாட்டுடன், ஒப்பீட்டளவில் முன்பு நடந்த தேர்தல்களுடன் ஒப்பிடும்போது, 2024 பாராளுமன்றத் தேர்தல் அமைதியானது.
சுதந்திரமான மற்றும் நியாயமான தேர்தலுக்கு உத்தரவாதம் அளிப்பதற்காக, தேர்தலுக்கு முன்னைய காலப்பகுதியிலிருந்து தேர்தல் நாள் வரை இலங்கைத் தேர்தல் ஆணைக்குழு ECSL முக்கிய பங்காற்றியது. ஒருசில சம்பவங்களைத் தவிர்த்து சட்டம், ஒழுங்கு வினைத்திறன் மற்றும் பக்கச்சார்பற்ற தன்மையைப் பேணுவதற்கு பொலிசார் பொருத்தமான நிறுவனங்களுடன் இணைந்து ஒத்துழைத்தனர்.
தேர்தல் சட்டமீறல்கள், வன்முறைகள் மற்றும் குடிமக்களின் வாக்களிக்கும் உரிமையைப் பாதுகாப்பதற்காக பொலிசார் மற்றும் இலங்கைத் தேர்தல் ஆணைக்குழுவிற்கு PAFFREL நன்றி தெரிவிக்கிறது. தேர்தலை அமைதியாகவும், சுமுகமாகவும் நடத்தி முடித்ததற்காக தேர்தலில் போட்டியிட்ட அனைத்து அரசியல் கட்சிகள், சுயேச்சைக் குழுக்கள், குடிமக்கள் பாராட்டப்பட வேண்டும்.
வாக்களிப்பு நிலையங்களின் கணிசமான பகுதிகளை 5,000 இற்கும் மேற்பட்ட தேர்தல் அவதானிப்பாளர்களின் பங்கேற்புடன், PAFFREL கண்காணித்தது. தேர்தல் நாளின் போது PAFFREL க்கு 223 முறைப்பாடுகள் (197 உறுதிப்படுத்தப்பட்டவை மற்றும் 26 உறுதிப்படுத்தப்படாதவை) கிடைத்துள்ளன. இவற்றில் 219 முறைப்பாடுகள், சட்டவிரோத தேர்தல் பிரசாரம், வாக்காளர்களிடம் செல்வாக்குச் செலுத்தும் முயற்சி உள்ளிட்ட தேர்தல் சட்டங்களை மீறியவையாகும்.
காத்தான்குடி, திஸ்ஸமஹாராம, பதுளை, வியாலுவ, புத்தளம், வென்னப்புவ, பண்டிருப்பு, குருநாகல், காலி, கம்பஹா, தலாவ, அரநாயக்க, நுவரெலியா, மாத்தறை, இரத்தினபுரி, அனுராதபுரம், மஹகொடகம, மினுவன்கொட,சிலாபம், மஹரகம, கம்பளை, திவுலப்பிட்டிய, கண்டி, கொத் மலை ஆகிய பிரதேசங்களில் பல தேர்தல் சட்டமீறல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. தம்பான ஆதிவாசிகளின் (பழங்குடியினர்) துணை முதல்வர் மற்றும் அவரது குடும்பத்தினர் வாக்களிக்கச் சென்றபோது, துணை முதல்வர் பாரம்பரியக் கோடரியுடன் வாக்களிக்க வாக்குச்சாவடிக்கு வருகை தந்ததால், வாக்களிக்க அனுமதிக்கப்படாமல் தடுக்கப்பட்டனர். இச்சம்பவத்தின் காரணமாக, ஆதிவாசிப் பகுதிகளை உள்ளடக்கிய பிராந்திய உதவித் தேர்தல் அலுவலர்கள் (ARO’s) மற்றும் சிரேஷ்ட தலைமை தாங்கும் அதிகாரிகள்(SPO’s) ஆகியோருக்கு தேர்தல் ஆணைக்குழு தெளிவான வழிகாட்டுதல்களை வழங்க வேண்டும் என பஃவரல் கோருகிறது.
கண்காணிப்பாளர்களின் அவதானிப்புகளின்படி, வாக்களிப்பு நிலையங்களுக்கு அருகில் சட்டவிரோத தேர்தல் பிரசாரங்கள், பொதுக்கூட்டங்கள், அச்சுறுத்தல்கள், வாக்காளர் மீது செல்வாக்குச் செலுத்துதல் மற்றும் வாக்காளர்களை போக்குவரத்தில் ஈடுபடுத்தியது போன்ற சம்பவங்கள் எதுவும் பதிவாகவில்லை. மஹியங்கணை மற்றும் கொட்டபொலவில் இருந்து வன்முறைத் தாக்குதல் மற்றும் அச்சுறுத்தல் எனக் கருதப்படும் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இருந்தபோதிலும், இறுதி முடிவில் குறிப்பிடத்தக்க ஒட்டுமொத்த தாக்கத்தை ஏற்படுத்திய பாரிய சம்பவங்கள் அல்லது சூழ்நிலைகள் தேர்தல் நாளில் இடம்பெறவில்லை.
