இந்தத் தேர்தல் ராகுல் காந்தியால்தான் அவசியமின்றி நடப்பதாக, பிற கட்சிகள் குற்றம்சாட்டி வருகின்றன. ஆனால் ராகுல் காந்தி தன்னுடைய இடத்தில் தன் சகோதரியை நிற்க வைத்திருப்பது வயநாடு மக்கள் மீதான அவரின் அன்பின் வெளிப்பாடு என்று கூறுகின்றனர் காங்கிரஸ் கட்சியினர்.
பிரியங்கா காந்தி இங்கு போட்டியிடுவதால், தேசிய அளவில் இந்தத் தொகுதி மீண்டும் கவனம் பெற்றிருக்கிறது.
வயநாடு மக்களவைத் தொகுதியில், வயநாடு, மலப்புரம், கோழிக்கோடு ஆகிய 3 மாவட்டங்களில் உள்ள கல்பெட்டா, மானந்தவாடி, சுல்தான்பத்தேரி, திருவம்பாடி, நிலம்பூர், எரநாடு மற்றும் வண்டூர் ஆகிய 7 சட்டமன்றத் தொகுதிகள் இடம் பெற்றுள்ளன. 14 லட்சத்து 71 ஆயிரத்து 742 வாக்காளர்கள் உள்ளனர். 16 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.
இன்று நவம்பர் 13 அன்று 1354 வாக்குச் சாவடிகளில் வாக்குப்பதிவு நடக்கிறது. நவம்பர் 23 அன்று 8 இடங்களில் வாக்குகள் எண்ணப்படவுள்ளன.
இந்த இடைத்தேர்தலில் ஆறு மாதங்களுக்கு முன்பிருந்த கோரிக்கைகளோடு புதிய ஒரு கோரிக்கை இணைந்துள்ளது.
கடந்த ஜூலை 30ஆம் திகதி அதிகாலை, சூரல்மலை, முண்டக்கை மற்றும் அட்டமலை பகுதிகளில் ஏற்பட்ட நிலச்சரிவில் பாதிக்கப்பட்டவர்களுக்குத் தேவைப்படும் மறுவாழ்வுக்கான நிவாரணமும், இயற்கைப் பேரிடரால் பெரும் இழப்பைச் சந்தித்துள்ள சுற்றுலாத் தொழிலுக்குத் தேவைப்படும் புத்துயிரும் தான் அந்தக் கோரிக்கை.
இதை முக்கிய வேட்பாளர்கள் அனைவருமே வாக்குறுதியாகவும் அளிக்கின்றனர்.
தேர்தல் பரப்புரை முடிவதற்கு முந்தைய நாளில், சுல்தான்பத்தேரி தொகுதிக்குட்பட்ட நாய்க்கெட்டியில் பொதுக்கூட்ட மேடையில் பேசிய பிரியங்கா காந்தி, ‘‘நிலச்சரிவு காரணமாக, வயநாடு என்றால் பலரும் அச்சப்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதுபற்றி என்னிடம் பேசிய நண்பர்களிடம் நிலச்சரிவு ஏற்பட்டது ஒரு சிறு பகுதிதான், வயநாடு முழுவதுமே பேரழகான பகுதி. சுற்றுலாவுக்கு மிக உகந்த இடம் என்று நான் சொல்லிக் கொண்டிருக்கிறேன். இந்த அச்சத்தைப் போக்க வேண்டியது நம் பொறுப்பு,’’ என்றார்.
இதைத் தவிர்த்து, மருத்துவக் கல்லுாரி, மனித–வனவிலங்கு மோதல் பிரச்சினைகளுக்குத் தீர்வு, தமிழக, கர்நாடகா எல்லைகளில் இரவு நேர பயணத்துக்கான தடையை நீக்குவது, வயநாட்டில் ரயில்வே வழித்தடம் ஏற்படுத்துவது ஆகியவைதான் பிரதான கோரிக்கைகளாகவுள்ளன.
கர்நாடகா எல்லையில் வயநாடு செல்லும் வாகனங்களுக்கு இரவு நேர பயணத்துக்கு விதிக்கப்பட்டுள்ள தடையை நீக்க வேண்டுமென்பது முக்கிய கோரிக்கையாகவுள்ளது.
பந்திப்பூர் புலிகள் காப்பகம் மற்றும் வயநாடு தேசிய வன உயிரினப் பூங்கா அமைந்துள்ள இந்த வழித்தடத்தில், இரவு 9 மணி முதல் காலை 6 மணி வரை எந்தத் தனியார் வாகனங்களும் அனுமதிக்கப்படுவதில்லை.
காங்கிரஸ் கட்சி நினைத்திருந்தால் இந்தத் தடையை நீக்கியிருக்க முடியுமென்று குற்றம்சாட்டும் இந்திய கம்யூனிஸ்ட் வேட்பாளர் சத்யன் மோகேரி, ‘‘முன்புதான் பாரதிய ஜனதா அரசு இருந்ததால் தடையை நீக்க முடியவில்லை என்றனர். இப்போது கர்நாடகாவில் காங்கிரஸ் அரசு இருக்கும் நிலையில் அதை நீக்குவதற்கு ராகுல் காந்தி ஏன் முயற்சி எடுக்கவில்லை,’’ என்று கேட்கிறார்.
இவ்விரு பிரச்சினைகளைப் போலவே, பிரதானமாகப் பேசப்படும் மற்றொரு பிரச்சினை, மனித–வனவிலங்கு மோதல்.
வயநாட்டின் முன்னேற்றத்துக்கு, குறிப்பாக சூரல்மலை நிலச்சரிவுக்குப் பின் உரிய நிவாரண நடவடிக்கைகளை பினராயி விஜயன் தலைமையிலான கேரள அரசு செய்யவில்லை என்று காங்கிரசும், பாரதிய ஜனதாவும் குற்றம்சாட்டுகின்றன.
நிலச்சரிவு பாதிப்பைப் பார்வையிட்டுச் சென்ற பின்னும், அதற்காக எந்தவொரு நிதியையும் மத்திய அரசு தரவில்லை என்று கம்யூனிஸ்ட் கட்சியும் காங்கிரசும் ஒரே குற்றச்சாட்டை எதிரொலிக்கின்றன.
‘‘சூரல்மலை துயரம் குறித்து பிரதமரிடம் ராகுல் காந்தி பேசவேயில்லை. நீங்கள் இந்தத் தொகுதியின் பிரதிநிதியாக இல்லாவிட்டாலும், உங்களைத்தானே ஐந்தாண்டுக்கான பிரதிநிதியாக இங்குள்ள மக்கள் தேர்ந்தெடுத்தார்கள். எல்லாவற்றையும் முதல்வரிடமே கேட்கிறார்கள். நூற்றுக்கணக்கானவர்கள் மண்ணோடு மண்ணாகப் புதைந்ததையும், ஆற்றோடு அடித்துச் செல்லப்பட்டதையும் அறிந்திருந்தும் பிரதமர் நரேந்திர மோடி, இதுவரை ஒரு பைசா கூட நிவாரணமாகத் தரவில்லை,” என்று குற்றம்சாட்டுகிறார் சத்யன் மோகேரி.