இசைக்குயில் பி. சுசீலா நேற்று தனது 89 ஆவது பிறந்ததினத்தைக் கொண்டாடினார்.
ஆந்திர மாநிலம் விஜயநகரத்தில் 1935- ஆம் ஆண்டு பிறந்தவர் பாடகி பி.சுசிலா. பி.சுசிலாவுக்கு ரசிகர்களும், திரையுலக பிரபலங்களும் நேற்று வாழ்த்து மழை பொழிந்தனர்.
பாடகி பி.சுசிலாவின் தந்தை பெயர் புலப்பக முகுந்த ராவ், தாயார் பெயர் ஷேஷவதரம். 1957- ஆம் ஆண்டு மோகன் ராவ் என்பவரை திருமணம் செய்துகொண்ட பி.சுசிலாவின் திருமண வாழ்க்கை 1990 -ஆம் ஆண்டு முடிவுக்கு வந்தது. கணவர் மோகன் ராவ் கடந்த 1990- ஆம் ஆண்டு மரணமடைந்தார். 1951- ஆம் ஆண்டு தொடங்கிய சுசிலாவின் இசை சேவை 67 ஆண்டுகளுக்கும் மேலாகத் தொடர்ந்தது.
அவர் இதுவரை 50 ஆயிரத்திற்கும் மேற்பட்ட பாடல்களை பாடி இருக்கிறார். இவருக்கு ஒரே ஒரு மகன் இருக்கிறார். முறையாக இசைப்பயிற்சி பெற்று சினிமாவில் பாடகியான பி.சுசிலா, தமிழில் முதன்முதலில் பாடிய பாடல் கடந்த 1953 ஆ-ம் ஆண்டு வெளியானது. இவர் பாடிய பாடல்கள் காலம் கடந்து கொண்டாடப்பட்டு வருகின்றன.
கடந்த 2008- ஆம் ஆண்டு தன் பெயரில் நிதியம் ஒன்றை ஆரம்பித்த பி.சுசிலா, அதன்மூலம் நலிவுற்ற இசைக்கலைஞர்களுக்கு மாத உதவித் தொகை வழங்கி வருகிறார். அந்த நிதியம் சார்பில் சிறந்த இசைக் கலைஞர்களுக்கு விருதுகளும் வழங்கப்பட்டு வருகின்றன. இதுவரை 5 முறை தேசிய விருதுகளை வென்றுள்ளார் சுசிலா. அதில் இரண்டு விருதுகள் ‘உயர்ந்த மனிதன்’ மற்றும் ‘சவாலே சமாளி’ ஆகிய படங்களுக்காக இவர் வாங்கியவை ஆகும். இதுதவிர பத்மபூஷன் விருது, கலைமாமணி விருது என ஏராளமான விருதுகளை வாங்கியுள்ளார் சுசிலா.
இசைக்குயில், இசையரசி, கான கோகிலா, கான குயில், கான சரஸ்வதி, மெல்லிசை அரசி என இவருக்கு பல்வேறு பட்டங்கள் இருக்கின்றன. இந்தி, தமிழ், கன்னடம், மலையாளம், தெலுங்கு ஆகிய மொழிகளில் மட்டுமல்லாமல் துலு, படுகா, சிங்களம், ஒரியா, பஞ்சாபி போன்ற மொழிகளிலும் பல்வேறு பாடல்களை பாடி உள்ளார். அதிக பாடல்களை பாடிய பாடகி என்கிற சாதனை படைத்து கின்னஸ் புத்தகத்திலும் இவர் இடம்பெற்றுள்ளார்.
சிறு வயதிலேயே இவரிடம் இசை ஆர்வம் இருந்ததை கண்டுகொண்ட அவரது பெற்றோர், முறைப்படி கர்நாடக சங்கீதம் கற்றுக் கொடுக்க ஏற்பாடு செய்தார்கள். இசை மேதை துவாரம் வெங்கடசாமி நாயுடுவிடம் முறையாக இசை பயின்றார். பின்னர் விஜயநகரம் இசைக்கல்லூரியில் டிப்ளோமா படித்து முதல் வகுப்பில் தேறினார். இதற்கு முன்பே வானொலி நிகழ்ச்சிகளிலும் பாடல்கள் பாடிக் கொண்டிருந்த சுசீலாவிற்கு, அதே வானொலி நிலையத்தின் மூலம் சினிமாவில் பாடவும் வாய்ப்பு வந்தது.
அந்நாளில் மிகப்பெரிய இசையமைப்பாளரான பெண்டியாலா நாகேஸ்வரராவ், தான் இசை அமைக்கும் புதிய படத்திற்கு புதிய குரல்களை தேடிக்கொண்டிருந்தார். வானொலி நிலையத்தில் பாடிக் கொண்டிருப்பவர்களில் சிலரை அனுப்பி வைக்குமாறு நிலையத்தாரிடம் நாகேஸ்வரராவ் கூற, அவர்கள் ஐந்து பேரை அனுப்பி வைத்தனர். அவர்களில் ஒருவர் தான் பி.சுசீலா.
