நாம் மற்றவர்களுக்கு எவ்வளவு கொடுக்கின்றோமோ அவ்வளவுக்குக் கடவுள் நமக்குத் திருப்பிக் கொடுப்பார். இதையே கிறிஸ்து கூறியுள்ளார்: “கொடுங்கள், உங்களுக்குக் கொடுக்கப்படும். எந்த அளவையால் அளக்கிறீர்களோ அதே அளவையால் உங்களுக்கு அளக்கப்படும்” எனக் கூறியுள்ளார்: (லூக் 6:38)
“நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த இரண்டுசெப்புக்காககளை உண்டியலில் போட்டுவிடுகிறார். எல்லோருடையகாணிக்கைகளிலும் கைம் பெண்ணின் காணிக்கையே பெரியது என்று கிறிஸ்துவே பாராட்டுகிறார்”.
“தெய்வீகப் பிச்சைக்காரன்” என்ற தலைப்பில் வங்கக் கவி தாகூர் ஒரு கவிதை எழுதியுள்ளார். அக்கவிதையில் அவர் கூறுவது: ஓர் அரசர் மாறுவேடத்தில் ஓர் ஊருக்குச் சென்று அங்கு ஒரு பாத்திரம் நிறைய கோதுமை மணிகளை வைத்திருந்த ஒரு பிச்சைக்காரனிடம் பிச்சைக் கேட்டார். அவனோ ஒரே ஒரு கோதுமை மணியை மட்டும் கொடுத்தான்.
அரசர் அவனுடைய பிச்சைப் பாத்திரத்தில் ஒரு கோதுமை மணி அளவு தங்கம் போட்டுவிட்டு மாயமாக மறைந்துவிட்டார். ஒரு கோதுமை மணி அளவு தங்கத்தைப் பார்த்த அப் பிச்சைக்காரன் தன்னை நொந்துகொண்டு, “நான் எல்லாக் கோதுமை மணிகளையும் கொடுத்திருந்தால், பாத்திரம் நிறைய தங்கம் கிடைத்திருக்குமே” என்று சொல்லி தனது கஞ்சத் தனத்தை எண்ணிக். கண்ணீர் விட்டான்.
கடந்த ஞாயிறு முதல் வாசகமும் நற்செய்தியும் தாராள உள்ளம் கொண்ட இரு கைம்பெண்களைப் பற்றிக் கூறுகிறது. பழைய ஏற்பாட்டில் கைம்பெண்களுக்குச் சொத்துரிமை இல்லை. மற்றவர்களால் அவர்கள் ஒடுக்கப்பட்டனர். இந்நிலையில் அவர்கள் கடவுளை மட்டும் நம்பி வாழ்ந்த இறைவனின் ஏழைகள்’ என்று அழைக்கப்பட்ட ‘அனாவிம்’ வர்க்கத்தைச் சேர்ந்தவர்களாக விளங்கினர். கடவுள் கைம்பெண்களைச் சிறப்பாக ஆதரிப்பதாக பதிலுரைப்பாடல் கூறுகிறது: “ஆண்டவர் அனாதைப் பிள்ளைகளையும் கைம்பெண்களையும் ஆதரிக்கின்றார்” (திபா 146:9).
ஞாயிறு முதல் வாசகத்தில் வருகின்ற சரிபாத்து கைம்பெண் பஞ்சகாலத்தில் இறைவாக்கினர் எலியாவுக்குக் குடிக்கத் தண்ணீரும், சாப்பிட அப்பமும் கொடுக்கிறார். தன்னைப் பற்றியோ தனது மகனைப்பற்றியோ அவர் கவலைப்படவில்லை.கடவுள் அவரை அபரிமிதமாக ஆசிர்வதிக்கிறார். பஞ்ச காலம் முடியும்வரை அவர் பானையில் மாவும் குறையவில்லை; கலயத்தில் எண்ணெயும் குறையவில்லை
“அனாதைகளைப்பற்றிக் கவலைப்படாதே, நான் அவர்களை வாழவைப்பேன் உன் விதவைகள் என்னில் நம்பிக்கை வைக்கட்டும்” (எரே 49:11) என்று கடவுள் எரேமியா வாயிலாகக் கூறியது சரிபாத் கைம்பெண் வாழ்வில் நிறைவேறியது.
