எதிர்வரும் 14ஆம் திகதி நடைபெறவுள்ள பாராளுமன்றத் தேர்தலில் ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன கட்சிக்கு பேருவளை தொகுதி மக்கள் அமோக வெற்றியை பெற்றுத்தர வேண்டுமென முன்னாள் பாராளுமன்ற உறுப்பினரும் தேசிய பட்டியல் வேட்பாளருமான மர்ஜான் பளீல் தெரிவித்தார்.
பேருவளை தொகுதியில் பொதுஜன பெரமுன கட்சி சார்பில் போட்டியிடும் வேட்பாளர்களை ஆதரித்து நேற்று (11) பெரேரா வீதியிலுள்ள கட்சி அலுவலகத்தில் நடைபெற்ற கூட்டத்திலேயே மர்ஜான் பளீல் மேற்கண்டவாறு தெரிவித்தார்.
தொடர்ந்து உரையாற்றிய அவர், பேருவளை தொகுதியின் அபரிமிதமான இன்றைய அபிவிருத்தி முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷவின் விசேட வேண்டுகோளின்பேரில் மேற்கொள்ளப்பட்டதென்றால் அது மிகையாகாது. நான் பாராளுமன்ற உறுப்பினராக இருந்தபோது, பேருவளை நகர சபை பிரதேசத்திற்குட்பட்ட வீதிகளை முழுமையாக காபட் இட்டு அபிவிருத்தி செய்த யுகத்தை எமது மக்கள் ஒருபோதும் மறந்து விட மாட்டார்கள். அதேபோல், தர்கா நகர் பகுதிகளிலும் மக்கள் வாழ்கின்ற முக்கிய வீதிகளுக்கும் எனது பாராளுமன்ற காலத்தில் நிதியுதவியை பெற்றுக்கொடுத்து வீதிகளை காபட் இட்டேன். இதற்கு முன்னரும் பேருவளை தொகுதியில் பாராளுமன்ற உறுப்பினர்கள், மாகாண சபை உறுப்பினர்கள் உட்பட அமைச்சர்களும் இருந்தபோதும் எவரும் பிரதேச அபிவிருத்திகள் தொடர்பில் கவனம் செலுத்த வில்லையென்றும் அவர் மேலும் தெரிவித்தார்.