1953- ஆம் ஆண்டு ஏ. நாகேஸ்வரராவ், ஜி. வரலஷ்மி நடிப்பில் பெண்டியாலா நாகேஸ்வரராவ் இசையமைப்பில் தமிழ் தெலுங்கு மொழிகளில் உருவான திரைப்படம் ‘பெற்ற தாய்’. இத்திரைப்படம்தான் சுசீலாவின் திரை இசைப்பயணத்தின் ஆணிவேர். ‘ஏதுக்கழைத் தாய், ஏதுக்கு’ என்ற பாடல்தான் இவரது முதல் திரைப்படப் பாடலாகும். உடன் பாடியவர் ஏ.எம்.ராஜா. இதன் பின் ஏ.வி.எம் ஸ்டூடியோவில் மாதச்சம்பளத்தில் பின்னணிப் பாடகியாக இருந்து வந்தார்.
சுசீலாவின் திரைப்பயணத்தில் ஒரு மிகப்பெரிய திருப்பத்தை 1955- ஆம் ஆண்டு வெளிவந்த ‘கணவனே கண்கண்ட தெய்வம்’ என்ற திரைப்படம் மாற்றியது. அத்திரைப்படத்தில் அவர் பாடிய அத்தனைப் பாடல்களும் தேனில் விழுந்த பலாவாக இனிமையாக இருந்தன.
சுசீலாவின் திரை இசை மகுடத்தில் மீண்டும் ஒரு வைரக்கல் பதித்த திரைப்படம் உத்தம புத்திரன். 1957 ஆம் ஆண்டு வெளிவந்த இத்திரைப்படத்திற்கு இசைப் கோர்ப்பு ஜி ராமனாதன். பி லீலா ஜிக்கி, ஏ.பி.கோமளா, ஜமுனா ராணி என்று பலர் இப்படத்தில் பாடியிருந்தாலும், சுசீலாவிற்கு கிடைத்த பாடல்கள் தனிமுத்திரை பதித்தன என்றே சொல்ல வேண்டும்.
இதனைத் தொடர்ந்து 1959 ஆம் ஆண்டில் இயக்குநர் ஸ்ரீதரின் இயக்கத்தில் பின்னணி பாடகர் ஏ.எம்.ராஜாவின் இசையில் வந்து மிகப்பெரிய வெற்றி அடைந்த திரைப்படம் ‘கல்யாணப் பரிசு’. இதில் மொத்தம் 8 பாடல்கள். அவற்றில் 5 பாடல்கள் சுசீலா பாடியவை, அத்தனையும் முத்தானவை.
1960களின் ஆரம்பம் விஸ்வநாதன்_ ராமமூர்த்தி என்ற இரட்டையர்களின் இசை, விஸ்வரூப ஆரம்பம் என்றே சொல்ல வேண்டும். இவர்களது இசையில் இயக்குநர் பீம்சிங்கின் இயக்கத்தில் வந்த ‘ப’ வரிசைப் படங்கள் திரையிசையில் ஒரு மிகப் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தின. பாவமன்னிப்பு, பாசமலர், பாலும் பழமும், பார்த்தால் பசி தீரும், பார் மகளே பார் என்று ‘ப’ வரிசைப் படங்களில் சுசீலாவின் குரலில் வந்த அத்தனை பாடல்களும் சாகாவரம் பெற்றவை. 1968 ஆம் ஆண்டு ஏ.வி.எம் தயாரிப்பில் உருவான ‘உயர்ந்த மனிதன்’ திரைப்படத்தில் எம்.எஸ்.விஸ்வநாதன் இசையமைப்பில் சுசீலா பாடிய ‘நாளை இந்த வேளை பார்த்து ஓடி வா நிலா’ என்ற பாடலுக்காக அந்த ஆண்டு சிறந்த பாடகிக்கான தேசிய விருதினைப் பெற்றார். 1970களின் பிற்பகுதியில் குறிப்பாக இசையமைப்பாளர் இளையராஜாவின் வருகைக்குப்பின் அடுத்த தலைமுறை கலைஞர்கள் திரைத்துறையில் கால்பதித்த காலம். இளையராஜாவின இசையிலும் ஏராளமான வெற்றிப் பாடல்களை பாடியிருக்கின்றார்.
இளையராஜாவின் முதல் படமான அன்னக்கிளியில், ‘சொந்தமில்லை பந்தமில்லை பாடுது ஒரு பறவை’ என்ற பாடலை பாட ஆரம்பித்தவர், அவரது இசையில் எண்ணற்ற பாடல்களை பாடியிருக்கிறார்.
கண்ணுக்கு மை அழகு கவிதைக்கு பொய் அழகு, கப்பலேறிப் போயாச்சு என்று ஏ.ஆர்.ரஹ்மானின் இசையிலும் பாடி தன் குரலுக்கு என்றுமே வயதில்லை என்பதை நிரூபித்திருக்கிறார் இசை அரசி சுசீலா.