மழைக்காலத்தில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து, டெங்கு நோய் பரவக்கூடிய ஆபத்து காணப்படுவது வழக்கமாகும். தற்போது பெய்து வரும் வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்காலத்தில் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து டெங்கு நோய் மிக வேகமாக பரவக்கூடிய ஆபத்து காணப்படுகிறது. இக்காலத்தில் பொதுமக்கள் டெங்கு நுளம்பில் இருந்து பாதுகாப்புப் பெறுவதற்காக தங்ளது வீடு உள்ளிட்ட சுற்றுச்சூழலை சுத்தமாக வைத்துக் கொள்வது அவசியமாகும்.
சுகாதார அமைச்சின் தேசிய டெங்கு கட்டுப்பாட்டு பிரிவும், டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குரிய விசேட வேலைத்திட்டங்களை தேசிய ரீதியாக முன்னெடுத்து வருகின்றது. இதற்கிணங்க கல்முனை சுகாதாரப் பிராந்தியத்திலும் பிராந்திய சுகாதார சேவைகள் பணிப்பாளர் வைத்திய கலாநிதி திருமதி சகீலா இஸ்ஸடீனின் ஆலோசனை மற்றும் வழிகாட்டலின் கீழ் டெங்கு பரவுவதைக் கட்டுப்படுத்துவதற்குரிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
பிராந்திய தொற்றுநோய் தடுப்புப் பிரிவின் பொறுப்பு வைத்திய அதிகாரி டொக்டர் எம்.ஏ.சீ.எம்.பஸாலின் மேற்பார்வையின் கீழ் கல்முனை சுகாதார சேவைகள் பிராந்தியத்திலுள்ள 13 சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளிலும் டெங்கு ஒழிப்பு வேலைத்திட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகிறது.
பொலிஸ், இராணுவம் மற்றும் உள்ளூராட்சி மன்றங்கள் என்பனவும் இதற்கு ஒத்துழைப்பு வழங்கி வருகின்றன. கல்முனை பிரதேச மக்கள் தங்களது வீடு மற்றும் வீட்டுச்சூழலில் டெங்கு பெருகக் கூடிய இடங்களை துப்புரவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டு வருகின்றனர்.
சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்களின் ஆய்வின் பிரகாரம் டெங்கு நுளம்பின் பெருக்கம் அதிகரித்து டெங்கு நோய் மிக வேகமாக பரவக்கூடிய அதி ஆபத்தான வலயமாக அட்டாளைச்சேனை, நிந்தவூர், கல்முனை வடக்கு, திருக்கோவில் மற்றும் சம்மாந்துறை போன்ற சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும், ஆபத்தான வலயமாக அக்கரைப்பற்று, பொத்துவில், காரைதீவு, சாய்ந்தமருது சுகாதார வைத்திய அதிகாரி பிரிவுகளும் காணப்படுகின்றன.
அத்துடன் சுகாதார பூச்சியியல் உத்தியோகத்தர்களின் ஆய்வின் பிரகாரம் பின்வரும் விடயங்களினூடாக டெங்கு நுளம்பு பெருகக்கூடிய வாய்ப்புக்கள் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து பாதுகாப்பு பெறுவதற்கு பின்வரும் விடயங்களை கடைப்பிடிக்குமாறு பொதுமக்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
சுற்றுச்சூழலில் காணப்படும் டெங்கு நுளம்பு பெருகக்கூடிய பொருட்களை அழித்தல், வீடுகளில் உள்ள கிணறுகளில் மீன்குஞ்சுகளை விடுதல், நுளம்பு வலைகளால் கிணற்றை மூடுதல், பூச்சாடிகளில் நீர் தேங்கி நிற்காதவாறு அவற்றை தினமும் பராமரித்தல், நீர்ப் போத்தல்களில் அழகுக்காக வளர்க்கப்படும் பூ மரங்களை அகற்றுதல், வீட்டு சமயலறைகளில் உள்ள நீரைச் சேமிக்கும் பாத்திரங்களை நாளாந்தம் அவதானித்து சுத்தம் செய்தல். அவ்வாறான பாத்திரங்களை நன்றாக தேய்த்துக் கழுவுதல், வீடு உள்ளிட்ட சூழலில் நீர் தேங்கி நிற்கும் வகையில் ஏற்படும் கசிவுகளை உடன் திருத்தம் செய்தல், பாவனையற்ற மலசலகூடங்களின் குழிகளை மூடியவாறு வைத்தல், வளர்ப்பு கோழி மற்றும் பிராணிகளுக்கு நீர் வைக்கும் பாத்திரங்களை தினமும் சுத்தம் செய்தல், பாவனையற்ற அல்லது தேவையற்ற குழாய்க் கிணறுகளை அகற்றுதல், பாவனையில் உள்ள குழாய்க் கிணறுகளின் உள்ளே நுளம்பு போகாத வகையில் துணியினால் கட்டி வைத்தல், வீட்டுச்சூழலில் உள்ள மரங்களிலுள்ள பொந்துகளை சீமெந்து கொண்டு அடைத்தல்.
மேற்குறித்த விடயங்களினால் அதிகமாக டெங்கு நுளம்பு பெருகுவதற்கான வாய்ப்புக்கள் உள்ளதாக அடையாளம் காணப்பட்டுள்ளது. குறிப்பாக இந்த விடயத்தில் மதவழிபாட்டுத் தலங்கள், பாடசாலைகள், அரச மற்றும் தனியார் நிறுவனங்கள், தொழிற்சாலைகள் என்பனவும் மிகக் கவனம் செலுத்தி டெங்கு நுளம்பு பெருகாமல் சூழலை சுத்தமாக வைத்துக் கொள்ள வேண்டும்.
குறிப்பாக பொறுப்பு வாய்ந்தவர்கள் கூடிய கவனம் எடுக்க வேண்டும். அதனை விடுத்து அலட்சியமாக இருந்து விடுவோமானால் பாரியதொரு டெங்கு அனர்த்தத்தினை எதிர்கொள்ள நேரிடும். சுகாதார தரப்பினரின் அறிவுறுத்தல்களைக் கடைப்பிடித்து டெங்கு கட்டுப்பாட்டு வேலைத்திட்டங்களுக்கு பொதுமக்கள் பூரண ஒத்துழைப்புக்களை வழங்குகின்ற போது மாத்திரமே டெங்கு ஆபத்தை முழுமையாக கட்டுப்படுத்த முடியும் என்று மருத்துவர்கள் அறிவுரை வழங்கியுள்ளனர்.
ஆதம்லெப்பை றியாஸ்
(பாலமுனை விசேட நிருபர்)