Sunday, November 24, 2024
Home » அல்லாஹ் விரும்பும் பண்பு

அல்லாஹ் விரும்பும் பண்பு

by Gayan Abeykoon
November 15, 2024 10:00 am 0 comment

ம ன்னிக்கும் மனோபாவத்தையும் தாராளத் தன்மையுடன் நடந்துகொள்வதையும் தான் தனது அடியார்களிடமிருந்து அல்லாஹ் அதிகம் விரும்புகிறான். ஏனெனில், இவ்விரு பண்புகளும் அவன் தனக்காகத் தேர்ந்தெடுத்துக்கொண்டவை.

அவன் அதிகம் நேசிக்கும் பண்புகளும் இவைதான். அதனால்தான் அவன் அனைவரைவிடவும் அதிகமாக அடியார்களை மன்னிக்கிறான், தாராளத் தன்மையுடன் நடந்துகொள்கிறான்.

தர்மம் செய்யுமாறு தம் தோழர்களை நபி (ஸல்) தூண்டினார்கள். அப்போது அங்கே உல்பத் இப்னு ஸைத் (ரழி) எனும் ஏழைத் தோழரும் இருந்தார். தர்மம் செய்ய அவரிடம் எதுவும் இருக்கவில்லை. யோசித்தார்.. என்ன செய்வது? தர்மம் செய்ய தம்மிடம் எதுவும் இல்லையே என்பதை எண்ணும் போதே அவருக்கு கண்களில் கண்ணீர் பெருக்கெடுத்தது. அழுதவாறே எழுந்து நின்று, “அல்லாஹ்வின் தூதரே! எனக்கு அநீதி இழைத்த அனைவருக்கும் எனது மானத்தை நான் தர்மம் செய்துவிட்டேன். (அவர்களை நான் மனித்துவிட்டேன்)” என்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் கூறவில்லை. இப்படியும் தர்மம் செய்வார்களா என்ன? ஆச்சரியம்! மறுநாள் காலை தோழர்களிடம் நபி (ஸல்) அவர்கள், “உல்பத் இப்னு ஸைத் எங்கே?” என்று கேட்டார்கள். “இதோ இருக்கிறேன், அல்லாஹ்வின் தூதரே!” என்றார் உல்பத் (ரழி). அவரைப் பார்த்து புன்னகை பூத்தவாறே, “அல்லாஹ் உமது தர்மத்தை ஏற்றுக்கொண்டு விட்டான்” என்று நபி (ஸல்) கூறினார்கள். (ஆதாரம்: பைஹகி, இப்னு ஹிஷாம்)

எவ்வளவு அழகான தர்மம்! ஒரு சாதாரண ஏழையின் செயலை வியந்து ஏழு வானங்களுக்கு அப்பால் இருந்து உடனடியாக அல்லாஹ் பதில் கொடுக்கிறான். ஆனால் இன்று பலர் அடுத்தவர் மானத்தை விலை கொடுத்து வாங்குகிறார்கள். அதனை அதிக விலைக்கும் விற்கிறார்கள். அதை வைத்து எச்சரிக்கையும் செய்கிறார்கள். ஆனால் உயர் பண்பு கொண்ட மனிதன் ஒருபோதும் வீழமாட்டான். காரணம் அவன் அல்லாஹ்வின் கூற்றை நம்புவான்.

அல்லாஹ் கூறுகிறான்: “மன்னித்து விடுங்கள்; தாராளத் தன்மையுடன் இருங்கள். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று நீங்கள் விரும்பவில்லையா என்ன?” (24:22)

ஆகவே அல்லாஹ் விரும்பும் பண்புகளையும் பழக்கவழக்கங்களையும் எம்மில் வளர்த்துக் கொள்வோம். அதன் ஊடாக அவனது அன்பையும் அருளையும் பெற்றுக் கொள்வோம்.

அப்துல்லாஹ்…

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT