பஹ்ரைன் சிறையில் 28 பேர்!
தமிழ்நாடு மீனவர்கள் இலங்கைக் கடல் எல்லைக்குள் மாத்திரமன்றி வேறு நாடுகளின் கடல் எல்லைகளுக்குள்ளும் அடிக்கடி கைதாகி வருகின்றனர்.
எல்லை தாண்டி மீன் பிடித்ததாக பஹ்ரைனில் கைது செய்யப்பட்டு அந்நாட்டு சிறையில் அடைக்கப்பட்டுள்ள 28 தமிழக மீனவர்களையும் விரைவில் மீட்டுத் தருமாறு மத்திய, மாநில அரசுகளுக்கு அவர்களது உறவினர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் ஈரானில் தங்கியிருந்து ஆழ்கடல் மீன்பிடித் தொழில் செய்யச் சென்றவர்கள் ஆவர்.
கைது செய்யப்பட்ட 28 தமிழக மீனவர்களுக்கும் எல்லை தாண்டிய குற்றத்திற்காக பஹ்ரைனில் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இம்மீனவர்களின் விடுதலை தொடர்பாக இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
கைது செய்யப்பட்ட மீனவர்கள் தரப்புக்காக வாதாட நியமிக்கப்பட்ட வழக்கறிஞர்களுக்கான செலவுகளை இந்திய தூதரகம் ஏற்றுக் கொண்டிருப்பதாக இந்திய வெளியுறவுத்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் இடிந்தகரை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளைச் சேர்ந்த 28 மீனவர்கள் கடந்த மே மாதம் ஈரானுக்கு மீன்பிடித் தொழிலுக்காகச் சென்றுள்ளனர். ஈரானில் தங்கியிருந்து அவர்கள் மீன்பிடித் தொழில் செய்து வந்துள்ளனர்.
செப்டம்பர் 11ஆம் திகதி சட்டவிரோதமாக தங்கள் நாட்டு எல்லைக்குள் நுழைந்ததாக 28 பேரையும் பஹ்ரைன் கடலோர காவல் படையினர் கைது செய்தனர். அந்நாட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட அவர்கள், பின்னர் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கைது செய்யப்பட்டுள்ள மீனவர்களை விரைவாக விடுதலை செய்ய மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று உறவினர்கள் கோரி வருகின்றனர்.
28 மீனவர்களும் சட்டவிரோதமாக பஹ்ரைன் கடல் எல்லைக்குள் நுழைந்த குற்றத்திற்காக கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தால் அவர்களுக்கு 6 மாத சிறைத் தண்டனை விதிக்கப்பட்டுள்ளது. இந்த மீனவர்கள் அனைவரும் இப்போது பஹ்ரைன் சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.
தமிழ்நாட்டிலிருந்து வெளிநாடுகளுக்கு மீன்பிடிக்கச் செல்லும் போது, அமைப்பொன்றில் பதிவு செய்த பிறகு செல்லுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. ஆனால் தமிழ்நாட்டிலிருந்து செல்லும் பலருக்கு இந்த நடைமுறை தெரிவது இல்லை அல்லது பின்பற்றுவது இல்லை என்று தெரிவிக்கப்படுகின்றது.