Sunday, November 24, 2024
Home » புனித வின்சென்ட் டி பவுல் சபையினர்
ஏழைகள், அனாதைகள் நல்வாழ்வுக்காக அர்ப்பணித்துள்ள

புனித வின்சென்ட் டி பவுல் சபையினர்

by Gayan Abeykoon
November 12, 2024 3:30 am 0 comment

புனித வின்சென்ட் டி பவுல் பிரான்ஸ் நாட்டில்  காஸ்கனி என்ற கிராமத்தில் 1581 ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 24 ஆம் தேதி பிறந்தார். இவரது பெற்றோர் ஒரு சிறிய நிலத்தில் பயிரிட்டு அன்றாட வாழ்வை நடத்தி வந்தனர்.

பிரான்சிஸ்கன் குருக்களிடம் இவர் கல்வி பயின்று தேர்ச்சி பெற்றார். ஒரு பணக்காரர் தன் பிள்ளைகளுக்குக் கல்வி கற்பிக்க இவரைத் தேர்ந்தெடுத்தார். கல்வி கற்பித்துக் கொண்டு அதில் வரும் வருவாயை வைத்து பவுல் உயர் கல்வி பயின்றார்.

19வது வயதில் குருவாகத் திருநிலைப்படுத்தப் பட்டார். இவர் 1605 ஆம் ஆண்டு மார்சீல்ஸ் எனும் நகருக்கு கப்பலில் புறப்பட்டார். அப்போது கப்பல் துருக்கிய கடல் கொள்ளைக்காரர்களால் தாக்கப் பட்டு, கப்பலில் இருந்தவர்கள் வட ஆபிரிக்காவிற்குக் கூட்டிச் செல்லப்பட்டனர். வின்சென்ட் டி பவுலும் அடிமையாக விற்கப்பட்டு, தூனிஸ் நகரில் இரண்டு ஆண்டுகள் அடிமை வாழ்வு நடத்தினார்.

தனக்கு ஏற்பட்ட கொடுமைகளையும் துன்பங் களையும் கடவுளுக்காக பொறுமையோடு அனுபவித்து வந்தார். மரியன்னையின் புகழ் பாடி செபித்தும் வந்தார்.

இவரை அடிமையாகக் கொண்ட தலைவன் கொள்ளையருக்குப் பயந்து கிறிஸ்தவ மதத்தை விட்டு விலகி முஸ்லிம் ஆனான். பிறரை காந்தமாக இழுக்கும் வின்சென்டின் ஆன்மீகச் சக்தியால் அந்தத் தலைவன் மீண்டும் மனம் திரும்பினான். வின்சென்ட் அடிமைத்தனத்தினின்று விடுபட்டு பிரான்ஸ் நாட்டிற்குத் திரும்ப அத் தலைவனே உதவி செய்தான்.

வின்சென்ட் டி பவுல் 1625 ஆம் ஆண்டு ஒரு புது சபையை நிறுவினார். இந்த வேதபோதக சபையின் குருக்கள் ‘வின்சென்டியார்கள்’ என அழைக்கப்படுகின்றனர்.

இவருடைய சபைத் துறவிகள் ஏழைகள், அனாதைகளின் பராமரிப்புக்காகவே தங்களை அர்ப்பணிக்க வேண்டுமென்று சபை ஒழுங்குகளை அமைத்தார்.

புனித வின்சென்ட் டி பவுல் ஏழைகளுக்கு உதவி செய்யும்படி பணக் காரப் பெண்களிடம் சமூக உணர்வைத் தூண்டினார். அவர்கள் தந்த பெருந்தொகையைக் கொண்டு மருத்துவமனையை நடத்தினார். வீடின்றி இருந்த ஆயிரமாயிரம் மக்களுக்கு பாதுகாப்பு இடம் கொடுத்தார்.

பைத்தியக்காரர்களுக்கும், தொழுநோயாளர் களுக்கும் மருத்துவமனைகள் அமைத்தார். இவ் வாறாக புனித வின்சென்ட் டி பவுல் சபையினர் செய்து வரும் தொண்டுகளை நாம் இன்றும் பார்க்கலாம். 1660 ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27 ஆம் நாள் வின்சென்ட் தன் ஆன்மாவை கடவுளின் கரங்களில் ஒப்படைத்தார்.

“ஏழைகளை நேசித்திருப்பவர்கள் அச்சமின்றி சாவை எதிர்நோக்கலாம். பொறாமையைத் தவிர்க்க விழிப்பாய் இருங்கள். ஏனெனில் அது சகோதர அன்பை அழிக்கத் தேடுகிறது” என்று புனித வின்சென்ட் டி பவுல்  கூறியுள்ளமை எமக்கும் சிறந்த பாடம்.

-சகோதரர் சந்தியாகு

 

 

மேலும் செய்திகள்...

Leave a Comment

இலங்கையின் மிகவும் நம்பகமான மற்றும் புதுமையான ஊடக சேவை வழங்குநர்

Facebook

@2024 – All Right Reserved. Designed and Developed by Lakehouse IT