1,650 மில்லியன் ரூபா பெறுமதியான 66 கிலோ 840 கிராம் ஹெரோயின் போதைப்பொருளை ஏற்றிச்சென்ற பல நாள் மீன்பிடிக் கப்பலை ஆழ்கடலில் வைத்து கடற்படையினரால் சுற்றிவளைக்கப்பட்டுள்ளது.
இலங்கையின் மேற்கு ஆழ்கடல் பகுதியில் கடற்படையினரால் மேற்கொள்ளப்பட்ட விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகநபர்கள் அறுவருடன் ஆழ்கடல் மீன்பிடி வள்ளமொன்றை கடற்படையினர் சுற்றிவளைத்துள்ளனர்.
கடற்படையினரால் கைப்பற்றப்பட்ட ஆழ்கடல் வள்ளம் காலி மீன்படி துறைமுகத்துக்கு கொண்டு செல்லப்பட்டு சோதனை செய்யப்பட்டபோது, அறுபது (60) பார்சல்களில் பொதி செய்யப்பட்ட 1,650 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான பெறுமதியான 66 கிலோ 840 கிராம் ஹெரோயின், போதைப்பொருளை கடற்படையினர் கைப்பற்றினர்.
இவ்வாறு கைப்பற்றப்பட்ட போதைப்பொருளை, கடற்படை தளபதி வைஸ் அட்மிரல் பிரித்யந்த பெரேரா நேரில் சென்று நேற்று (15)பார்வையிட்டார்.
இலங்கை கடற்படையினருக்கு கிடைத்த இரகசிய தகவலுக்கமைய இலங்கை கடற்படை கப்பலான சுரனிமில, இலங்கைக்கு மேற்கே ஆழ்கடலில் நடத்திய விசேட தேடுதல் நடவடிக்கையின்போது, சந்தேகத்திற்கிடமான உள்ளூர் ஆழ்கடல் மீன்பிடி வள்ளமொன்று அந்த கடல் பகுதியில் பயணம் செய்துள்ளமையை கடந்த 01ஆம் திகதி அவதானித்துள்ளது.
இதன்போது, மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கையில், ஆழ்கடல் வள்ளங்களில் ஹெரோயின் என சந்தேகிக்கப்படும் போதைப்பொருள் அடங்கிய ஆறு (06) பைகள் மீட்கப்பட்டுள்ளதுடன், சந்தேகநபர்கள் அறுவர் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
இவ்வாறு மீட்கப்பட்ட போதைப்பொருடன் சந்தேகநபர்கள் அறுவரும் நேற்று(15) காலை காலி துறைமுகத்துக்கு அழைத்துச் செல்லப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட சந்தேகநபர்கள் 18 முதல் 34 வயதுக்கு இடைப்பட்ட மிரிஸ்ஸ பிரதேசத்தைச் சேர்ந்தவர்கள் என அடையாளம் காணப்பட்டுள்ளனர். அத்துடன், ஹெரோயின் போதைப்பொருளுடன், சந்தேகநபர்களும் மற்றும் மீன்பிடி வள்ளமும் (01) பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.