இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி அமோக வெற்றி பெற்று வரலாற்று சாதனை படைத்திருக்கிறது.
225 பாராளுமன்ற ஆசனங்களில் 159 ஆசனங்களை தனதாக்கி இச்சாதனையை தேசிய மக்கள் சக்தி படைத்துள்ளது. விகிதாசார தேர்தல் முறைமை அறிமுகப்படுத்தப்பட்ட பின்னர் நடைபெற்ற பொதுத்தேர்தல்களில் அதிகூடிய ஆசனங்களை தனதாக்கிக் கொண்ட ஒரே தேசியக் கட்சியாக தேசிய மககள் சக்தி விளங்குகிறது.
இத்தேர்தலில் 8,888 பேர் போட்டியிட்டனர். இவர்களைத் தெரிவு செய்வதற்காக வாககளிப்பதற்கு ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் தகுதி பெற்று இருந்தனர். அவர்களில் ஒரு கோடி 18 இலட்சத்து 15 ஆயிரத்து 246 பேர் வாக்களித்துள்ளனர்.
இதன் ஊடாக தேசிய மக்கள் கட்சி சார்பில் 159 பேரும் ஐக்கிய மக்கள் சக்தி சார்பில் 40 பேரும், இலங்கை தமிழரசு கட்சி சார்பில் 8 பேரும், புதிய ஜனநாயக கட்சி சார்பில் 5 பேரும், ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன சார்பில் 3 பேரும், ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் சார்பில் 3 பேரும் பாராளுமன்ற உறுப்பினர்களாகத் தெரிவாகியுள்ளனர். அத்தோடு சர்வ அதிகார கட்சி, ஐக்கிய தேசியக் கட்சி, ஜனநாயக தமிழ் தேசிய முன்னணி, அகில இலங்கை மக்கள் காங்கிரஸ், இலங்கை தொழில்கட்சி மற்றும் யாழ் மாவட்டத்தில் போட்டியிட்ட 17 ஆவது இலக்க சுயேச்சைக் குழு ஆகியன தலா ஒரு ஆசனப்படி பாராளுமன்ற ஆசனங்களைப் பெற்றுக் கொண்டுள்ளன.
அதேநேரம் இந்நாட்டின் முன்னணி அரசியல்வாதிகள் பலர் இத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். அத்தோடு கடந்த அரசாங்கத்தில் முக்கிய அமைச்சர்களாகப் பதவி வகித்தவர்களும் இத்தேர்தலில் வெற்றி பெறக்கூடியளவுக்கு மக்களின் விருப்பத்தைப் பெற்றுக்கொள்ள முடியாதவர்களாகினர்.
கடந்த பாராளுமன்றத்தில் மக்கள் பிரதிநிதிகளாக இருந்த 45 இற்கும் மேற்பட்டவர்கள் இத்தேர்தலில் தோல்வி அடைந்துள்ளனர். ஆனால் கடந்த பாராளுமன்றத்தில் மூன்று பாராளுமன்ற உறுப்பினர்களை மாத்திரம் கொண்டிருந்த தேசிய மக்கள் சக்தி, இத்தேர்தலின் ஊடாக 159 ஆசனங்களைப் பெற்று வரலாற்றில் அழியாத்தடம் பதித்துள்ளது.
தற்போது நடைமுறையில் உள்ள விகிதாசார தேர்தல் முறைமையின் கீழ் எந்தவொரு கட்சியும் மூன்றில் இரண்டு அறுதிப் பெரும்பான்மை பெற முடியாது என்ற கருத்து அரசியல் வட்டாரத்தில் நிலவி வந்தது. இத்தேர்தல் முறைமையின் கீழ் 1989 முதல் இற்றைவரையும் பத்து பொதுத்தேர்தல்கள் நடைபெற்றுள்ளன. இதற்கு முன்பு நடந்த எந்தவாரு தேர்தலிலும் எந்தவொரு கட்சியும் தனிக்கட்சியாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையைப் பெற்றதாக இல்லை. ஆனால் இத்தேர்தலில் தேசிய மக்கள் சக்தி மூன்றில் இரண்டு பெரும்பான்மையை விடவும் அதிக ஆசனங்களை தனதாக்கிக் கொண்டுள்ளது.
தேசிய மக்கள் சக்தி முன்வைத்திருக்கும் திட்டங்களும் ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாகப் பதவி ஏற்றது முதல் முன்னெடுத்துவரும் வேலைத்திட்டங்களும்தான் இத்தகைய வெற்றியை தேசிய மக்கள் சக்தி பெற அடித்தளமாகின.
மேலும் கடந்த ஜனாதிபதி தேர்தலின் போது ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்கவுக்கு மக்கள் அளித்த அமோக ஆதரவின் விளைவாக நாட்டின் பல முன்னணி அரசியல் பிரபலங்கள் இத்தேர்தல் அரசியலில் இருந்து முன்கூட்டியே ஒதுங்கி விட்டனர். அத்தகைய பிரபலங்களில் இன்னும் ஒரு தொகுதியினர் தேர்தலில் போட்டியிடுவதைத் தவிர்த்துக் கொண்டுள்ள போதிலும், தேசியப் பட்டியல் ஊடாகவாவது பாராளுமன்ற பிரதிநிதித்துவத்தைப் பெற்றுக்கொள்ளும் முயற்சியிலும் ஈடுபட்டுள்ளனர்.
சுதந்திர இலங்கையின் அரசியலில் மக்களிடம் முன்வைக்கப்பட்ட மிகவும் செல்வாக்கு மிக்க தேர்தல் விஞ்ஞாபனத்தை தேசிய மக்கள் சக்தி முன்வைத்திருப்பதன் வெளிப்பாடே இதுவாகும்.
இந்நாட்டு மக்களை இன, மத ரீதியாகப் பிரித்து வைத்து அரசியல் இலாபம் பெற்று வந்த அற்ப அரசியலை மக்கள் நிராகரிக்கவும் தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் விஞ்ஞாபனம் வழிவகுத்துள்ளது. இதன் விளைவாக இந்நாட்டு மக்கள் இன, மத பேதங்களுக்கு அப்பால் ஒன்றிணைந்து தேசிய மக்கள் சக்தியை அமோக வெற்றி பெறச் செய்துள்ளனர். இந்நாட்டு மக்களின் விருப்பமும் எதிர்பார்ப்பும் அதுவேயாகும்.
இன, மத பேதங்களுக்கு அப்பால் சகலரும் ஒன்றுபட்டு வாழ வேண்டும் என்பதே மக்களின் வேணவாவாகும். அதுவே தேசிய மக்கள் சக்தியின் விருப்பம். இதன் விளைவாகவே தேசிய மக்கள் சக்தி இத்தேர்தலில் மூன்றில் இரண்டு பெரும்பான்மைக்கும் மேல் ஆசனங்களைப் பெற்று அமோக வெற்றி பெற்றுள்ளது எனலாம்.