2024 ஆம் ஆண்டு ஜனாதிபதித் தேர்தல் மற்றும் 2020 ஆம் ஆண்டு பாராளுமன்றத் தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், தேர்தலுக்கு முன்னைய காலம் முதல் வாக்குப்பதிவு நாள் வரை அரச அதிகாரம், வளங்கள் மற்றும் அரச ஊழியர்களின் துஷ்பிரயோகம் தொடர்பான சம்பவங்கள் மற்றும் முறைப்பாடுகள் கணிசமாகக் குறைந்துள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
சில தனியார் ஊழியர்கள் வாக்களிப்பதற்கான கடமை லீவு வழங்கப்படவில்லை என பல முறைப்பாடுகளை பஃவ்ரல் பெற்றுள்ளது. ஊழியர்களுக்கு வாக்களிக்க லீவு வழங்குவது குறித்து தேர்தல் ஆணைக்குழு தெளிவான வழிகாட்டுதல்களையும் உத்தரவுகளையும் வழங்கியிருந்தாலும், சில தனியார் மற்றும் நிதி நிறுவனங்களின் நிர்வாகமும் முகாமைத்துவமும் அதைச் சரியாகப் பின்பற்றவில்லை. வாக்காளர்களின் வாக்களிக்கும் உரிமையை பாதுகாக்கப் போதுமான நடவடிக்கைகளை மேற்கொள்ள பொருத்தமான அதிகார சபையை தேர்தல் ஆணைக்குழு உருவாக்க வேண்டும் என்று பஃவ்ரல் கோருகிறது.
முகநூலில் (Facebook) பணம் செலுத்தி தேர்தல் பிரசாரம் மேற்கொண்டமை தொடர்பான 29 சம்பவங்கள், தேர்தல் பிரசார உள்ளடக்கம் தொடர்பான 274 சம்பவங்கள், தேர்தல் சட்டத்தை மீறியமை மற்றும் தேர்தல் நாளில் தீங்கு விளைவிக்கும் கூற்றுக்கள் தொடர்பான 30 சம்பவங்கள் என்பவற்றை HashTag Generation உடன் இணைந்து PAFFREL அவதானித்தது..
வாக்குப்பதிவு நாளில் பஃவ்ரல் பணியில் அமர்த்திய நடமாடும் அவதானிப்பாளர்கள், நீண்ட கால கண்காணிப்பாளர்கள் மற்றும் நிலையான அவதானிப்பாளர்கள் குறிப்பிட்டது போல, வாக்குச் சாவடிகளில் மிகக் குறைவான முறைகேடுகளே இடம்பெற்றன. மாற்றுத்திறனாளிகள் வாக்குச்சாவடிகளுக்கு வருகை தருவதற்கு உரிய வசதிகளும் மாற்றுத்திறனாளிகள் வாக்களிப்பதற்கு வசதியாகவும் வடிவமைக்கப்பட்டிருந்தன. கண்பார்வையற்ற அல்லது பகுதியளவு பார்வையற்ற வாக்காளர்களுக்கு எளிதான அணுகல், உடல் உதவி மற்றும் தொட்டுணரக்கூடிய ஸ்டென்சில்கள் சட்டகம் ஆகியவை உறுதி செய்யப்பட்டிருந்தன. குறிப்பாக கம்பஹா மாவட்டத்தின் கலல்பிட்டிய,களுத்துறை மீவனபலான, கேகாலை, யட்டியந்தோட்டை மற்றும் கொலன்னாவ ஆகிய பிதேசங்களில் இவ்வசதிகள் ஏற்படுத்தப்பட்டிருந்தன.
முன்னைய தேர்தல்களுடன் ஒப்பிடுகையில், வாக்காளர்களை அவர்களின் மதத்தின், அல்லது இனத்தின் அடிப்படையில் செல்வாக்கு செலுத்துவதற்கும், திசைதிருப்புவதற்குமான முயற்சிகள் கணிசமாகக் குறைந்தே காணப்பட்டன. வேட்பாளர்களுக்கு எதிரான வெறுப்புப் பேச்சு, அவர்களின் கருத்தியல் மற்றும் அவர்களின் பிரசாரங்கள், தேர்தல் சட்டமீறல்கள் மற்றும் டிஜிட்டல் மற்றும் சைபர் தளங்களின் (cyber platforms) அடிப்படையில் வன்முறைகள் பற்றிய அறிக்கைகள் இருந்தபோதிலும், அவை மிகக் குறைவாவே காணப்பட்டன.
நிக்கவெரட்டிய வாக்குச் சாவடியில் கடமையாற்றும் போது உயிரிழந்த பொலிஸ் உத்தியோகத்தர், யாழ்ப்பாணம் உரும்பிராய் இந்துக் கல்லூரி வாக்களிப்பு நிலையத்தில் தேர்தல் கடமையில் ஈடுபட்டிருந்த மற்றுமொரு பொலிஸ் உத்தியோகத்தர் மற்றும் கெஸ்பேவ வாக்குச் சாவடியில் கடமயாற்றிய ஒரு பெண் உத்தியோகத்தர் ஆகியோரின் மறைவையிட்டு மேற்படி குடும்பங்களுக்கு பஃவ்ரல் தனது ஆழ்ந்த அனுதாபங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.
தேர்தலுக்கு முன்னைய காலம் முதல் வாக்குப்பதிவு நாள் வரை PAFFREL பணியாளர்கள் வழங்கிய ஒத்துழைப்பையும் அர்ப்பணிப்பையும் PAFFREL பாராட்டுகிறது.
தேர்தல்களின் ஜனநாயகத் தன்மையைப் பேணுவதற்காக, PAFFREL தொடர்ந்து பணியாற்றி வருகிறது.
ரோஹன ஹெட்டியாராச்சி,
நிறைவேற்றுப் பணிப்பாளர்
PAFFREL