2024ஆம் ஆண்டு பாராளுமன்ற தேர்தல் தொடர்பில் ஊடகங்களுக்கு செய்தி சேகரிக்கச் சென்ற பொகவந்தலாவ பிராந்திய ஊடகவியலாளர் ஒருவர் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
தமிழ் இலத்திரனியல் மற்றும் அச்சு ஊடகங்கள் பலவற்றின் பிராந்திய நிருபராகப் பணிபுரியும் பொகவந்தலாவ எஸ்.சதீஸ்குமார் என்பவரே கூரிய ஆயுதத்தால் தலையில் தாக்கப்பட்டு பலத்த காயங்களுக்குள்ளாகி பொகவந்தலாவ பிரதேச வைத்தியசாலையில் (14) அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக டிக்கோயா கிளங்கன் வைத்தியசாலைக்கு மாற்றப்பட்டுள்ளார்.
பொகவந்தலாவ கெக்கர்ஸ்வோல்ட் இலக்கம் 2 தமிழ் வித்தியாலயத்தில் அமைக்கப்பட்டிருந்த வாக்களிப்பு நிலையத்திற்கு அருகில் நேற்று (14) பிற்பகல் இந்தத் தாக்குதல் சம்பவம் இடம்பெற்றதாகவும், குறித்த நபர் ஒருவர் தனக்குப் பின்னால் வந்து அருகில் கடையொன்றில் இருந்த கத்தியை எடுத்து தனது தலையில் தாக்கியதாகவும் சதீஸ்குமார் தெரிவித்தார். சந்தேக நபர் மதுபோதையில் இருந்ததாகவும் அவர் தெரிவித்தார்.
( ஹற்றன் சுழற்சி நிருபர்)