இலங்கையின் பத்தாவது பாராளுமன்றத்திற்கான பொதுத்தேர்தல் வாக்களிப்பு இன்று (14.11.2024) நடைபெறுகின்றது. அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் தேர்தல்கள் ஆணைக்குழு மேற்கொண்டுள்ளது.
225 பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்காக நடைபெறும் இத்தேர்தலில் அரசியல் கட்சிகளையும் சுயேச்சைக் குழுக்களையும் சேர்ந்த 8,888 பேர் அபேட்சகர்களாகப் போட்டியிடுகினறனர். பாராளுமன்ற உறுப்பினர்களைத் தெரிவு செய்வதற்கான வாக்களிக்கும் தகுதியை நாட்டில் ஒரு கோடி 71 இலட்சத்து 40 ஆயிரத்து 354 பேர் பெற்றுள்ளனர். அவர்களில் தேர்தல் கடமையில் ஈடுபடும் உத்தியோகத்தர்களும் பாதுகாப்பு தரப்பினரும் என ஏழு இலட்சத்துக்கு மேற்பட்டவர்கள் தபால் மூலம் ஏற்கனவே வாக்களித்துள்ளனர்.
ஏனையவர்கள் இன்று வாக்களிக்கின்றனர். அதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் முழுமையாக தேர்தல்கள் ஆணைக்குழு செய்துள்ளது. குறிப்பாக அரச உத்தியோகத்தர்களுக்கு தாபன விதிக் கோவையின் பிரகாரம் குறைந்த பட்சம் 4 மணித்தியாலயங்கள் வாக்களிக்கச் செல்ல அனுமதி வழங்க வேண்டும். அதேநேரம் தூரத்தின் அடிப்படையில் ஊழியர்களுக்கு வாக்களிக்கச் செல்லவென விடுமுறை வழங்கும் ஏற்பாடும் நடைமுறையில் உள்ளது.
இதன்படி, 40 கிலோ மீற்றர் முதல் 100 கிலோ மீற்றருக்கு இடைப்பட்ட தூரத்தில் வசிப்போருக்கு ஒருநாள் என்றபடியும் 100 முதல் 150 கிலோ மீற்றருக்கு உட்பட்ட தூரத்தில் வசிப்போருக்கு ஒன்றரை நாளும், 150 கிலோ மீற்றர்களுக்கு மேற்பட்டவர்களுக்கு இரண்டு நாட்களும் என்றபடி விடுமுறை வழங்கப்படும்.
இத்தகைய ஒழுங்குவிதிகளின்படி, தனியார்துறை சேவையாளர்களுக்கு விடுமுறை வழங்குவது தொழில் அல்லது சேவை வழங்குனர்களின் பொறுப்பாகும்.
அந்த ஏற்பாடுகளுக்கு அமைய விடுமுறை கிடைக்கப் பெற்றுள்ள தூர இடங்களில் தொழில்களில் ஈடுபடும் வாக்காளர்களும் தத்தமது இருப்பிடங்களைச் சென்றடைந்துள்ளனர். வாக்காளர்களின் போக்குவரத்துக்காக விஷேட போக்குவரத்து வசதிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.
வாக்காளர்கள் வாக்களிப்பதற்கென வாக்களிப்பு நிலையங்களுக்குச் செல்லும் போது தங்களது வாக்காளர் அட்டையுடன் செல்வது நல்லது. அந்த வாக்காளர் அட்டை இல்லாவிட்டாலும் வாக்களிக்க இடமளிக்கப்படும். ஆனால் வாக்காளர் இடாப்பில் பெயர் விபரம் உள்ளடக்கப்பட்டிருப்பது அவசியம்.
அதேநேரம் வாக்களிப்பு நிலையத்தில் ஆளடையாளத்தை உறுதிப்படுத்துவது கட்டாயமானது. அதன் நிமித்தம் தேசிய அடையாள அட்டை (புதியது, பழையது), செல்லுபடியான கடவுச்சீட்டு, செல்லுபடியான சாரதி அனுமதிப் பத்திரம், அரச சேவை ஒய்வூதிய அடையாள அட்டை, சிரேஷ்ட பிரஜைகளுக்கான அடையாள அட்டை, பதிவாளர் திணைக்களத்தினால் வழங்கப்பட்டுள்ள புகைப்படத்துடனான கடிதம், விஷேட தேவையுடையோருக்கென தேர்தல்கள் ஆணைக்குழுவினால் வழங்கப்பட்டுள்ள அடையாள அட்டை ஆகியவற்றில் ஏதாவதொன்றை சமர்ப்பித்து ஆளடையாளத்தை உறுதிப்படுத்த வேண்டும். அதன் ஊடாக வாக்களிக்கும் வாய்ப்பைப் பெற்றுக்கொள்ள முடியும்.
ஆகவே வாக்காளர்கள் தத்தமது பிரதேசங்களில் அமைக்கப்பட்டுள்ள வாக்களிப்பு நிலையங்களில் இன்று காலை 7.00 முதல்’ மாலை 4.00 வரை வாக்களிக்க முடியும். ஜனநாயக விழுமியங்களில் தேர்தலில் வாக்களிப்பது முக்கிய உரிமைகளில் ஒன்றாகும். அந்த உரிமையைப் பயன்படுத்த வாக்காளர்கள் தவறக்கூடாது. அது நாட்டின் ஜனநாயகப் பராம்பரியத்தை வலுப்படுத்தி மேம்படுத்த அளிக்கப்படும் பாரிய பங்களிப்பாக அமையும்.
இந்த நிலையில்தான் தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர் ஆர்.எம்.ஏ.எல். ரத்நாயக்க, வாக்காளர்கள் நேரகாலத்தோடு தங்கள் பிரதேச வாக்களிப்பு நிைலயங்களுக்குச் சென்று தங்களது வாக்குரிமையைப் பயன்படுத்துமாறு வேண்டுகோள் விடுத்திருக்கிறார். அத்தோடு வாக்களித்து விட்டு வீடுகளுக்குச் சென்று அமைதியைக் கடைப்பிடிக்குமாறு கேட்டுக் கொண்டுள்ள தேர்தல்கள் ஆணைக்குழுத் தலைவர், அமைதியான முறையில் தேர்தலை நடத்துவதற்கு ஒட்டுமொத்த மக்களும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். சட்டம் ஒழுங்கை முழுமையாகச் செயற்படுத்துமாறு பாதுகாப்பு தரப்பினருக்கு அறிவுறுத்தல் வழங்கப்பட்டுள்ளது. அதனால் சட்ட விரோதமான முறையில் செயற்படுவதைத் தவிர்த்து சட்டம் ஒழுங்கைப் பேணி நடக்குமாறும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஆகவே தேர்தலை வன்முறைகள் அற்ற முறையில் அமைதியாவும் நீதியாகவும் நடத்துவதற்கு தேர்தல்கள் ஆணைக்குழு முன்னெடுத்துள்ள ஏற்பாடுகளுக்கு அபேட்சகர்களும் வாக்காளர்களும் உச்சபட்ச ஆதரவும் ஒத்துழைப்பும் நல்க வேண்டும். அதுவே இன்றைய தேவையும் எதிர்பார்ப்பும் ஆகும்.