மணிப்பூர் மாநிலத்தில் தொடர்ந்து பதட்டமான சூழல் நிலவி வருகிறது. ஜிரிபாம் பகுதியில் தீவிரவாதிகள் – பாதுகாப்பு படை இடையே துப்பாக்கிச்சூடு நடைபெற்றது. இதில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இதனால் அங்கு மீண்டும் கலவர பீதி நிலவுகிறது. மணிப்பூர் மாநிலம் ஜிரிபாம் பகுதியில் கடந்த சில நாட்களாக பதற்றமான சூழல் நிலவி வருகிறது. மணிப்பூரில் கடந்தாண்டு மைத்தேயி சமூகம் மற்றும் குகி பழங்குடி மக்கள் இடையே மோதல் வெடித்தது. இது மணிப்பூர் முழுவதும் கலவரமாக மாறி 200க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். ஆயிரக்கணக்கானோர் காயமடைந்தனர். 50,000க்கும் மேற்பட்ட மக்கள் மணிப்பூரில் இருந்து வெளியேறினர்.
அப்போதிருந்து மணிப்பூர் இன்னும் இயல்புநிலைக்கு திரும்பவில்லை. அங்குள்ள சில தீவிரவாத குழு மற்றும் பாதுகாப்புப் படையினர் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வருகிறது. கடந்த நவம்பர் 8 ஆம் திகதி ஜிரிபாம் பகுதியில் தீவிரவாதிகள் தீ வைத்து கொளுத்தினர். மேலும் ஒரு இளம் பெண்ணையும் அவர்கள் சுட்டுக் கொன்றதாக கூறப்படுகிறது. மற்றொரு பெண்ணை பாலியல் கொலை செய்ததாகவும் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. அதன் தொடர்ச்சியாக சிஆர்பிஎஃப் முகாம், பொலிஸ்நிலையம், கடைகள் மற்றும் வீடுகளை குறிவைத்து தீவிரவாதிகள் துப்பாக்கிச்சூடு நடத்தியதாக தகவல் வெளியானது. தீவிரவாதிகள் பயங்கர ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தியதால், பாதுகாப்பு படை வீரர்கள், காவல்துறை அசாம் துப்பாக்கிப்படை என்பன உடனடியாக சம்பவ இடத்துக்கு விரைந்தனர்.
இரண்டு தரப்புக்கும் இடையே கடுமையான மோதல் நிலவியது. இதில் 11 தீவிரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த மோதலில் இரண்டு வீரர்கள் காயமடைந்தனர். அதில் ஒருவரின் உடல்நலம் மிகவும் கவலைக்கிடமாக உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. சுமார் 45 நிமிடங்கள் சண்டைக்கு பிறகு நிலைமை கட்டுக்குள் கொண்டு வரப்பட்டதாக மணிப்பூர் காவல்துறை தெரிவித்துள்ளது. உயிரிழந்த தீவிரவாதிகளின் உடல்கள் மீட்கப்பட்டு, பிரேத பரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன. உயிரிழந்தவர்களிடம் இருந்து ஏராளமான ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டன.