நற்செய்தியில் வருகின்ற ஏழைக் கைம்பெண் தன்னிடமிருந்த இரண்டு செப்புக்காககளை உண்டியலில் போட்டுவிடுகிறார், எல்லாருடைய காணிக்கைகளிலும் கைம் பெண்ணின் காணிக்கையே பெரியது என்று கிறிஸ்துவே பாராட்டுகிறார்.
ஏனெனில் மற்றவர்கள் தங்களிடம் உபரியாக இருந்ததைக் காணிக்கையாகக் கொடுத்தனர். ஆனால் ஏழைக் கைம்பெண் அவரது வாழ்வாதாரம் அனைத்தையும் காணிக்கையாகச் செலுத்திவிட்டார். அவர் நாளையைப் பற்றிக் கவலைப்படவில்லை. நாளையைப் பற்றிக் கவலைப்பட வேண்டாம், “நாளையக் கவலையைப் போக்க நாளை வழிபிறக்கும்” (மத் 6:34) என்ற ஆண்டவரின் அருள் வாக்கைக் கடைப்பிடித்தார்.
அருளாளர் அன்னை தெரசாவிடம், “உங்கள் சபைக்கு என்ன பாதுகாப்பு இருக்கிறது?” என்று கேட்டதற்கு, “கடவுள்தான் என்னுடைய பாதுகாப்பு” என்றார், அவருடைய சபையின் எதிர்காலம் பற்றிக் கேட்டதற்கு, “இது என்னுடைய வேலையாக இருப்பின் அழிந்துவிடும், கடவுளின் வேலையாக இருப்பின் எனக்குப் பிறகும் என் சபை நீடிக்கும்” என்றார், இறை பராமரிப்பில் அவர் முழுக்க முழுக்க நம்பிக்கை வைத்திருந்தார்.
ஒளவையார், அங்கவை, சங்கவை என்ற இரு பெண் குழந்தைகளை வளர்க்க ஒரு வெள்ளாடு தேவைப்பட்டது. அதற்காகச் சேர மன்னனிடம் சென்று பால் கொடுக்கும் ஒரு வெள்ளாடு கேட்டார். அரசரோ பொன் வெள்ளாடு கொடுக்க ஒளவையார் அரசரிடம்: *பொன் வெள்ளாடு பால் கொடுக்காதே” என்றார். அரசரும் அவரிடம், “பால் கொடுக்கும் வெள்ளாட்டை உங்கள் வீட்டுக்கு அனுப்பிவிட்டேன் என்றார். பிச்சைக் கேட்பவர் எதையும் பெற்றுக்கொள்வர்; ஆனால் பிச்சைக் கொடுப்பவரோ தனது தகுதிக்கேற்ப பிச்சையிட வேண்டும்” என்றார். ஒளவையார் அரசரின் வள்ளல் தன்மை வியந்து பாடினார்.
நாம் எவ்வளவு குறைவாக உண்டியலில் காசு போட்டாலும் உண்டியல் அதை ஏற்றுக்கொள்ளும், ஆனால் நாம் நமது தகுதிக்கேற்ப காணிக்கை கொடுக்க வேண்டாமா?
கைம்பெண்கள் சமுதாயத்தில் மதிக்கப்படுவதில்லை, அவர்கள் சுமங்கலிகள் அல்ல. நல்ல காரியங்களை முன்நின்று நடத்தக்கூடாது. இத்தகைய பிற்போக்கான சிந்தனைகளுக்கு இந்த அருள்வாக்கு வழிபாடு சவுக்கடி கொடுக்கிறது. தாராள உள்ளம் கொண்ட இரண்டு கைம்பெண்கள் நமக்கு கொடுத்துக்காட்டாக நிறுத்தப்படுகின்றனர், அவர்களைப் பின்பற்றிக் கடவுளுக்கும் பிறர்க்கும் தாராளமாகக் கொடுப்போம். கடவுள் நம்மை இம்மை, மறுமை நலன்களால் நிரப்புவார்.
