நடிகை கஸ்தூரி வழக்கில் தமிழக அரசு நேற்றுமுன்தினம் காரசாரமான வாதங்களை முன்வைத்தது. அவரின் முன்பிணை மனுவில் இன்று தீர்ப்பு வழங்கப்படுகிறது. அதற்கு முன் அவரை கைது செய்யும் நடவடிக்ைகயில் பொலிசார் ஈடுபட்டுள்ளனர்.
இரண்டு மாநிலங்களுக்கு இடையில் பிரிவுணர்வை ஏற்படுத்தும் வகையில் அவர் பேசியதாக தமிழக அரசு நேற்றுமுன்தினம் வாதம் முன்வைத்தது குறிப்பிடத்தக்கது. நடிகை கஸ்தூரியை கைது செய்ய 2 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
தெலுங்கு பேசும் மக்கள் குறித்து சர்ச்சைக்குரிய வகையில் பேசிய கஸ்தூரி மீது பல பொலிஸ் நிலையங்களில் வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், கஸ்தூரி முன்பிணை கோரி மனுதாக்கல் செய்துள்ளார். இந்த மனு மீது நேற்றுமுன்தினம் விசாரணை நடத்தப்பட்டது. அதுவரை கைதில் இருந்து தப்பிக்க தலைமறைவாகியுள்ளார் கஸ்தூரி.
நேற்றுமுன்தினம் நடிகை கஸ்தூரி முன்பிணை மனுவை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் நீதிபதி ஆனந்த் வெங்கடேஷ் விசாரித்தார்.
“தெலுங்கர்கள் தமிழ்நாட்டுக்கு வந்தவர்கள் கிடையாது. தமிழ்நாட்டின் ஒரு பகுதிதான் தெலுங்கர்கள். சென்னையின் முழு உருவாக்கமே தெலுங்கு சமூக மக்கள்தான். அவர்களை எப்படி பிரித்துப் பேச முடியும்?” என்று அவர் குறிப்பிட்டார்.
கஸ்தூரி பேசிய காணொளி நீதிபதி முன்பு ஒளிபரப்பப்பட்டது. அதைத் தொடர்ந்து கஸ்தூரி தரப்பில் மூத்த வழக்கறிஞர் ஆஜராக கால அவகாசம் கோரியதை தொடர்ந்து விசாரணை சற்று நேரத்திற்கு ஒத்திவைக்கப்பட்டது.
கஸ்தூரியின் கைத்தொலைபேசி துண்டிக்கப்பட்டுள்ள நிலையில் அவர் வேறு கைத்தொலைபேசி பயன்படுத்துகிறாரா என்ற கோணத்தில் பொலிசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.