இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்துக்கான தேர்தல் நேற்று நடைபெற்று முடிந்துள்ளது. கடந்த செப்டம்பர் மாதம் நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தல் வாக்களிப்புடன் ஒப்பிடுகையில், நேற்று நடைபெற்றுள்ள பாராளுமன்றப் பொதுத்தேர்தலில் வாக்களித்தவர்களின் எண்ணிக்ைக குறைவானதாகவே உள்ளது.
வாக்காளர்கள் மத்தியில் வாக்களிப்பதற்கான நாட்டம் சற்றுக் குறைந்திருப்பதற்கான காரணம், சமீபத்தில் நடைபெற்று முடிந்த ஜனாதிபதித் தேர்தலும் ஆகும். நாட்டில் அடுத்தடுத்து இரண்டு தேர்தல்கள் குறுகிய காலப்பகுதியில் நடைபெற்றதனால், தேர்தல் தொடர்பான ஆர்வம் மக்கள் மத்தியில் குறைந்துள்ளமை தெரிகின்றது.
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஆட்சி மாற்றம் நடந்துள்ளமையினால், பாராளுமன்றத் தேர்தல் முடிவும் தேசிய மக்கள் சக்திக்கு வாய்ப்பானதாகவே அமையும் என்றெண்ணி வாக்களிக்கும் கடமையை பலர் தவிர்த்துக் கொண்டுள்ளனர் என்பது புரிகின்றது.
அதாவது ‘பொதுத்தேர்தலிலும் தேசிய மக்கள் சக்திதான் வெற்றியீட்டப் போகின்றது, எமது ஒரேயொரு வாக்கினை செலுத்தாமல் விடுவதனால், தேசிய மக்கள் சக்தியின் வெற்றி தடைப்பட்டு விடப் போவதில்லை’ என்ற அலட்சிய மனோபாவம் மக்கள் மத்தியில் காணப்பட்டுள்ளது. இந்த அலட்சிய மனோபாவம் காரணமாக பலர் வாக்களிப்பதைத் தவிர்த்துக் கொண்டு விட்டனர். வாக்களிப்பு வீதம் இம்முறை குறைவடைந்ததற்கு இதுதான் காரணம் ஆகும்.
நாட்டின் தேர்தல்களைப் பொறுத்தவரை மக்கள் மத்தியில் இத்தகையதொரு அலட்சிய மனோபாவம் உகந்ததல்ல. உலகில் ஜனநாயக விழுமியங்களைப் பேணுகின்ற நாடாக முன்னொரு காலத்தில் இலங்கை விளங்கியது. ஆனால் அடுத்தடுத்து ஆட்சிக்கு வந்த அரசாங்கங்கள் கடைப்பிடித்த அலட்சியமான கொள்கைகள் காரணமாக நாட்டின் ஜனநாயக விழுமியங்கள் படிப்படியாகக் குறைந்து விட்டன.
நாட்டின் ஜனநாயகம் மீண்டும் கட்டியெழுப்பப்பட வேண்டும் என்ற ஆதங்கம் காரணமாகவே கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கூடுதலான மக்கள் தேசிய மக்கள் சக்திக்கு வாக்களித்து அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக வெற்றிபெறச் செய்தனர்.
ஆனால் ஜனாதிபதித் தேர்தலில் வாக்களித்ததுடன் தங்களது கடமை முடிந்து விட்டதாக மக்கள் நினைப்பது முறையல்ல. நாட்டில் ஊழல், வீண்விரயம், மோசடி ஆகியவற்றை முற்றாக ஒழித்து செழிப்பான நாடொன்றை உருவாக்க வேண்டுமென்ற எண்ணத்தினாலேயே அநுரகுமார திசாநாயக்கவை ஜனாதிபதியாக மக்கள் வெற்றிபெறச் செய்தனர்.
ஆனால் மக்களின் எண்ணம் நிறைவேற வேண்டுமானால், ஜனாதிபதித் தேர்தலில் காண்பித்த அதே அக்கறையை பாராளுமன்றப் பொதுத்தேர்தலிலும் காண்பித்திருக்க வேண்டும் என்பதுதான் உண்மை.
ஏனெனில் கடந்த ஜனாதிபதித் தேர்தல் பிரசாரங்களின் போது தேசிய மக்கள் சக்தியினர் மக்களுக்கு வாக்குறுதிகள் பலவற்றை வழங்கியிருந்தனர். மக்களின் நீண்ட கால ஆதங்கங்களே தேசிய மக்கள் சக்தியின் வாக்குறுதிகளாக இருந்தன.
ஆனால் அவ்வாக்குறுதிகள் நிறைவேற்றப்பட வேண்டுமானால், தேசிய மக்கள் சக்திக்கு பாராளுமன்றத்தில் பெரும்பான்மை ஆசனங்கள் அவசியமாகின்றன. எனவேதான் பாராளுமன்றத் தேர்தலில் மக்களின் ஆதரவை தேசிய மக்கள் சக்தி மீண்டும் கோரியிருந்தது. இந்நிலையில் நேற்றைய தேர்தலின் போது வாக்களிப்பு வீதம் குறைந்திருந்தமை பலரின் கவனத்தையும் ஈர்த்திருந்தது.
அடுத்தடுத்து தேர்தல்கள் வருகின்றன என்பதற்காக மக்கள் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றாமல் இருப்பது முறையல்ல. ஜனநாயகம் என்பது மக்கள் விரும்புகின்ற ஆட்சியாகும். மக்களின் ஆணைக்கு அமையவே அரசாங்கம் அமைக்கப்படுகின்றது.
மக்கள் யாரை விரும்புகின்றனரோ அவர்களுக்கு தேர்தலில் வாக்களிப்பதற்குத் தவறுதல் கூடாது. மக்கள் விரும்புகின்ற பிரதிநிதிகள் யாராகவும் இருக்கலாம். அது மக்களது அடிப்படை உரிமையாகும். ஆனால் அவர்கள் தங்களது ஜனநாயகக் கடமையை ஆற்றாமல் விடுவது முறையல்ல.
இதுஇவ்விதமிருக்க, மக்கள் நீண்ட காலமாக எதிர்பார்த்து வந்த இரு தேர்தல்கள் நடைபெற்று முடிந்து விட்டன. இனிமேல் நாட்டை மீளக்கட்டியெழுப்பும் விடயத்துக்கே முன்னுரிமை வழங்கப்பட வேண்டியது பிரதானமாகும். அரசியல் பேதங்களை முன்வைத்து செயற்பட்டால் நாட்டின் முன்னேற்றம் தடைப்படும் என்பதை நாட்டின் மீது உண்மை அக்கறை கொண்ட எவரும் மறந்துவிடலாகாது.
எமது நாடு பொருளாதாரத்தில் வீழ்ச்சியடைந்துள்ளமைக்கு கடந்தகால அரசியல் தவறுகளும், ஊழல் மோசடிகளும்தான் பிரதான காரணமென்பதை மறந்துவிடலாகாது. கடந்த கால அரசியல் வரலாற்றின் தவறுகளைத் திருத்தியவாறு நாட்டின் முன்னேற்றத்துக்காக உழைப்பதற்கு அரசியல் தலைவர்கள் ஒவ்வொருவரும் முன்வர வேண்டியதே அவசியம்.