மனிதர்கள் மக்களின் வெளிச் செயல்களைக் கொண்டே அவர்களை எடை போடுவர். நமது எண்ணங்களையும் நோக்கங்களையும் அவர்கள் அறியார். ஆனால் உள்ளத்தை ஊடுருவி அறியும் இறைவனோ அனைத்தையும் உள்ளது உள்ளவாறே மதிப்பிடுகிறார்.
மக்கள்முன் மதிப்புள்ளதாக எண்ணப்படும் செயல்கள் இறைவன் முன் செல்லாக் காசுகளாகி விடுவதும் உண்டு. எனவே செப ஆடை அணிவது, முதலிருக்கையில் அமர்வது உண்டு. எனவே செப ஆடை அணிவது, முதலிருக்கையில் அமர்வது, பொது இடங்களில் வணக்கம் பெறுவது போன்ற செயல்களால் ஒருவன் புனிதனாகி விடுவதில்லை. பரிசேயர்களும் மறைநூல் அறிஞரும் பக்திமான்கள் போல் நடித்துக்கொண்டு கைம்பெண்ணின் உடைமைகளை விழுங்குகிறார்கள். இத்தகையோருக்கு அன்றே விடுதலைப் பயணம் எச்சரிக்கை விடுத்தது: “அந்நியனைத் துன்புறுத்தவும் வதைக்கவும் வேண்டாம். நீங்களும் எகிப்திய நாட்டில் அந்நியராய் இருந்தீர்கள் அல்லவா? விதவைகளுக்கும் “திக்கற்ற பிள்ளைகளுக்கும் அநீதி செய்தீர்களாயின், அவர்கள் நம்மை நோக்கிக் கூப்பிட, நாம் அவர்களுடைய கூக்குரலைக் கேட்டு கோபம் மூண்டவராய், வாளினால் உங்களைக் கொல்வோமாதலால், உங்கள் பெண்களும் விதவை ஆவார்கள் 22 : 21- 22). சமயத்தின் போர்வையில், பக்தர்கள் வேடத்தில் நடத்தப்படும் பல்வேறு பாவங்களின் எதிரொலியை இங்கு காணலாம். ஏமாறவும் வேண்டாம்; ஏமாற்றவும் வேண்டாம்.
மற்றவர்கள் பார்க்க வேண்டுமென்றோ பாராட்ட வேண்டுமென்றோ, ஏற்றுக் கொள்ள வேண்டுமென்றோ அல்ல. ஆண்டவர் மட்டும் தன்னைப் பார்த்தால் போதும் என்று செயல்பட்டவள் அந்த எருசலேம் நகர்க் கைம்பெண். பலரும் ஆதாயத்தைத் தேடிக் காணிக்கை போட்டார்கள். இவளோ தன் ஆதாரத்தையே காணிக்கையாக்கினாள் என்ற இயேசுவின் பார்வையில் எப்படி உயர்ந்து நிற்கிறாள். தன் பிழைப்புக்கான அந்த இரண்டு செப்புக் காசுகளையுமே காணிக்கைப் பெட்டியில் போட்ட அவளது மனநிலை என்ன?
அமுக்கிக் குலுக்கிக் கொடுப்பார் என்ற எதிர்நோக்கா அவளைக் கொடுக்க வைத்தது? பழைய ஏற்பாட்டில் பத்தில் ஒரு பகுதி (தசம் பாகம்) எதிர்பார்க்கப்பட்டது. இரண்டு செப்புக்காசுகளில் ஒன்றைக் கொடுத்திருந்தால் கூட, அது இரண்டில் ஒரு பகுதி ஐம்பது வீதம். வருமானத்தில் பாதியாகும். ஆனால் அவளது காணிக்கை முழுமையானது.
அனைத்தையும் விண்ணரசின் பொருட்டுத் துறந்துவிடும் ஓர் உத்தமசீடனை விதவைப் பெண்களின் வடிவில் பார்க்கிறோம். ஆண்டவனுக்குக் கொடுப்பது நமது நன்றியுணர்வின் வெளிப்பாடு. மீண்டும் இறைவன் நமக்குக் கொடுப்பார் என்ற நம்பிக்கையின் வெளிப்பாடு என்பதுதானே! –
அருட்பணி வை. இருதயராஜ்