எமது பொருளாதாரம், பண்பாடு மற்றும் அடையாளத்தை இழந்து, இறுதியாக எமது இருப்பையே இழந்துவிடும் விளிம்பை நோக்கி நாம் பயணித்துக் கொண்டிருப்பதாகவும், இந்தச் சவாலை நாம் எவ்வாறு எதிர்கொள்ளப் போகின்றோம் என தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவரும் மட்டு. மாவட்ட முதன்மை பாராளுமன்ற வேட்பாளருமான அருண்மொழிவர்மன் தம்பிமுத்து கேள்வியெழுப்பியுள்ளார்.
நேற்று (11) திங்கட்கிழமை அறிக்கையொன்றினூடாக அவர் இதனை குறிப்பிட்டுள்ளார். அந்த அறிக்கையில், மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது, தமிழருக்கான அரசியல் அதிகாரம் உறுதி செய்யப்படுவதனூடாகவே, பேராபத்திலிருந்து நாம் எமது மட்டக்களப்பை காப்பாற்ற முடியும்.
மாவட்டத்தின் சிக்கலான சமூகப் புறநிலையில் தமிழர்களுக்கு ஒரு செழிப்பான பொருளாதார அபிவிருத்தி கூட, மதிநுட்பம் மிக்க ஓர் அரசியல் தந்திர அணுகுமுறை ஊடாகவே அடையப்பட முடியும். அத்தகைய தூரநோக்கு கொண்ட ஓர் அரசியல் அணுகுமுறையை சூட்சுமமாகக் கையாண்டு எனது மாவட்டத்தில், எனது மக்களின் இருப்பைப் பாதுகாக்க என்னால் முடியும் என்று நான் திடமாக நம்புகின்றேன்.
தமிழ் தேசிய இனத்தின் ஒட்டுமொத்தமான இறையாண்மைப் பிரச்சினைக்கு ஓர் அணுகுமுறையும் மட்டக்களப்பு மக்கள் எதிர்கொண்டிருக்கும் உள்ளகப் பிரச்சினைக்கு இன்னொரு அணுகுமுறையுமாக நாங்கள் இரண்டு தளங்களில் இருவேறு வழிமுறைகளில் சாதுரியத்துடன் பணியாற்ற வேண்டியுள்ளது என அவர் தெரிவித்துள்ளார்.