தென் கொரியாவின் E8 விசா ஊடான வேலை வாய்ப்புகளுக்கான ஆட்சேர்ப்பு மற்றும் ஆட்களை அனுப்பும் நடைமுறைகள் குறித்து மிக நுணுக்கமாக ஆராயப்பட்டு வருவதாகவும் இதனை சட்ட ரீதியாக்குவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்து ஆராயப்பட்டு வருவதாகவும் இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்பு பணியகத்தின் தலைவர் கோசல விக்கிரமசிங்க தெரிவித்துள்ளார்.
கடந்த காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் சட்டப்பூர்வமானதல்ல எனவும், இது தொடர்பில் வெளியிடப்பட்ட சுற்றறிக்கைகள் மீண்டும் இரத்துச் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
E-8 Seasonal Labor Visa வுடனான வேலைகள் பருவகால வேலைகளின் வகையைச் சேர்ந்தவை, இது கொரியாவில் விவசாயம் மற்றும் மீன்பிடித் துறையில் சுமார் 05 மாதங்களுக்கு வேலை செய்யும் வாய்ப்பை வழங்குகிறது. இந்த வேலைகள் தொடர்பாக கடந்த காலத்தில் கைச்சாத்திடப்பட்ட ஒப்பந்தம் இராஜதந்திர ரீதியிலானதல்ல என்று கொரிய தூதரகம் அதனை நிராகரித்துள்ளது.
இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தின் முன்னாள் தலைவர் ஒருவரின் கையொப்பத்துடன் இந்த வருடம் செப்டெம்பர் 3ஆம் திகதி வெளியிடப்பட்ட சுற்றறிக்கை மீண்டும் செப்டெம்பர் 23ஆம் திகதி இரத்துச் செய்யப்பட்டுள்ளது.
அதன்படி, தற்போது இந்த வேலைகள் சட்டப்படி செல்லுபடியாகாது என்றும், கடந்த காலங்களில் பல்வேறு தரப்பினரால் முன்வைக்கப்பட்ட குற்றச்சாட்டுகளில் உண்மை இல்லை என்றும் பணியகத்தின் தலைவர் அறிவித்துள்ளார்.
தற்போது இந்த தொழில் வாய்ப்புக்கள் இழக்கப்பட்டுள்ளதாக சம்பந்தப்பட்ட தரப்பினர் பணியகம் மீது குற்றம் சுமத்தியுள்ளனர். அவ்வாறு எதுவும் நடக்கவில்லையென்றும், ஒப்பந்தம் அமுல்படுத்தப்படவில்லையென்றும் வேலை வாய்ப்புகள் முறையானவை அல்ல என்றும் கோசல விக்கிர மசிங்க வலியுறுத்தியுள்ளார்.