இந்தியாவின் மூன்று மறைமாவட்டங்களான தமிழ்நாட்டின் வேலூர், மும்பையின் வசை, கல்கத்தாவின் பெக்டொக்ரா ஆகியவற்றுக்குப் புதிய ஆயர்களையும் ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்கு இணை உதவி ஆயரையும் திருத்தந்தை பிரான்சிஸ் நியமித்துள்ளார்
தமிழ்நாட்டின் வேலூர் மறைமாவட்ட புதிய ஆயராக அருள்முனைவர் அம்புரோஸ் பிச்சைமுத்து அவர்களையும் மும்பையின் வசை மறைமாவட்ட புதிய ஆயராக அருட்தந்தை தோமஸ் டி சொவ்ஸா அவர்களையும், கல்கத்தாவின் பெக்டொக்ரா மறைமாவட்ட ஆயராக ஆயர் போல் சிமிக் அவர்களையும் ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்டத்திற்கு இணை உதவி ஆயராக அருள்தந்தை அந்தனி தாஸ் பிள்ளை அவர்களையும் கடந்த நவம்பர் 9 சனிக்கிழமையன்று திருத்தந்தை நியமித்துள்ளார்.
வசை மறைமாவட்ட புதிய ஆயர்
பேரருட்திரு தோமஸ் டி சொவ்ஸா அவர்கள் 1970 ஆம் ஆண்டு மார்ச் 23 அன்று வசை மறைமாவட்டத்தில் உள்ள சுல்னேயில் பிறந்தவர்.
புனித பத்தாம் பயஸ் கல்லூரியில் தத்துவயியல் மற்றும் இறையியல் பயின்ற இவர் 1998ஆம் ஆண்டு ஏப்ரல் 18 அன்று குருத்துவ அருட்பொழிவு பெற்றார்.
சென்னைப் பல்கலைக்கழகத்தில் தத்துவம், சமயம் போன்றவற்றில் முதுகலைப் பட்டம் பெற்ற இவர் தற்போது நந்தக்காலில் உள்ள தூய ஆவியார் ஆலயத்தின் பங்குத்தந்தையாகப் பணியாற்றிக் கொண்டிருக்கின்றார்.
கல்கத்தாவின் பெக்டொக்ரா மறைமாவட்ட ஆயர் 1963ஆம் ஆண்டு ஆகஸ்ட் 7 அன்று டார்ஜிலிங் மறைமாவட்டத்தில் உள்ள Gitdubling என்னுமிடத்தில் பிறந்த பேரருட்திரு போல் சிமிக் அவர்கள் உரோமில் உள்ள உர்பானியானோ திருப்பீடப் பல்கலைக்கழகத்தில் விவிலிய இறையியலில் முனைவர் பட்டம் பெற்றார்.
2014 ஏப்ரல் 25 அன்று மாதுர்பாவின் பட்டம் சார் ஆயராகவும் நேபாளின் அப்போஸ்தலிக்க நிர்வாகியாக நியமிக்கப்பட்ட இவர் 2014 ஜூன் 29 அன்று ஆயராக அருட்பொழிவு பெற்றார்.
ஆந்திராவின் நெல்லூர் மறைமாவட்ட இணை உதவி ஆயர் 1973 ஆகஸ்ட் 24 அன்று ஆந்திராவின் டொனகொண்டா பகுதியில் பிறந்த அருட்தந்தை அந்தனி தாஸ் பிள்ளை அவர்கள் நெல்லூரில் உள்ள புனித ஜோன்ஸ் இளம் குருமடத்தில் பயின்ற பிறகு, விசாகப்பட்டினத்தில் உள்ள புனித ஜோன்ஸ் குருத்துவக் கல்லூரியில் தத்துவயியல் மற்றும் ஹைதராபாத்தில் உள்ள புனித ஜோன்ஸ் குருத்துவக் கல்லூரியில் இறையியல் கற்றார்.
2000 ஆம் ஆண்டு ஏப்ரல் 24 அன்று நெல்லூர் மறைமாவட்ட குருவாக அருட்பொழிவு பெற்ற இவர், தற்போது ஹைதராபாத்தில் உள்ள புனித ஜோன்ஸ் குருத்துவக் கல்லூரியில் இயக்குநராகவும் பேராசிரியராகவும் பணியாற்றி வருகின்றார்.
-மெரினா ராஜ்