சீனாவின் ஜுஹாய் நகரில் 62 வயது நபர் ஒருவர், மக்கள் கூட்டத்துக்குள் காரை ஓட்டிச் சென்று விபத்து ஏற்படுத்தியதில் 35 பேர் உயிரிழந்துள்ளதோடு, 43 பேர் காயமடைந்துள்ளனர்.
காரை ஓட்டிச் சென்ற நபர் ஃபான் என்று அடையாளம் காணப்பட்டுள்ளார். விவாகரத்தான அவர் பெய்ஜிங் நகரில் இருந்து 2,200 கிலோ மீற்றர் தொலைவில் உள்ள ஜுஹாய் நகரத்தில் உள்ள ஒரு விளையாட்டு மையத்தில் கடந்த திங்கள்கிழமை இரவு 7.48 மணிக்கு பொதுமக்கள் உடற்பயிற்சி செய்துகொண்டிருந்தபோது காரை ஓட்டிச் சென்று மோதியுள்ளார் என்று அரசு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.
இச்சம்பவம் நடந்ததைத் தொடர்ந்து காரை ஓட்டிச் சென்ற நபர் கைது செய்யப்பட்டார். எனினும், இது விபத்தா அல்லது தாக்குதலா என்பது குறித்த விசாரணைகள் முன்னெடுக்கப்பட்டுள்ளன.
இதேவேளை, சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் கார் விபத்தில் காயமடைந்தவர்களுக்கு சிகிச்சை அளிப்பதற்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளுக்கும் உத்தரவிட்டுள்ளதோடு குற்றவாளி சட்டத்தின்படி தண்டிக்கப்பட வேண்டும் என்றுள்ளார்.
சீன அரசு ஊடகங்களில் இந்தச் சம்பவம் குறித்து தணிக்கை செய்யப்பட்ட காட்சிகளை ஒளிபரப்பான போதிலும் எக்ஸ் பக்கத்திலும் வீடியோ காட்சி வெளியாகியுள்ளன.