உபாதை காரணமாக கோபப்பட்டு கதிரையை ஓங்கி அடித்த இங்கிலாந்து வேகப்பந்து வீச்சாளர் ரீஸ் டொப்லேவுக்கு சர்வதேச கிரிக்கெட் கௌன்சில் 15 வீத அபராதம் விதித்துள்ளது.
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிராக பார்படோசில் கடந்த சனிக்கிழமை (09) நடந்த முதலாவது டி20 போட்டியின்போது இடம்பெற்ற சம்பவத்திற்காகவே அவருக்கு அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. 30 வயதான டொப்லே பந்து வீசும்போது வலது முழங்காலில் உபாதை ஏற்பட்டது.
தொடர்ந்து பெய்த சிறிது நேர மழைக்குப் பின்னர் மீண்டும் அவர் பந்து வீச முயன்றபோதும் ஒரு பந்தை மாத்திரம் வீசிவிட்டு அரங்கு திரும்பியதோடு அவரால் தொடர்ந்து போட்டியில் பங்கேற்க முடியாமல்போனது.
இவ்வாறு அரங்கு திரும்பி படிக்கட்டில் ஏறிய அவர் கோபத்தில் அங்கிருந்த கதிரை ஒன்றை எடுத்து தரையில் ஓங்கி அடித்தார். இதனையடுத்து ‘சர்வதேச போட்டிகளில் ஆடுகளத்தின் பொருட்களையோ அல்லது கிரிக்கெட் உபகரணங்களையோ, ஆடைகளையோ அவமதிக்கும்’ ஐ.சி.சி. 2.2 விதியை மீறியதற்காகவே அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.
போட்டிக்கட்டணத்தில் 15 வீத அபராதத்தை டொப்லே ஏற்றார்.
2023 ஒக்டோபரில் மும்பையில் நடந்த உலகக் கிண்ண போட்டியிலும் ரீஸ் இதேபோன்று நடத்தையை வெளிப்படுத்தி இருந்தார். அப்போதும் உபாதையுடன் அரங்கு திரும்பியபோது வழியில் இருந்த கதிரை ஒன்றை உடைத்தார். அப்போது அவர் தண்டனையில் இருந்து தப்பியபோதும் தற்போதும் சிக்கியுள்ளார். அபராதம் தவிர டொப்லேவுக்கு ஒரு தகுதி இழப்புப் புள்ளியும் வழங்கப்பட்டுள்ளது.
அடுத்த 24 மாதங்களில் இந்த தகுதி இழப்புப் புள்ளி நான்கு அல்லது அதற்கு மேல் பெறப்பட்டால் போட்டித் தடைக்கு முகம்கொடுகக் வேண்டி ஏற்படும் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் இது டொப்லேவின் முதல் தகுதி இழப்புப் புள்ளியாகும்.